அமைச்சரின் குடும்ப ஜவுளிக்கடை பேனருக்கு மட்டும் விதிவிலக்கா?- மதுரை மாநகராட்சியின் பாரபட்ச நடவடிக்கையால் சர்ச்சை
மதுரை
சென்னை இளம்பெண் சுபஸ்ரீ மரணத்திற்கு பிறகு, மதுரையில் பிளக்ஸ் பேனர்களை முழுவதுமாக அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள், மாட்டுத்தாவணி பஸ்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குடும்ப ஜவுளிக்கடை பேனர் மட்டும் அகற்றாமல் விட்டுச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் சென்னையைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ சாலையில் சென்றபோது பிளக்ஸ் பேனர் ஒன்று அவர் மீது விழுந்து லாரி மோதி உயிரிழந்தார். இதைதொடர்ந்து, தமிழகம் முழுவதும் பிளக்ஸ் பேனர் தொழிலே நலிவடையும் அளவிற்கு பிளக்ஸ் பேனர்கள் வைக்க விதிமுறைகள், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.
பஸ்நிலையங்கள், சாலைகள், கோயில்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட பொதுவெளிகளில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் போலீஸார் பாதுகாப்புடன் சென்று அப்புறப்படுத்தினர்.
மேலும், நிரந்தரமாக வைக்க முடியாதப்படி அந்த பிளக்ஸ் பேனர் வைக்க பயன்படுத்திய இரும்பு கம்பிகளையும் அப்புறப்படுத்தினர்.
மதுரையில் மற்ற நகரங்களைக் காட்டிலும் ‘பிளக்ஸ் பேனர்’ கலாச்சாரம் கொடிக்கட்டி பறக்கும். அரசியல்கட்சியினர், வணிக நிறுவனத்தினர் போட்டிப்போட்டுக் கொண்டு போக்குவரத்திற்கு இடையூறாக ஊர் முழுக்க சாலையோரங்கள், பஸ்நிலையங்கள், மேம்பாலங்கள் மற்றும் கல்விக்கூடங்கள் அருகே என்று பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைத்து இருப்பார்கள்.
சுபஸ்ரீ மரணத்திற்கு பிறகு அந்த பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக அகற்றப்பட்டன. அதனால், மதுரையில் பிளக்ஸ் பேனர் தயாரிப்பு உரிமையாளர்கள் ஆட்சியரிடம் நேரடியாக சென்று புகார் செய்தனர்.
ஆனால், மதுரை மாட்டுத்தாவணியில் வைக்கப்பட்டிருந்த அனைத்து வணிக ரீதியான பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டிருந்த நிலையில் உள்ளூர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குடும்ப ஜவுளிக்கடை விளம்பர பிளக்ஸ் பேனர் மட்டும் தற்போது வரை அகற்றப்படாமல் கம்பீரமாக உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள், பஸ்நிலையத்தில் இந்த ஒரு பிளக்ஸ் பேனரை மட்டும் அகற்றாமல் மற்ற பேனர்களை அகற்றி தங்கள் கடமையை நிறைவேற்றினர். ஊரில் உள்ள அனைவருக்கும் ஒரு நியாயம், அமைச்சருக்கு மட்டும் மற்றொரு நியாயமா? என்று பஸ்நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து மாநகராட்சி வருவாய்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மாநகராட்சியில் வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்கு குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டிருந்தது. அதனால், குறிப்பிட்ட அந்த ஜவுளிக்கடை பிளக்ஸ் பேனர் வைக்க ஏற்கெனவே மாநகராட்சி அனுமதி பெற்றே வைக்கப்பட்டுள்ளது, ’’ என்றார்.
