

கடந்த செவ்வாய்க்கிழமை. மழை மாலை. இதமான தேநீருடன் அந்த இளம் ஓவியனைச் சந்தித்தேன். பார்ப்பவர்களைப் பேச வைக்கும் அழகான மெளனம்தான் ஓவியம். தமிழ் இலக்கிய உலகத்தில் தனது கோடுகளால் புகழ்பெற்று வருபவர் ஓவியர் பச்சமுத்து தில்லைக்கண்ணு. இன்றைக்கு தமிழில் பெரும்புகழுடன் வாழ்ந்து மறைந்தவர்கள், வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அனைவரது உருவங்களையும் தனது கோடுகளுக்குள் கொண்டுவந்துவிடுகிறார். நவீன கவிஞர், மரபுக் கவிஞர், புகழ்பெற்றவர், புகழ்பெறாதவர் என்கிற பேதங்களை வைத்துக்கொள்ளாமல் தமிழில் எழுதும் எல்லோரையும் தனது சித்திரச் சிறைக்குள் அடக்க முயற்சிக்கும் விரல்கள் பச்சமுத்துவுடையது.
திருவள்ளுவர் தொடங்கி நாளையும் நாளை மறுநாளையும் எழுதப்போகிற ஓர் இளைஞன் வரை அனைவரது உருவத்தையும் வரைய வேண்டும் என்பதுதான் அடங்காத ஆசை என்று சொல்லும் பச்சமுத்து, குடந்தை ஓவியக் கல்லூரியில் ஓவிய மேதை சந்ருவிடம் ஓவியக் கலையைக் கற்றவர்.
’’நான் ஓவியர் சந்ருவின் மாணவன் என்று சொல்லி இந்த உலகுக்கு என்னை நான் அறிமுகம் செய்துகொள்வதில் எனக்கொரு ஆனந்த கர்வமும் கம்பீரமும் உண்டு’’என்று பெருமை படரப் பேசுகிறார் பச்சமுத்து.
அரியலூர் மாவட்டத்தில் - இரும்புலிகுறிச்சிதான் இவருக்கு சொந்த ஊர். தில்லைக்கண்ணு என்கிற தந்தையின் பெயரை தனது பெயரோடு ஒட்டிக்கொள்வதில் இந்த 38 வயதுக்காரரின் பாசப்பாசனம் பளீரெனத் தெரிகிறது. பச்சமுத்துவுக்கு மணிமணியாக இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். மூத்தவருக்கு - அறநெறியன் என்றும், அடுத்தவருக்கு அறிவமுதன் என்றும் தமிழ்ப் பெயர் சூட்டியுள்ளார் இந்த ஓவியக் காவியன்.
2010-ல் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது, அம்மாநாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ’செம்மொழி மாநாட்டு மலர்’ ஒன்று தயாரானது. பிரம்மாண்டமாக தயாரான அம்மலரின் பக்கத்துப் பக்கம் இடம்பெற்று, அனைத்துத் தமிழர்களின் பாராட்டையும் பெற்ற ‘கால்டுவெல் முதல் கலைஞர் வரை’ எனும் கருப்பொருளில் அமைந்த - 100 தமிழறிஞர்களின் உருவ ஓவியங்களை வரைந்தார் பச்சமுத்து. இதற்கு இவரும் இவரது தூரிகையும் விடிய விடிய உழைத்த உழைப்பு உன்னதமானது.
தனக்குப் பிடித்தமானவர்களைச் சந்திக்கின்றபோது அவர்களது உருவத்தை வரைந்து அன்பளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தனது லைன் டிராயிங் எனும் கோட்டு சித்திர வகைமை ஓவியங்களுக்காக தேசிய அளவில் பரிசுகள் பெற்றிருக்கிற இவர், ‘’‘குறைவான கோடுக்குள் நிறைவான ஓவியத்தை என்றைக்கு உன்னால் வரைய முடிகிறதோ அன்றைக்குத்தான் நீ முழுமையான ஓவியன். அதுவரையில் நீ பயிற்சியாளன் மட்டுமே’ என்கிற ஓவியர் சந்ருவின் தத்துவ மரபை பின்பற்றித்தான் என் எல்லா ஓவியங்களையும் வரைந்து வருகிறேன்’’ என்கிற பச்சமுத்துவிடம் ’’நீங்கள் வரைந்த ஓவியங்களில் உங்களால் மறக்கமுடியாத, நினைக்கும்தோறும் நெஞ்சில் சந்தோஷம் கூடுகட்டும் தருணத்தை சொல்லுங்கள்.. ஓவியரே’’ என்றேன்.
’’2008-ம் ஆண்டு. நவம்பர் மாத சந்தோஷ சாயங்காலம் அது. ‘பச்சமுத்து... கையை எடுக்காமல் ஒரே ஸ்ட்ரோக்கில் வரைய வேண்டும். அதுவும் என்னை வரைய வேண்டும். உன்னால் முடியுமா...’ என்று தமிழகத்தின் மிக மிக முக்கியமான தலைவர் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே சவால் வலையை வீசினார். அப்போதே... அந்த நொடியே வரைந்தேன். அதை வாங்கிப் பார்த்த அந்தத் தலைவர் நெகிழ்ந்துபோய்விட்டார். அவர் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். அவரை என் கோடுகளுக்குள் கொண்டுவந்து குந்த வைத்த அந்த நொடிப்பொழுதை இன்றைக்கும் நான் பொக்கிஷ வேளையாகக் கருதுகிறேன்’’என்கிறார்.
’’உங்கள் எதிர்கால நோக்கம்தான் என்ன ஓவியரே’’என்ற நமது கேள்விக்கு ‘‘சிலபல ஆண்டுகளுக்கு முன்னால் ரஷ்யாவில் ’ரெட் கேன்வாஷ்’ எனும் கருப்பொருளில் புரட்சிகர ஓவிய வகைமை உருவானது. உலகம் முழுவதும் சமூக சீர்திருத்தத்தையும், சமூக நீதியையும் விரும்புகிற அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்த கருப்பொருள் அது. அதைப் போலவே நமது இந்தியாவில் ’நீல கேன்வாஷ்’ எனும் புரட்சிகர ஓவிய வகைமையை எனது கோடுகளால் உருவாக்க வேண்டும். அப்ஸ்ட்ராக்ட் ஓவியம் மூலம் சமூக நீதிக்கான எனது பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்’’என்றார்.
‘கற்பி’ திரைக்களம்
தற்போது ‘கற்பி’ திரைக்களம் என்கிற படைப்புருவாக்க அமைப்பை கவிஞர் முத்துவேலுவுடன் இணைந்து உருவாக்கியுள்ளார் பச்சமுத்து. இந்த அமைப்பின் மூலம் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனைக் கவுரவிக்கும் விதமாக மாபெரும் விழா ஒன்றினை விரைவில் நடத்தவுள்ளார். இதற்கான மலர் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
ஓவியர் என்றால் திரைத்துறையின் மீது ஆர்வம் இல்லாமல் இருக்குமா... தன்னுடைய காதல் துறை என்றால் அது திரைப்படத் துறைதான். தமிழ் சினிமாவில் எல்லோராலும் பேசப்படுகிற வகையில் மிக முக்கியமான படத்தை இயக்க வேண்டும் என்பதுதான் எனது காதல்’’ என்கிற இத்தூரிகைத் தோழனின் கனவு வெற்றி பெறட்டும்.
சந்திப்பு: மானா பாஸ்கரன்