Published : 26 Oct 2019 03:12 PM
Last Updated : 26 Oct 2019 03:12 PM

பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க திவ்யா சத்யராஜ் கூறும் 10 வழிமுறைகள்

தீபாவளி என்றால் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுதான். அந்தப் பட்டாசை பாதுகாப்பாக வெடித்தால், நேரங்காலம் பார்த்து வெடித்தால் எல்லோருக்குமே இன்பம் பொங்கும் நாளாக தீபாவளி இருக்கும் என்கிறார் பிரபல திரைப்பட நடிகரின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ்.

பட்டாசு வெடிப்பது தொடர்பாக அரசாங்கமும் பல்வேறு விழிபுணர்வுப் பிரச்சாரங்களைச் செய்து வருகிறது. இருப்பினும், தீபாவளியையொட்டி ஏதேனும் ஒரு பிரபலம் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்ற முயற்சியில் 'இந்து தமிழ்' இணையதளத்துக்காக திவ்யா சத்யராஜை அணுகினோம்.

'இந்து தமிழ்’ வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துடன் பேச ஆரம்பித்தார்.

தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. அன்று ஒருநாள் தான் அனைவரும் குடும்பத்துடன் கூடி வீடுகளில் பட்டாசு வெடிக்கின்றனர். மற்றபடி ஏதேனும் கோயில் திருவிழா, திருமண நிகழ்வு என்றால் வெடிக்கின்றனர். அதனால் நான் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று சொல்லமாட்டேன். ஆனால், பட்டாசு வெடிப்பதில் கவனமும் கொஞ்சம் கனிவும் தேவை. கனிவு என்று நான் சொல்வது முதியவர்கள், செல்லப் பிராணிகள், சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு அளவோடு வெடிப்பது.

நீங்கள் எந்த அளவில் பட்டாசு வெடிப்பீர்கள்?

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் பட்டாசு வெடிப்பதில்லை. அது தனிப்பட்ட காரணம். காற்று மாசு, ஒலி மாசு, குழந்தைத் தொழிலாளர்கள் பயன்பாடு காரணமாக நான் பட்டாசு வெடிப்பதில்லை.

சில வெளிநாடுகளில் எல்லாம் பட்டாசு வெடிக்க ஒரு தேதி, இடம், நேரம் குறித்து வெடிக்கச் செய்கிறார்கள். ஒருவேளை அப்படிச் செய்தால், பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசை ஒரு குறிப்பிட்ட பகுதி எனக் கட்டுப்படுத்தலாம் அல்லவா?

பண்டிகை என்பது குடும்பத்துடன் குதூகலிக்கும் தருணம். அப்படி ஒரு பண்டிகை நாளில் பட்டாசு வெடிப்பதற்காக ஒட்டுமொத்த குடும்பத்தினரும் ஓரிடத்துக்குத் திரண்டு செல்வது நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று. நம் நாட்டு கலாச்சாரத்துடன் ஒத்துப்போகுமா எனத் தெரியவில்லை. திரும்பவும் நான் வலியுறுத்துகிறேன், மகிழ்ச்சிக்கும் ஓர் அளவுகோல் வைத்து குறைந்த அளவு பட்டாசை நாம் நம் வீட்டிலேயே நாள் முழுவதும் அல்லாது குறிப்பிட்ட நேரத்தில் வெடித்துக் கொண்டாடினால் இன்பம் இரட்டிப்பாக இருக்கும்.

பட்டாசு வெடித்தால் அந்தப் புகையில் டெங்கு கொசு அழிந்துவிடும் என்று ஒரு வாட்ஸ் அப் தகவல் வெளியாகியிருக்கிறது. அது பற்றி உங்கள் கருத்து..

பொதுவாக புகைமூட்டத்தில் கொசு பறக்க இயலாது என்பதால் வேப்பங்கொழுந்து, நொச்சி இலை வீட்டின் முன் போட்டு கொளுத்தி சிறிய அளவு புகைமூட்டம் ஏற்படுத்துவதுண்டு. ஆனால், பட்டாசில் இருக்கும் சல்ஃபரால் டெங்கு கொசு அழியும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபணமாகாத ஒன்று. மேலும் அப்படியே இருந்தாலும் கூட ஒரு கெட்டதை அழிக்க இன்னொரு கெட்ட விஷயத்தைக் கையில் எடுப்பது சரியானது அல்ல. டெங்குவை ஒழிக்க நாம் அரசாங்கம் சொல்வதுபோல் வீடு, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்தல், நன்னீரில் வளரும் கொசு என்பதால் அவற்றைப் பாதுகாப்பாக மூடி வைத்தல், டயர், சிரட்டை போன்றவற்றை அப்புறப்படுத்தல் என்றுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்வழியில் செல்வோம்.

சரி, பட்டாசு வெடிப்பதை கவனத்துடன் வெடிக்கலாம் என்றீர்களே அதற்கான டிப்ஸை சொல்லுங்கள்..

1. பட்டாசால் முதலில் சிரமத்துக்கு உள்ளாவது சுவாசக் கோளாறு உள்ளவர்கள்தான். அதனால், தீபாவளி தினத்தன்று அத்தகைய சுவாச அசவுகரியங்கள் உள்ளோர் முகத்தில் ஒரு காட்டன் மாஸ்க் (Cotton Mask) போட்டுக் கொள்ள வேண்டும். வயதானோரும் இதனைப் பயன்படுத்தலாம். ஆஸ்துமா நோயாளிகள் என்றால் அவர்கள் நிச்சயமாக மாஸ்க் அணிய வேண்டும். கூடவே அவர்களின் இன்ஹேலரை ஸ்டாக் வைத்துக் கொள்வது அவசியம். வெளியில் செல்லும்போது பாக்கெட்டில் மறவாமல் இன்ஹேலரை எடுத்துச் செல்ல வேண்டும்.

2. கண்களைப் பாதுகாக்க பட்டாசு வெடிக்கும்போது அனைவருமே ப்ளெய்ன் க்ளாஸ் எனப்படும் சாதாரண பைபர் வெள்ளைக் கண்ணாடி அணியலாம். இதனால், கண்களில் பட்டாசு நெருப்பு, கங்கு தெறிக்காமல் தற்காத்துக் கொள்ளலாம். வெள்ளை நிறக் கண்ணாடி அணிந்தால் இரவிலும்கூட பட்டாசை வெடிக்க ஏதுவாக இருக்கும்.

3. பட்டாசு வெடித்து முடித்தவுடன் கண்களின் குளிர்ந்த நீரைத் தெளித்து கழுவ வேண்டும். ரெஃப்ரெஷ் ( Refresh Eye Drops) என்ற கண்களுக்கு புத்துணர்வு தரும் சொட்டு மருந்தை மருந்துக் கடையில் முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ளவும். இதனை ஒவ்வொரு கண்ணில் தலா 2 சொட்டுகள் விட்டால் புகை மாசு, வெடி மருந்துத் துகள்களால் ஏற்படும் கண் எரிச்சல் ஏற்படாது. கண் மருந்து எனப் பொதுவாகக் கடையில் சிலர் வாங்கலாம். ஆனால், அவை ஆன்ட்டிபயாடிக் வகையறாவாக இருக்கும். அதனால்தான் ரெஃப்ரெஷ் ட்ராப்ஸ் என்று குறிப்பிட்டுச் சொன்னேன்.

4. சிலருக்கு பட்டாசு புகை, மருந்து நெடி, மருந்துத் துகள்களால் அலர்ஜி ஏற்படும். அத்தகைய வேளைகளில் அலர்ஜியின் வீரியத்திற்கு ஏற்ப Allegra 120 mg அல்லது Allegra 180 mg மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையுடன் உட்கொள்ளலாம்.

5. பொதுவாகவே தீபாவளி போன்ற மெகா திருவிழா வேளையில் நாம் அடிக்கடி வெளியே சென்றுவருவது உண்டு. மக்கள் அதிகம் கூடுவதால் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் ஊர்ந்து சென்று பொருட்களை வாங்குவோம். அது ஒரு இன்பமான அனுபவம். அதேவேளையில் தொற்றுநோய்கள் பரவாமல் இருக்க தீபாவளி சமயத்தில் வைட்டமின் சி எனர்ஜி ட்ரிங் 1000 மில்லி எடுத்துக் கொள்ளலாம். அல்லது வைட்டமின் சி 500 மி.கி. மாத்திரையாக 5 நாட்களுக்கு உட்கொள்ளலாம். இதனால் பட்டாசு புகையால் ஏற்படும் சளி, அலர்ஜி தொந்தரவையும் தவிர்க்கலாம்.

6. பட்டாசு வெடித்து முடித்த பின்னர் கை, கால்களைக் கழுவிவிட்டு, கைகளில் ஹாண்ட் சானிட்டைஸர் போட்டு சுத்தம் செய்ய வேண்டும். கைகளில் திரியைக் கிள்ளும்போது வெடிமருந்து ஒட்டியிருக்கும். சாதாரணமாக தண்ணீரில் கழுவினால் மருந்து நீங்கினாலும் நெடி இருக்கும். அதனால் சானிட்டைஸர்களைப் பயன்படுத்துவது நல்லது. ஆனால், சானிட்டைஸர் என்பது கைக்கானது மட்டுமே. அதனை முகத்தில் தடவக்கூடாது.

7. கர்ப்பிணிகள் பட்டாசு வெடிப்பதை சற்று பாதுகாப்பான தொலைவில் நின்று வேடிக்கை பார்ப்பதே நலம். பட்டாசு வெடிக்கும் இடத்திலேயே நின்றால் அதிர்வு குழந்தைக்கு அசவுகரியமாகவும், உடனே கிளம்பும் அடர்புகை சுவாசத்திற்கு இடையூறாகவும் இருக்கும். பட்டாசு மீது ஆர்வமுள்ள கர்ப்பிணிகள் அதிகம் புகை வராத பட்டாசுகளை அல்லது மத்தாப்பு ரகங்களைப் பயன்படுத்தலாம்.

8. பட்டாசு வெடிக்கும்போது சிறியவர், பெரியவர் என அனைவரும் கால்களில் செருப்பு அணிந்து கொள்வது அவசியம். சங்கு சக்கரம் போன்ற வெடிகள் சுற்றிச் சுழன்று காலில் பட வாய்ப்பிருக்கிறது. நாமே அறியாமல் கொளுத்திப் போட்ட கம்பி மத்தாப்பின் மீது கால் வைக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் செருப்பு அணிந்து கொள்ள வேண்டும்.

9. பச்சிளங் குழந்தைகள், கைக்குழந்தைகளை பட்டாசு நெடி நேரடியாகத் தாக்காத வகையில் பாதுகாப்பாக பூட்டிய அறைக்குள்

10. பட்டாசு வெடிக்கும்போது அருகில் ஒரு பக்கெட்டில் தண்ணீரை வைத்துக் கொள்வது நலம்.

இவ்வாறு திவ்யா சத்யராஜ் ஆலோசனை கூறினார்.

திவ்யா சத்யராஜ், உலகின் மிகப் பெரிய மதிய உணவுத் திட்டமான அக்‌ஷய பாத்ராவின் விளம்பரத் தூதுவர். வேர்ல்டு விஷன் அமைப்புடன் இணைந்து கிராமப்புற பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டி: பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x