

மதுரை
தீபாவளிப் பண்டிகை பொருட்கள் கொள்முதல் செய்ய வருவோர் வாகனங்களை நிறுத்த அனுமதிப்பதால் ‘பார்க்கிங்’ வசதியில்லாமல் திருமலைநாயக்கர் அரண்மனைக்கு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை வீழ்ச்சியடைந்துள்ளது.
தொல்லியல்துறையால் பராமரிக்கப்படும் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, தமிழக மரபுச் சின்னங்களில் ஒன்றாக திகழ்கிறது. திருமலைநாயக்கர் கட்டியபோது இருந்த இந்த அரண்மனையில் தற்போது நான்கில் ஒரு பகுதியே எஞ்சியுள்ளது.
தென்னிந்தியாவில் எஞ்சியுள்ள பண்டைய அரண்மனைகளில் மிகவும் எழில் வாய்ந்ததாக திருமலைநாயக்கர் அரண்மனை கருதப்படுகிறது.
இந்த மகாலின் உயரமான தூண்களும், எழிலார்ந்த கலைவேலைப்பாடுகளும் பார்க்கப்பார்க்க பரவசம் ஊட்டுபவை. இந்த அரண்மனைக்கு செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். தினமும் 300 முதல் 500 வெளிநாட்டினர் வந்து பார்வையிட்டு செல்வார்கள்.
உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளைப் பொறுத்தவரையில் மார்ச் முதல் ஜூன் வரை அதிகமாக வருவார்கள். தற்போது இரு சக்கர வாகனங்களை அரண்மனை வளாகத்தில் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மதுரையைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் வருகை முற்றிலும் குறைந்துள்ளது.
திருமலைநாயக்கர் அரண்மனையை சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாப்பயணிகள் வாகனங்களை நிறுத்துவதற்கு அரண்மனை உள்ளே மிகுந்த இடநெருக்கடியில் 20 வாகனங்கள் நிறுத்தக்கூடிய அளவில் சிறிய ‘பார்க்கிங்’ செயல்படுகிறது.
இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால் மதுரைக்கு உள்ளூர் மக்கள் மட்டுமில்லாது திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மற்றும் விருதுநகரை சேர்ந்த மக்கள் அதிகளவு பண்டிகைப்பொருட்கள், புத்தாடைகள் வாங்க மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள வணிக நிறுவனங்களுக்கு வருகின்றனர்.
ஆனால், அவர்கள் அனைவர் வாகனங்களையும் நிறுத்தக்கூடிய அளவிற்கு வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், மற்றும் நகைக்கடைகளில் ‘பார்க்கிங்’ வசதியில்லை. அதனால், சாலையையே ‘பார்க்கிங்’காக பயன்படுத்ததொடங்கியுள்ளனர். தீபாவளிப் பண்டிகை முடியும் வரை போலீஸாரும், இந்த ஒழுங்கற்ற ‘பார்க்கிங்’, போக்குவரத்து நெரிசலை கண்டுகொள்ள மாட்டார்கள்.
இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக, தீபாவளி பொருட்கள் கொள்முதல் செய்ய வருவோர், தங்கள் கார்களை திருமலை நாயக்கர் அரண்மனை வளாகத்தில் உள்ள சிறிய ‘பார்க்கிங்’கில் நிறுத்தத்தொடங்கி உள்ளனர். வெளியாட்கள், வாகனங்களை நிறுத்துவதற்கு ‘பார்க்கிங்’கை டெண்டர் எடுத்தவர்கள் வருமான நோக்கில் அனுமதிப்பதால் திருமலைநாயக்கர் அரண்மனைக்கு வரும் வடமாநிலங்கள், தமிழகத்தின் பிறமாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள், வெளிநாட்டினர் தங்கள் வாகனங்களை நிறுத்த வசதியில்லாமல் திரும்பி செல்லும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது.
அரண்மனை வளாகம் முழுவதும் வரிசையாக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், அரண்மனை சுற்றுலாத்தலமா? அல்லது ‘கார் பார்க்கிங்’கா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலால் திருமலைநாயக்கர் அண்மனைக்கு வருவோர் எண்ணிக்கை மிக குறைந்துள்ளனர். சுற்றுலா சீசன் காலத்தில் 3 ஆயிரம் பேர் தினமும் வந்து செல்வார்கள். தற்போது வெறும் 300 பேர் கூட வருவதில்லை. அதனால், சுற்றுலாப்பயணிகள் வருகையில்லாமல் திருமலைநாயக்கர் அரண்மனை வெறிச்சோடி காணப்படுகிறது.
தொல்லியல்துறை அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘சுற்றலாப்பயணிகள் வருகை குறைந்ததால் ‘பார்க்கிங்’கை டெண்டர் எடுத்தவர்களுக்கு வருவாய் குறைந்தது. அதை ஈடுகட்ட அவர்கள், வெளி வாகனங்களை நிறுத்த அனுமதிக்கின்றனர். டெண்டர்விட்டது மாநகராட்சி என்பதால் அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், ’’ என்றனர்.