Published : 23 Oct 2019 04:03 PM
Last Updated : 23 Oct 2019 04:03 PM

அன்புக்குப் பஞ்சமில்லை! - புதிய தொடர்

வி.ராம்ஜி

பண்டிகை என்றாலே குதூகலம் நிரம்பித் ததும்பும். ஒரு கொண்டாட்டத்தின் மிகப்பெரிய ஆயத்தங்கள், இந்தச் சொல்லுக்குப் பின்னே வியாபித்திருக்கும். சந்தோஷங்கள், அதன் முன்னேயும் பின்னேயுமாக வரிசைகட்டி வந்து நம்மைத் தழுவும். பண்டிகை என்பது ஒற்றைச் சொல்தான். ஆனால் ஒற்றையாய் நடப்பதே இல்லை. அது ஊர் கூடி தேரிழுப்பது போல் உறவுகள் கூடிக் களிக்கிற உன்னதம். ‘நல்லநாள் பெரியநாள்னா, நான் எங்கே இருந்தாலும் சொந்த ஊருக்குப் போயிருவேன். அப்பா, அம்மாவோடதான் கொண்டாடுவேன்’ என்று இதைப் படித்துக் கொண்டிருக்கிற இந்த நிமிஷத்தில், யாரோ யாரிடமோ சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

தீபாவளிப் பண்டிகைக்காக, ஊருக்குச் செல்வதற்காக, எப்போதோ டிக்கெட் போட்டுவிட்டு, மனதளவில் இப்போதே ஊருக்குப் போய் இறங்கிவிட்டிருக்கிறவர்கள் சூழ்ந்திருக்கிற உலகம் இது. ஒவ்வொரு பொருளாக வாங்கி வாங்கிச் சேர்த்து, சுமக்க முடியாமல் சுமந்து செல்பவர்கள்... பொருட்களையா சுமந்து செல்கிறார்கள். அவை அத்தனையும் பாசநேசத்தின் வெளிப்பாடுகள். அன்பைச் சொல்லும் அடையாளங்கள்.

‘அப்பவே டிக்கெட் போட்ருக்கணும். விட்டுட்டேன். எப்படிப் போறதுன்னு தெரியல. ஆனா எப்படியாவது போயிருவேன். தீபாவளிக்கு இன்னும் நாலு நாள் இருக்கு. இப்ப வரைக்கும் ‘எப்போ வருவே... எப்படி வருவே’ன்னு நூறு தடவை கேட்டுட்டாங்க அம்மா’ என்று சொல்லும்போது, உள்ளே ஏதோவொன்று பூப்பந்தென வார்த்தைகளைத் தடுக்குமே... அது ஆனந்த அதிர்வு. உறவுகளின் பேரானந்தம்.

இதோ... திருச்சியில் இருந்து காரில் வந்திருந்த கோயிலின் குருக்கள் பேசிக்கொண்டிருக்கும் போது ‘வந்த வேலையெல்லாம் முடிஞ்சிருச்சா?’ என்று கேட்டேன். 'முடிஞ்சிருச்சு. இப்பக் கூட கிளம்பலாம்தான். ஆனா என் மச்சினன் பையன் மயிலாப்பூர் சேன்ஸ்க்ரிட் காலேஜ்ல படிக்கிறான். மூணு மணிக்குத்தான் விடுவாங்க. தீபாவளிக்கு பஸ், ரயில்னு எதுவும் கிடைக்கல அவனுக்கு. அதான்... மூணு மணிக்கு அவனைக் கார்லயே கூட்டிட்டுப் போயிடலாம்னு இருக்கேன்’ என்று சொன்னார். அங்கே ஓர் உறவின் நேசத்தை உணர்ந்து சிலிர்த்தேன்.

பண்டிகைகளுக்கும் உறவுகளுக்கும் எப்படித் தொடர்பு இருந்துகொண்டே இருக்கிறதோ... அதேபோல் மனித வாழ்வில், உறவுகளின் தொடர்புகள் ஒவ்வொரு தருணத்திலும் இருந்து, வழிநடத்திக்கொண்டேதான் இருக்கின்றன.

முப்பது நாப்பது வருடங்களுக்கு முன்னால் பண்டிகையையொட்டி நான் அறிந்த விஷயம்... இன்றைக்கும் மறக்கவில்லை.
தீபாவளி, பொங்கல், திருக்கார்த்திகை என வந்துவிட்டால், அவை வருவதற்கு முன்னதான பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்பு, அப்பா போஸ்ட் ஆபீஸுக்குச் செல்வார்.

இப்போது இருந்த இடத்தில் இருந்தே, செல்போனை நோண்டியபடியே, இன்னொரு அக்கவுண்ட்டிற்கு பணத்தை அனுப்பி விட முடிகிறது. ‘உங்க அக்கவுண்ட் நம்பர், ஐஎப்எஸ்சி நம்பர்லாம் அனுப்பிவிடுங்க. பணத்தை அனுப்பறேன்’ என்று சொன்னது சிலவருடங்களுக்கு முன்பு வரை இருந்தது. இப்போது அவை கூட தேவையில்லை. நீங்க ‘போன் பே’ல இருக்கீங்களா? அப்படி இருந்தீங்கன்னா, செல்போன் எடுத்து, போன் பே ஓபன் செய்து, அவர் பெயர் போட்டோ பார்த்து, க்ளிக் செய்து, எவ்வளவு பணம் போடப்போகிறோமோ அந்தத் தொகையை டைப் செய்து, ‘ப்ரொஸிட்’ க்ளிக் செய்தால், அடுத்த நிமிடம்... ஏன்... அந்த நிமிடமே அவருக்கு அந்தப் பணம் போய்ச் சேர்ந்துவிடுகிறது.

ஆனால் அன்றைக்கு மணியார்டர்தான் பெரும்பாலோனோரின் வழி. பண்டிகைகளுக்கு பத்து நாட்கள் முன்னதாக, அப்பா சென்னையில் இருக்கும் தங்கைக்கும் திருவாரூரில் இருக்கும் அக்காவுக்கும் இருபது ரூபாய் மணியார்டர் செய்வார். அந்த மணியார்டர் விண்ணப்பத்தில், தகவல் பரிமாறவும் இடமிருக்கும். ‘நமஸ்காரம். அநேக ஆசீர்வாதங்கள். இத்துடன் தீபாவளிக்கு என்னால் முடிந்த தொகையை அனுப்பியிருக்கிறேன். பெற்றுக்கொள்ளவும். நல்லபடியாய், கங்கா ஸ்நானம் செய்து, லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ ஆசீர்வாதங்கள். தீபாவளி வாழ்த்துகள்’ என்று எழுதி அனுப்பும் அப்பா, அப்போது வியப்பாகத் தெரிந்தார்.

‘அனுப்பறதுதான் அனுப்பறே. ஒரு நூறு ரூபா அனுப்பக் கூடாதோ’ என்று அப்பாவிடம் கேட்டிருக்கிறேன்.அதற்கு அவர், ‘பண்டிகைநாள் நல்லநாள்னா, உடம்பொறந்தவங்களுக்கு இப்படி எதுனா கொடுக்கணுங்கறது மரபு. ஒரு சம்பிரதாயம். வெறுமனே வெத்தல, பாக்கு கொடுக்காம, அதுல ஒத்தை ரூபாயை வைச்சுக் கொடுக்கறோமில்லியா. அதுமாதிரிதான் இதுவும். என்னால முடிஞ்ச தொகையை நான் அனுப்பறேன். இதுவே எனக்கு திருப்தியா இருக்கு. அதேபோல, ஒண்ணாப் பொறந்து இப்போ எங்கேயோ வாழ்ந்துட்டிருக்கிற என் அக்காவுக்கும் தங்கச்சிக்கும் இதுவொரு சந்தோஷத்தைக் கொடுக்கும்ங்கறது நிச்சயம்’ என்று அப்பா விவரித்ததன் சுகானுபவத்தை பின்னாளில் நான் என் அக்காவுக்கு அனுப்பும் நாளில், உணர்ந்துகொண்டேன். பண்டிகைகள் என்பவை காசு பணம் சம்பந்தப்பட்டவைதான். ஆனால் அதையும் கடந்து, உறவுகளால் உயிர் தொடுபவை.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அத்தையின் மூத்த மகனிடம் இருந்து போன். ‘நம்ம சிவராமன் இறந்துட்டாண்டா’ என்றார். ‘எந்த சிவராமன்’ என்றேன். ‘என்னடா இப்படிக் கேக்கறே. திருச்சி பீமநகர்... கணபதிபுரம்டா. யக்ஞசாமி. உங்க அப்பாவோட தாய்மாமா யக்ஞசாமி. அவரோட ரெண்டாவது பையன்தான் சிவராமன். அவர் இறந்துட்டாருடா’ என்று உறவு விவரம் சொன்னார்.

அப்பா வேதாரண்யம் அருகே கிராமத்தில் பிறந்தவர். அவரின் அக்கா கல்யாணம் செய்து கொண்டு திருவாரூரில் இருந்தார். அங்கேதான் அப்பாவுக்குப் படிப்பு. ‘சரி சரி... தேர்டு ஃபார்ம் படிச்சி முடிச்சிட்டியா. சாயந்திரம் ரயிலுக்கு என்னோட திருச்சி வந்துரு’ என்று ஊரில் இருந்து வந்திருந்த தாய்மாமா சொல்லி, கையோடு அப்பாவை அழைத்துச் சென்றார். திருச்சி கோர்ட்டில் வக்கீலிடம் குமாஸ்தாவாகச் சேர்த்துவிட்டார். பிறகு, ரயில்வேயில் வேலைக்குச் சேர்த்துவிட்டார்.

வேலைக்குச் சேர்ந்து, கல்யாணம் நடந்து, மகளும் பிறந்த போதும் கூட தாய்மாமா வீட்டில் கூட்டுக்குடும்பமாகவே இருந்தார்கள் எல்லோரும். ‘அந்த வீட்ல மொத்தம் 26 பேரு. ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு நாக்கு. அது செஞ்சா இவனுக்குப் பிடிக்கும். அவனுக்குப் புடிக்காது. ஆனா நான் வத்தக்குழம்பும், மிளகு ரசமும் வைச்சா, எல்லாரும் வாயைப் பொத்திக்கிட்டு, ’இன்னும் கொஞ்சம் சாதம், இன்னும் கொஞ்சம் ரசம்’னு கேட்டுக் கேட்டு சாப்பிடுவாங்க. - அம்மா அடிக்கடி சொல்வாள்.


பிறகு ரயில்வே காலனியில் வீடு கிடைக்க, அம்மா, அப்பா, அக்கா என தனி ஜாகை. ஆனாலும் தீபாவளி, பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு என எந்தப் பண்டிகையாக இருந்தாலும் காலையில் வீட்டில் பூஜைகளையெல்லாம் முடித்துவிட்டு, சட்டென்று கிளம்பி, பஸ் பிடித்து, பீமநகர் கணபதிபுரம் சென்று, தாய்மாமாவுக்கு நமஸ்காரம் செய்து, இரண்டு மணிநேரம் மூன்று மணிநேரம் இருந்துவிட்டு வருவதை வழக்கமாகவே வைத்திருந்தார் அப்பா. தாய்மாமா இறக்கும் வரை, அப்பா இதை விடவே இல்லை. உறவு... நன்றியுணர்வு. தாய்மாமா மீது கொண்ட அன்பு.

‘சிவராமன் இறந்துட்டாருடா’ என்று அத்தை மகன் சொன்னபோது, சென்னையில் வீட்டு விலாசம் வாங்கி மனைவியுடன் சென்று நின்றேன். பலருக்கும் என்னைத் தெரியவில்லை. ‘யாரு... யாரு...’ என்று அருகில் உள்ளவர்களிடம் அருகில் உள்ளவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ‘இவனைத் தெரியலியா... இவன்தான் ஜெயராமன் புள்ள’ என்று யாரோ சொன்னார்கள். ‘என்ன ஒறவு’ என்று கேட்டார்கள். ‘இறந்து போன சிவராமனோட அப்பா யக்ஞ்சாமி, இவனோட அப்பாவுக்குத் தாய்மாமா. அப்படீன்னா என்ன ஒறவுன்னு பாத்துக்கோ’ என்றார்கள்.

எனக்கும் என்ன உறவு என்று தெரியவில்லை. ஆனால் உறவு என்று மட்டும் தெரிந்தது. அங்கே... ஓர் மரணத்தின் மூலம் கூட நல விசாரிப்புகளால் உறவுகள் புதிதாகப் பூத்தன.

‘ருக்குதானே உங்க அம்மா பேரு. சின்ன வயசுல, நாம சேர்ந்து விளையாடிருக்கோம்டா’ என்று நரை விழுந்த ஐம்பது ப்ளஸ் பெண்மணி வந்து சொன்னார். துபாயில் இருக்கிறார்களாம். ‘உன் நம்பர் என்ன? வாட்ஸ் அப் நம்பர் இதானா. நம்ம ஃபேமிலிக்கு வாட்ஸ் அப் குரூப் வைச்சிருக்கோம். அதுலயும் உன்னையும் சேத்துடுறோம். ஏய்... இவளே... இவன் நல்லா கேரம்போர்டு விளையாடுவான் ஞாபகம் இருக்கா?’ என்று அக்காவிடம் அறிமுகப்படுத்தினாள். அவளின் மகனிடம் அறிமுகப்படுத்தினாள்.

தாய்மாமன் எனும் உறவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிவோம். அப்பாவின் வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் தாய்மாமாவின் பங்கு எத்தகையது என்பதுதான் இங்கே உறவின் ருசியாகவும் அடர்த்தியாகவும் உணரமுடிகிறது.

அப்பாவுக்கு சிலசமயம் ஷிப்ட் டியூட்டி இருந்தது. ரெண்டு - பத்து. மதியம் இரண்டு மணிக்குச் சென்றுவிட்டு இரவு பத்து மணிக்கு டியூட்டி முடியும். இந்த ஷிப்ட்டின் போது மட்டும் டியூட்டி முடிந்து அப்பாவைக் கூட்டி வரவேண்டும். என்னிடம் சைக்கிள்தான் அப்போது. ஒருமுறை அப்பாவிடம், ‘சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டிருக்கலாமே. ஏன் கத்துக்கவே இல்ல’ என்று கேட்டேன்.

‘ஏன் கத்துக்கலை... நல்லா சைக்கிள் விடுவேன். சின்ன வயசுல, மாமாவோட சைக்கிளை எடுத்துட்டு ரவுண்டு அடிக்கக் கிளம்பிட்டேன். ரொம்ப நேரமாச்சே... ஆளைக் காணோமேன்னு பீமநகர் பாலாஜி தியேட்டர், கோர்ட், சத்குரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் கோயில், செடல் முத்துமாரியம்மன் கோயில் மைதானம், செவன்த் டே ஸ்கூல் கிரவுண்டுன்னு தேடுறாங்க. மாமா பதறிப் போயிட்டாரு. மொத்த கணபதிபுரம் ஏரியாவும் மாமா வீட்டு வாசல்ல நிக்கிது. இது எதுவும் தெரியாம, ரெண்டு கையையும் விட்டுட்டு, ஸ்டைலா சைக்கிளை ஓட்டிக்கிட்டு, ஹோய்ன்னு சத்தம் போட்டுக்கிட்டே வந்தேன்.

கிட்ட வந்ததும் கூட்டம் பாத்து, விசுக்குன்னு தூக்கிவாரிப் போட்டுச்சு. ‘எங்கேடா போனே’னு கேட்டுக்கிட்டே, சைக்கிளோட எட்டி ஒரு உதைவிட்டாரு மாமா. ‘பதறிப் போயிட்டோம் தெரியுமா? உங்க அம்மாவுக்கு என்ன பதில் சொல்லுவேன் நான்’ என்று அடிக்க கை ஓங்கினார். அடிக்கவில்லை. ‘இனிமே சைக்கிளைத் தொட்டே... குதிகால் நரம்பை எடுத்துருவேன். போடா உள்ளே. கைகால் அலம்பிட்டு, சாப்பிடப் போ’ன்னு சொன்னார்.

அன்னிக்கி யாருமே சாப்பிடலை. எல்லாரும் ஒரு இறுக்கத்தோட சாப்பிட்டோம். அதான்... அன்னிக்கிதான்... நான் சைக்கிளை ஓட்டினது அன்னியோட முடிஞ்சு போச்சு. அதுக்குப் பிறகு நான் சைக்கிள் ஓட்றதையே நிறுத்திட்டேன்’ என்று அப்பா சொல்லி முடித்தார். கேரியரில் உட்கார்ந்திருக்கும் அப்பா, எனக்கு முன்னே விஸ்வரூபமெடுத்து நின்றார். தாய்மாமாவின் மீதான அன்பும் மரியாதையும் சேர்த்து ‘சொன்ன சொல் காத்தல்’ என்பதையும் புரிந்து சிலிர்த்தேன்.

எல்லா உறவுகளும் உன்னதமானவைதான். எங்கெல்லாம் நேர்மை இருக்கிறதோ... அங்கெல்லாம் புரிதல் இருக்கும். புரிதல் இருக்கும் போது, அங்கே... அன்புக்குப் பஞ்சமில்லாமல் வாழ்க்கை, இனிதாகிக் கொண்டே இருக்கும். இனிதாக்கிக் கொண்டே இருக்கும்.


எப்போதாவது புத்தகக் கடையில் சந்திக்கும் அந்தப் பையன், மகேந்திரா சிட்டியில் வேலை பார்க்கிறான். 13 ஆயிரம் ரூபாய் சம்பளம். ‘நல்ல வேலை தேடிட்டிருக்கேன் சார்’ என்பான்.

‘என்ன தம்பீ... தீபாவளிக்கு ஊருக்கு எப்போ போறீங்க?’ என்று புத்தகக் கடையில் சந்திக்கும் அந்தப் பையனிடம் கேட்டேன்.

''போகல சார்’’ என்றான்.

அவனுக்கு நெல்லைப் பக்கம் , தென்காசி அருகே கிராமம்.

''ஏன் டிக்கெட் கிடைக்கலியா?’’ என்றேன்.

''கிடைச்சுச்சு சார். அதை கேன்சல் பண்ணிட்டு, கிடைக்கலைன்னு அம்மாகிட்ட பொய் சொல்லிட்டேன். லீவும் கிடைக்கலம்மான்னு சொல்லிட்டேன்’’என்றான், சோகம் அப்பிய முகத்துடன்.

அவன் தோள் தொட்டு, ‘என்னாச்சு... ஏன்?’ என்றேன்.

நிமிர்ந்து பார்த்தான்.

''ரோஸி அக்கான்னு ஒருத்தங்க. எங்க வீட்லேருந்து நாலு தள்ளி வீடு. சின்ன வயசிலிருந்தே அக்கா அக்கான்னு உசுரா இருப்பேன். எங்க அம்மா என்னை அடிக்கும் போதெல்லாம் பாதி அடியை வாங்கிக்கிட்டது ரோஸி அக்காதான். என்னை டூவீலர்ல எங்க ஊர்லேருந்து தென்காசிக்கு கூட்டிட்டுப் போச்சு. எம்மேல அப்படி பிரியமா இருக்கும்.

முத மாசம் சம்பளம் வாங்கினதும் எங்க அம்மாவுக்கும் ரோஸி அக்காவுக்கும் தான் புடவை எடுத்துக் குடுத்தேன். கல்யாணம் பண்ணிக்கிட்டதுலேருந்தே அதோட முகத்துல சிரிப்பு போச்சு. கோயில் கொடைன்னு போயிருந்தப்ப, அக்காவைப் பாத்தேன். மூஞ்சியெல்லாம் வீங்கிருந்துச்சு. ‘அந்த ஆளுக்கு யாரோடயோ தொடுப்பு இருக்குடா’ன்னு சொல்லி அழுதுச்சு. ‘அவன் கூட இருக்கறதுக்கு செத்துடலாம் போல இருக்கு’ன்னு ஒருநாள் போன்ல புலம்புச்சு. ‘லூசாட்டம் சொல்லாதேக்கா’ன்னு சொன்னேன்.

அடுத்தநாள் அம்மா போன் பண்ணுச்சு... ‘ரோஸி நம்மளையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாடா. தூக்கு போட்டுக்கிட்டு செத்துப் போயிட்டாடா’ன்னு சொல்லுச்சு.

லீவு போட்டுட்டு, ரூம்ல உக்காந்துக்கிட்டு அழுதுக்கிட்டே இருந்தேன். தீபாவளின்னா ரோஸி அக்காவுக்கு எங்க வீட்ல புடவை எடுத்துருவோம். கிறிஸ்துமஸ்னா, எனக்கு சட்டையும் பேண்ட்டும் அவுக வீட்ல எடுத்துக் குடுப்பாங்க.

ரோஸி அக்கா இல்லாத அந்த ஊருக்கு, தீபாவளிக்கு, வீட்டுக்குப் போகறதுக்கு புடிக்கல சார். அதான் சார்...’’ என்று முதுகு குலுங்க அழுதுகொண்டிருந்த அந்தப் பையனை தேற்றவே முடியவில்லை.

முகம் பார்த்திடாத அந்த ரோஸியின் மரணம்... அன்றிரவு தூங்கவிடவில்லை.

இப்படி அன்பு கிடைக்காமல் மரணிக்கிற ரோஸிக்களும் ரோஸியின் அன்பால் உருகிக்கொண்டிருக்கிற தம்பிகளும் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள்.


- வளரும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x