துணைக்கண்டத்தின் சினிமா: 1-பெருமழக்காலம்; அவலத்தின் அடைமழை

பெருமழக்காலம் மலையாள சினிமாவிலிருந்து ஒரு காட்சி.
பெருமழக்காலம் மலையாள சினிமாவிலிருந்து ஒரு காட்சி.
Updated on
4 min read

மாநிலத்திற்குள்ளேயே உழலும் மனம் 'தேசம்' என்பதை ஏனோ மறந்துவிடுகிறது. ஐரோப்பாவில் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குப் பேருந்திலேயே செல்கிறார்கள். கடவுச்சீட்டுதான் ஒரு பிரச்சினையே தவிர கடந்துபோவது ஒரு பிரச்சினையே இல்லை அங்கு.

நமது துணைக்கண்டத்தில் பயணம் செய்ய எந்தக் கடவுச்சீட்டு நம்மைத் தடுக்கிறது? மாநிலத்திற்கு வெளியே எவ்வளவு மாநிலங்களை நேரடியாகப் பழகித் தெரிந்துகொண்டுள்ளோம் என்றால் சற்று கேள்விக்குறிதான். மாநிலங்களை நாம் கடந்து சென்றுள்ளோமா? என்பதுதான் கேள்வி.

ஆனால் உலக நாடுகளைப் பற்றி கவலைப்படுவதிலோ உலக சினிமாக்களைப் பார்ப்பதிலோ உலக நாடுகளில் சென்று பணியாற்றுவதிலோ அல்லது உலக நாடுகளுக்குச் சென்று தொகுப்பு சுற்றுலாக்கள் மூலம் திரும்புவதிலோ நமக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. இது ஒருவித மனநிலைதான்.

சொந்த ஊரில் படித்து முடித்து ஊரை விட்டுப் போகும்வரையில் போனபிறகு கூட பக்கத்தில் உள்ள ஊர்களைப் பற்றி அதன் அருமைகளைப் பற்றி எதுவுமே தெரியாது. குறுகிய கிணற்றுத் தவளை அல்ல தெரியுமா? என்கிற ஒரு பெருமையில் திளைக்கும் அசட்டுப் பெருமிதம் அக்கம்பக்கம் பார்க்கவேண்டிய சிறு உள்ளூர் பயணங்கள் எல்லாவற்றையும் தடுத்துவிடுகிறது.

ஒவ்வொரு கிராமத்திலிருந்து வெளியே வரும் மனிதர்களும் உலக அறிவு படைத்தவர்களாக உலக வரைபடத்தின் அத்தனை அரசியலையும் வரலாற்றையும் தெரிந்தவர்களாக காட்டிக்கொள்ள முயல்வார்கள். முயற்சிகளினால் தெரிந்தும் இருக்கலாம். ஆனால், சொந்த ஊரில் நமது கலாச்சாரம், உள்ளூர் பழக்கவழக்கங்கள் போன்றவை 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் அங்கு முற்றிலுமாக வேறொரு வாழ்வியலாக மாறியிருப்பதை அறிந்தவர்களாக அவர்கள் இருக்க மாட்டார்கள்.

துணைக்கண்டத்தின் சினிமா என்கிற இந்தத் தொடர் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளிவரும் பல மொழி திரைப்படங்களையும் பேசுவதற்கான ஒரு களமாக அமையும். பேசப்படும் படத்தின் தொழில்நுட்பங்களை, நடிகர்களின் பங்களிப்புகளைப் பேசி படத்தின் நிறை குறைகளை அலசி ஆராயப் போவதில்லை. மாறாக ஒரு படம் என்னவாக வந்திருக்கிறது, அதன் நோக்கம் எந்த அளவுக்குச் சரியாக இருக்கிறது. படம் பேசியுள்ள பொருளின் ஆழம் சார்ந்து பின்னுள்ள
இயக்குநரின் முயற்சி எப்படி உருவானது போன்ற சில விஷயங்களை மட்டுமே பேச உத்தேசம்.

மேலும் படத்தில் பேசப்பட்டுள்ள முக்கியப் பிரச்சினையை ஒட்டிய தொடர்ச்சியான வேறுபட்ட சில பார்வைகளை உருவாக்க முயலலாம் என்றே தோன்றுகிறது. இது ஒருவகையான தப்பித்தல்தான் என்றாலும் படத்திற்குள் நுழைந்து வழக்கமான பரிமாணங்களையும் சிலாகிப்பது தொடர்ந்து கூறியது கூறலாகவே அமைந்துவிடுகிறது.

மழையை எடுத்துக்கொள்வோம். நமது படங்களில் மழைக்கு என்ன இடம் உள்ளது? பரவசத் தருணங்களைக் காட்ட மழையை ஒரு பின்னணியாகவே நாம் அதிகம் பயன்படுத்தியுள்ளோம். பெரும்பாலும் நாயகி பாடலில் நனையும் காட்சி, காதலர் இருவர் மழையில் ஆடிப்பாடும் சந்தோஷக் காட்சி. இப்படித்தான் அதிகம் பார்த்திருப்போம். சற்று மாற்றி யோசித்தால் பாலத்தில் நடைபெறும் உச்சபட்ச சண்டைக் காட்சியில் மழை. நாயகனின் குடும்பம் அல்லது நாயகியின் குடும்பம் ஊரை விட்டுப் போகும்போது மழைக்காட்சி அல்லது தான் சந்தித்துப் பழகிய பெண் வேறொரு காலத்தில் சந்திக்கும்போது பெய்யும் மழை. அல்லது இறுதிக் காட்சியில் ஒரு முக்கியமான திருப்பத்தை நோக்கி படம் நகரும் இறுதிக்காட்சியில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டும். இப்படித்தான் நமது திரை நமக்கு மழையைக் காட்டியுள்ளது.

மழை என்ற டைட்டிலேயே ஒரு தமிழ்ப் படம் வந்தது. இதில் கதாநாயகி ரயில் நிலையத்தில் மகிழ்ச்சியில் திளைத்து மழையில் நனைந்து பாடுவாள். அதைக் கதாநாயகனும் காண்பான். அவள் யாரென்று தெரியாத நிலையில் அந்த மழைப்பாட்டு அவனுக்கு அவள் மீதான ஈர்ப்பை உண்டாக்கும். அடுத்து ஒரு பாட்டிலேயே கதாநாயகனும் நாயகியும் காதல் கொண்டு ஆடிப்பாடுவார்கள். அப்போது மழை பெய்யும். அல்லது எங்காவது தனிமையான இடத்தில் காதலை வெளிப்படுத்துவார்கள். அப்போதும் மழை பெய்யும். இதுதான் இந்த மழை படத்தின் நிலைமை. வணிக ரீதியாகவும் பொழுதுபோக்கிலும் குறைவைக்காத ஒரு நல்ல படம் என்ற பெயரும் இதற்குக் கிடைத்தது.

மலையாளத்தில் 'பெருமழக்காலம்' (2004) என்று ஒரு படம் வந்தது. ஒரு நல்ல மழை என்பது நமது வாழ்வுக்கு வளம் சேர்க்கக் கூடியது. ஆனால் பெருமழை, பெருவெள்ளம் என்பதெல்லாம் மிகப்பெரிய சாபம் ஆகும். மழை ஒரு வரம்தான் அளவோடு பெய்யும் வரையில். ஆனால் அதுவே கேரளாவில் சாபமாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் பெருவெள்ளம் சூழும் டெல்டா மக்களைக் கேட்டால் சொல்வார்கள் மழை சிலநேரங்களில் வளங்களையே சூறையாட வந்த பிசாசு என்று.

பெருமழக்காலத்தில் மழை ஒரு சாபமாக வருகிறது. அதாவது பெருமழை, பெருவெள்ளம் என்ற உண்மையான பொருளில் வரவில்லை, இரண்டு பெண்களின் வாழ்க்கையில் வரும் கணவன்மார்களில் ஒருவன் கொலை செய்யப்படுகிறான். இன்னொருவன் குற்றவாளியாகிறான். இரண்டு பேருடைய சம்பவங்களும் துபாயில் நடப்பதால் கேரளாவில் வாழும் இந்தப் பெண்களின் அன்றாடத்தில் ஒரு தகவலாகவே வருகிறது.

மழை பெய்துகொண்டிருக்கும்போது அந்தத் தகவல் வருகிறது. படம் முழுக்க குடும்பங்கள் நிலைகுலைவது, ஒரு பெண் கைம்பெண்ணாக கோலம் மாறுவது, துவேஷம் வெறுப்பில் இன்னொரு பெண் அவமானத்தில் துடிப்பது, அந்த இரு பெண்களுக்கும் மனித உறவுகளே முள்ளாகப் புறக்கணிப்பு, வெறுமை போன்ற வாழ்வைத் தொலைத்த துயரக் கனவுகளை கொண்டு வந்து சேர்க்கும். இவை அத்தனைக் காட்சிகளும் கேரளாவின் கோழிக்கோட்டில், பாலக்காட்டில் கொட்டும் மழைக்கிடையில் நடக்கிறது.

ஒருவகையில் படத்தின் பின்னணி போன்ற உணர்வைத் தந்தாலும் படத்தின் கதையம்சத்தோடு இணைத்துப் பார்க்கும்போது வாழ்வின் துயரங்களோடு பழி உணர்ச்சியோடு யாசகம் கேட்கும் மனநிலையோடு அலையும் தருணங்களில் துயரத்தின் குறியீடாக வரும் விடாது பெய்யும் மழை ஒரு சாபம் போலவே நமக்குப் படுகிறது.

பதேர் பாஞ்சாலியில் நிலப்பரப்பின் வாழ்வு மழையில் நனைந்து உயிரையே பறிகொடுக்கிறது. பை சைக்கிள் தீவ்ஸில் மழை வாழ்வாதாரத் தேடலின் இடையே ஒரு சிறு பாதையாக குறுக்கிடுகிறது. ரோஷமானிலோ பேயெனக் கொட்டும் மழை உண்மை என்ற ஒன்றின் பக்கங்களைத் தேடி மனிதர்களை புரட்டிப் போடுகிறது.

பெருமழாக் காலத்தின் படத்தின் இயக்குநர் கமல் ஒரு ஓவியத்தில் தீட்டப்படும் வண்ணங்களின் தேவையான பங்களிப்புபோல செய்திருப்பார். அவருக்கு மழையும் வாழ்க்கையும் வேறு வேறல்ல. ஒருவேளை பருவ காலங்களில் கேரளாவின் வாழ்க்கை மழையுடன் கூடிய வாழ்வாக இருப்பதை அவர் உணர்ந்திருக்கக் கூடும்.

இத்தனைக்கும் இயக்குநர் கமல் ஒரு தீவிர சினிமா ஆர்வலர் கிடையாது. அடூர் படங்களைப் பார்த்து அவர் உத்வேகம் அடைந்திருக்கலாம். கே.எஸ்.சேதுமாதவனின் முக்கியப் படங்களில் பணியாற்றி இருக்கலாம். ஆனால் கமல் தேர்ந்துகொண்டது அவருக்கென்று ஒரு சினிமாவைத்தான். அதில் ஆடல் உண்டு பாடல்கள் உண்டு. வழக்கமான வாழ்வின் கதையம்சங்கள் எல்லாம் உண்டு. கேரளா படங்களுக்கே உண்டான நிலப்பரப்பின் காட்சிகள் உண்டு. ஆனால் அதையும் தாண்டி கமல் சினிமா என்று அவர் சித்திரம் தீட்ட முயன்றார். அதுதான் பெருமழக்காலம். இதில் காட்டப்படும் தமிழ்க் குடும்பத்திற்காக அவர் மெனக்கெட்டது தமிழ்ப் படங்களிலேயே தமிழ் மக்கள் வாழும் ஒரு தெருவை இவ்வளவு அழகாக காட்டியிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

கோழிக்கோட்டில் மலையாள முஸ்லிம் குடும்பம், பாலக்காட்டில் தமிழ்ப் பிராமணக் குடும்பம். இருவேறு கலாச்சார துருவங்கள். பாலக்காட்டுக் குடும்பம் மன்னிப்புப் படிவத்தில் கையெழுத்துப் போட்டுக்கொடுத்தால் கோழிக்கோட்டு பெண்ணின் கணவனுக்கு கொலைத்தண்டனையிலிருந்து விலக்கு கிடைக்கும். ஆனால் கொலையுண்டவனின் எந்த மனைவி கொலை செய்தவனுக்கு மன்னிப்பு வழங்குவாள். அதேநேரம் கணவனை இழந்த பாலக்காட்டுப் பெண்ணுக்குத்தான் அந்த வலி தெரியும். கணவன் இல்லையென்றால் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் சமூகத்தின் தரப்பிலிருந்து ஏற்படக்கூடிய வலி. எல்லோருடைய எதிர்ப்பையும் மீறி தன் மனசாட்சி சொன்னதைச் செய்துவிட்டு வருகிறாள். சமூகத்தாலும் குடும்பத்தாலும் ஒதுக்கப்பட்டு எங்கோ ஒரு இடத்தில் அப்பளம் விற்று பிழைப்பு நடத்த தன் வாழ்வைத் தொடங்குகிறாள்.

கதாசிரியர் ரசாக், தான் கேள்விப்பட்ட சம்பவங்களை எழுதிக்கொடுத்த இந்தக் கதையை ஒரு மேடையில் அரங்கேற்றி விடலாம், அல்லது தொடராகவும் எடுத்துவிடமுடியும். ஆனால் அது ஓர் உணர்வுமிக்க குடும்ப நாடகமாகவே வழக்கம்போல அமைந்திருக்கும்.

ஆனால் இயக்குநர் கமல் தான் எடுத்துக்கொண்ட இந்த பேமிலி டிராமாவில் குடும்பப் பாசம், உளவியல், அபிலாஷைகள், சமூக உணர்வுகள், சமமான தொனியில் சொல்லப்படவேண்டிய பண்பாட்டு அழகியல் மற்றும் அவலங்கள் போன்ற பலவற்றையும் யோசித்தார், எல்லாவற்றுக்கும் மேலாக மெலோ டிராமாவாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக திரையில் நிகழ்த்த முடிகிற உச்சபட்ச சாத்தியம் ஒன்றையும் அவர் யோசித்தார்.

அது வேறொன்றுமில்லை, கலாச்சார அழுத்தங்களைக் கடந்து மானுட தரிசனத்தை பெறுவதற்காகப் பெய்துகொண்டிருந்த அடைமழை.

- பால்நிலவன்

தொடர்புக்கு sridharan.m@hindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in