வெளியூரிலிருந்து கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு 15 ஆண்டுகளாக இலவச பசும் பால் வழங்கும் மதுரை டீக்கடைக்காரர்

வெளியூரிலிருந்து கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு 15 ஆண்டுகளாக இலவச பசும் பால் வழங்கும் மதுரை டீக்கடைக்காரர்
Updated on
2 min read

மதுரை

மதுரை மாட்டுத்தாவணி (எம்ஜிஆர்) பேருந்து நிலையத்திற்கு, வெளியூர்களிலிருந்து கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக இலவசமாக பசும்பால் வழங்கி வருகிறார் டீக்கடைக்காரர் குணா சுரேஷ்.

மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பயணிகளின் தேவைகளுக்காக பேருந்து நிலைய வளாகத்தில் டீக்கடைகள், உணவகங்கள், பழக்கடைகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

மேலும் நடைபாதைகளிலும், நிழற்குடைகளிலும் பூ வியாபாரிகள், பழ வியாபாரிகளும் உள்ளனர். பேருந்து நிலையத்திற்குள்ளே டீக்கடை வைத்துள்ள குணா சுரேஷ் (52) வெளியூரிலிருந்து வரும் பயணிகளின் கைக்குழந்தைகளுக்கு இலவசமாக தரமான பசும்பால் வழங்கி வருகிறார். இதனை கடந்த 15 ஆண்டாக செய்து வருகிறார்.

இதுகுறித்து டீக்கடைக்காரர் குணா சுரேஷ், "நானும், எனது அண்ணன் குடும்பத்தினரும் 15 ஆண்டுக்கு முன்பு சென்னை சென்றிருந்தோம். கோயம்பேட்டிலிருந்து பஸ் ஏறும்போது, அண்ணனின் கைக்குழந்தை அழுததால் அங்குள்ள டீக்கடையில் பால் வாங்கிக் கொடுத்தோம். அப்போது கெட்டுப்போன பாலை குடித்ததில் தொடர் வாந்தி எடுத்து, உடல் நிலை பாதித்தது. மதுரை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை.

நமக்கு நேர்ந்த கதி யாருக்கும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் அப்போது ஒரு முடிவெடுத்தேன். பஸ் நிலையத்தில் கடை வைத்துள்ள நாமும் இனிமேல் தரமான பாலையே விற்பனை செய்ய வேண்டும். அதுவும் வெளியூரிலிருந்து கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு இலவசமாக பசும்பால் கொடுக்க வேண்டும் என முடிவெடுத்தேன்.

அன்றிலிருந்து இன்றுவரை தரமான பசும்பாலையே விற்பனை செய்கிறேன். மேலும் ஒரு நாளைக்கு குறைந்தது 10-க்கும் மேற்பட்ட கைக் குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு இலவசமாக பால் கொடுத்து வருகிறோம். இது பயனாளிகளுக்கு தெரியவேண்டும் என்பதற்காகத்தான் கடந்த 6 ஆண்டுகளாக அறிவிப்புப் பலகை வைத்துள்ளேன். இதுவரை சுமார் 28 ஆயிரம் குழந்தைகளுக்கு பால் வழங்கியுள்ளேன்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in