Published : 18 Oct 2019 05:45 PM
Last Updated : 18 Oct 2019 05:45 PM

இளைய தலைமுறையினரிடம் தொல்லியலை அறிந்துகொள்ளும் ஆர்வத்தை உருவாக்க வேண்டும்: அக்.19 சர்வதேச தொல்லியல் நாள்

ராமேசுவரம்

தொல்லியல் மனித சமுதாயத்துக்கு வழங்கியுள்ள பங்களிப்பைக் கொண்டாடவும், அது சார்ந்த விழிப்புணர்வுக்காகவும் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மூன்றாவது சனிக்கிழமை சர்வதேச தொல்லியல் நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு இது அக்டோபர் 19 (நாளை) அன்று வருகிறது.

மனிதன் கடந்து வந்த பாதையை, அவன் வாழ்ந்த ஆதி காலத்தை, அறிந்து கொள்ள பயன்படுத்தப்படும் அறிவியல் ஆய்வுமுறை தொல்லியல் ஆகும். தொல்லியல் ஆதாரங்களே வரலாறு உருவாக்கப்படுவதற்கான முதன்மைச் சான்றாக அமைகின்றன.

கட்டிடங்கள், தொல்பொருள்கள், நிலத்தோற்றங்கள் உள்ளிட்டவற்றை அகழாய்வு மூலம் வெளிக்கொணர்ந்து அவற்றை ஆவணப்படுத்துதல், பகுத்தறிதல் ஆகிய வழிமுறைகள் தொல்லியலில் பின்பற்றப்படுகின்றன.

வரலாற்றுக்கு முற்பட்ட கால மனித வாழ்க்கையை அறிய தொல்லியல் முக்கிய இடம் வகிக்கிறது. எழுத்துச் சான்றுகள் இல்லாத கற்கால மக்களின் வரலாற்றை, அவர்கள் வாழ்ந்த இடங்களை அகழாய்வு செய்வதன் மூலம் அறியமுடிகிறது.

ஆரம்ப காலத்தில் மனிதன் மேய்ச்சல் தொழிலை விட்டுவிட்டு வேளாண்மைக்கு மாறியது, மண்பாண்டங்களை உற்பத்தி செய்தது, தானியங்களை சேமித்தது, செம்பு, இரும்பு போன்ற உலோகங்கள் மூலம் கருவிகள் செய்தது, விலங்குகளைப் பழக்கியது, நடுகற்கள் அமைத்தது ஆகியவற்றை அறியவும் தொல்லியல் உதவுகிறது.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அழகன்குளம், கீழடி உள்ளிட்ட இடங்களில் மேற்கொண்ட அகழாய்வுகளின் போது நிலத்தை ஊடுருவிச் செல்லும் ரேடார், தெர்மோமேப்பிங், மேக்னடோமீட்டர் ஆகிய புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, " இளைய தலைமுறையினரிடம் தொல்லியலை அறிந்துகொள்ளும் ஆர்வத்தை உருவாக்கி, மரபுசார் சின்னங்களை நேரில் பார்த்து போற்றிப் பாதுகாக்கும் மனப்பான்மை வளர்க்கப்படவேண்டும்.

இம்மாதம் முழுவதும் தொல்லியல் சார்ந்த இடங்களைப் பார்வையிடும் மரபுநடை நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், கல்வெட்டு பயிற்சிகள் போன்றவற்றை அரசும், அரசு சாரா அமைப்புகளும் நடத்தி விழிப்புணர்வை உருவாக்கவேண்டும்" என்று கூறினார்.

அகழாய்வு முறைகள்:

அகழாய்வு செய்ய வேண்டிய பகுதியினைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைச் சேகரித்து, பிற ஆய்வாளர்களால் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்டுள்ளதா என அறிந்துகொண்டு, ஊரின் முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து அவ்வூர் பற்றிய செவிவழிச் செய்திகளைச் சேகரித்து மேற்பரப்பாய்வு செய்யவேண்டும்.

இதன் அடிப்படையில் மாநில அரசின் நிதி ஒதுக்கீடு பெற்று, அகழாய்வு செய்ய இந்திய தொல்லியல் துறை (ASI) அனுமதி பெறவேண்டும்.

பின் அப்பகுதி அமைந்துள்ள மாவட்டத்தின் ஆட்சியர், ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்டோருக்கு அப்பகுதியின் வரலாற்றுச் சிறப்பினை கணினி வழி நிழற்படக் காட்சி மூலம் விளக்க வேண்டும்.

அகழாய்வு முடிந்ததும் அப்பகுதியை மீண்டும் மண்ணிட்டு மூடி நில உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x