Last Updated : 23 Jul, 2015 09:16 AM

 

Published : 23 Jul 2015 09:16 AM
Last Updated : 23 Jul 2015 09:16 AM

இன்று அன்று | 1856 ஜூலை 23: இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை

“அன்பு மாணவனே! உனக்குக் கணித அறிவு பிரகாசமாக உள்ளது. கணிதத்தைச் சிறப்புப் பாடமாகப் படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு” என்றனர் கல்லூரி நுழைவுத் தேர்வு நடத்திய பேராசிரியர்கள். அதற்கு, “என்னுடைய நாடு அடிமைப்பட்டுத் துன்புற்றுக் கிடக்கிறது. சுதந்திர தாகம் கொண்ட மக்கள் அடிக்கடி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அவர்களுக் காக வாதாடி, அவர்களைக் காப்பாற்றக்கூடிய தேசப்பற்று மிகுந்த வழக்கறிஞர்களைத்தான் என் நாடு எதிர்பார்க்கிறது. அந்த ஒரே காரணத்துக்காகவே நான் சட்டம் படிக்க விரும்புகிறேன்!” என்று உத்வேகத்தோடு பேசினார் ஒரு இளைஞர். தன் விருப்பம்போலவே சட்டம் பயின்று, பல தேச பக்தர்களுக்காக வாதாடி, அவர்களைச் சிறையிலிருந்து மீட்டார். இந்தியத் தேசிய இயக்கத்தின் தந்தை என அழைக்கப் பட்ட அந்த இளைஞர்தான் பால கங்காதர திலகர்.

1856 ஜூலை 23-ல் மகாராஷ்டிரத்தின் ரத்தினகிரி என்ற இடத்தில் பிறந்தார் பால கங்காதர திலகர். இந்தியாவின் வளம் எவ்வாறு ஆங்கிலேயர்களால் சுரண்டப்படுகிறது என்பதைப் பதிவுசெய்த புத்தகங்கள், அவருக்குள் சுதந்திர வேட்கையை எழுப்பின. சட்டப் படிப்பை முடித்த பின்னர் 1881-ல் தன் நண்பர்களோடு இணைந்து ‘கேசரி’ என்னும் மராத்தி மொழி பத்திரிகையையும், ‘மராட்டா’ என்னும் ஆங்கில மொழிப் பத்திரிகையையும் தொடங்கினார். ஆங்கிலேயர் ஆட்சியின் அவலங்களைத் துணிச்சலாக விமர்சித்தார். இரண்டே ஆண்டுகளில் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் பத்திரிகை ஆனது ‘கேசரி’.

1889-ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1895-ல் பூனா முனிசிபல் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், எந்த அதிகாரமும் அப்போது அவருக்கு இல்லை. அதே காலகட்டத்தில் பம்பாயிலும் பூனாவிலும் பிளேக் நோய் தீவிரமாகப் பரவியது. அதைத் தடுக்க பிரிட்டிஷ் அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, திலகர் சுயமாக மருத்துவமனை ஆரம்பித்தார். ஆங்கிலேயரின் அலட்சியப்போக்கைக் கண்டித்துப் பத்திரிகைகளிலும் எழுதினார். இதனால் 1897-ல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஓராண்டு சிறை தண்டனை முடிந்து வெளிவந்தபோது, மக்களின் செல்வாக்கு பெற்ற தலைவராக மாறினார். 1905-ல் லார்டு கர்ஸன் வங்காளத்தை இரண்டாகப் பிளவு படுத்தியதைக் கடுமையாக எதிர்த்தார். சுதேசிப் பொருட்களை ஆதரித்து, அந்நிய நாட்டு உற்பத்தியைப் புறந்தள்ளினார். அவர் முன்வைத்த போராட்டம் தான் பின்னாளில் காந்தியடிகளால் ஒத்துழையாமை இயக்கமாக உருமாற்றப்பட்டது. உலகம் முழுவதும் நிகழ்ந்துவந்த தீவிரவாதச் செயல்களைப் பாராட்டி கேசரி இதழில் தலையங்கம் எழுதினார். இதனால் கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். “சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை நான் பெறுவேன்” என்ற முழக்கத்துடன் இந்திய விடுதலைப் போராளியாக இறுதிவரை வாழ்ந்தவர் திலகர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x