Published : 13 Oct 2019 14:37 pm

Updated : 13 Oct 2019 14:37 pm

 

Published : 13 Oct 2019 02:37 PM
Last Updated : 13 Oct 2019 02:37 PM

ரஷ்ய ராக்கெட் மியூசியங்களில் தமிழக மாணவர்கள்: சிறப்பு அனுமதி வழங்கியது ரஷ்யக் குடியரசு

tamil-students-in-russia-rocket-museum

விண்வெளி அறிவியல் மற்றும் ராக்கெட் தொழில்நுட்பத்தில் முன்னோடி தேசமாக விளங்கிவருகிறது ரஷ்யா. விண்வெளிக்கு முதன்முதலில் மனிதனையும் செயற்கைக்கோளையும் அனுப்பிவைத்த ரஷ்யா, தனது விண்வெளிச் சாதனைகளின் வரலாற்றை விளக்கும் முதல் விண்வெளி அருங்காட்சியகத்தை 46 ஆண்டுகளுக்கு முன்பே செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரத்தில் நிறுவியது. தற்போது ரஷ்யாவில் பத்துக்கும் அதிகமான விண்வெளி மியூசியங்கள் உள்ளன. அவற்றில், விண்வெளி அறிவியல் தொழில்நுட்பத்தில் ரஷ்யா அடைந்துவரும் படிநிலை வளர்ச்சிகள் வியப்பூட்டும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றைக் காண விரும்பும் தமிழக மாணவர்களுக்கு அனுமதி கிடைக்காத நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் இந்தியாவுக்கான ரஷ்யக் கலாச்சார தூதரகத்தின் ஒரு அங்கமாகச் செயல்பட்டுவரும் இந்திய - ரஷ்ய வர்த்தக சபைக்கும் (INDO RUSSIAN CHAMBER OF COMMERCE & INDUSTRIES), ரஷ்ய நாட்டின் விண்வெளி வீரர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆர்வலர்களை ஒருங்கிணைத்துவரும் - தொழில்கள் மற்றும் விண்வெளிச் செயல்பாட்டாளர்களின் சர்வதேச சங்கத்துக்கும் இடையே (Industries And The International Association Of Space Activities Participants) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து 56 பள்ளி மாணவர்கள், நான்கு ஆசிரியர்கள் ஒரு பத்திரிகையாளர் அடங்கிய குழுவினருக்கு விண்வெளிக் கல்விச் சுற்றுலாவுக்கான அனுமதியை வழங்கியது ரஷ்யக் குடியரசு.


விண்வெளி நினைவுகள்

ரஷ்யாவுக்கான இந்தக் கல்விச் சுற்றுலாவில் சென்னையைச் சேர்ந்த வேலம்மாள் பள்ளியின் மாணவ, மாணவியர் பங்குபெற்றனர். கல்விச் சுற்றுலா குழு, விமானம் மூலம் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவை அடைந்தபின் அங்கிருந்து செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் நகருக்குப் பயணித்தது. அங்கே, பேரரசன் முதலாம் பீட்டரால் 17-ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட கோட்டையானது, தற்போது மாநில அருங்காட்சியமாக விளங்கி வருகிறது. அதன் ஒருபகுதியாக, சோவியத் அரசால் நிறுவப்பட்டிருக்கும் ‘காஸ்மோநாடிக்ஸ் அண்ட் ராக்கெட் டெக்னாஜி மியூசிய’த்தை (Museum of Cosmonautics and Rocket Technology) மாணவர்கள் கண்டு களித்தனர்.

இங்கே, புகழ்பெற்ற ரஷ்யப் பொறியாளர் வி.பி.குளுசோவ் வடிவமைத்த ராக்கெட் இன்ஜின்களின் அசல் மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன. இவை, சோவியத் ரஷ்யாவின் தொடக்க கால விண்வெளித் திட்டங்களில் பயன்படுத்தப்பட்டவை. இவற்றுடன், விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குச் சென்று, பின்னர் பூமிக்குத் திரும்பிவந்த ‘ரீஎண்ட்ரி கேப்சூல்கள்’, முன்னாள் சோவியத் விண்வெளி வீரர்கள் பயன்படுத்திய விண்வெளி உடைகள், வானில் மிதந்துகொண்டிருக்கும் ரஷ்யாவின் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 161 நாட்கள் பறந்த ரஷ்யக் கொடி உட்பட, அபூர்மான பொருட்களும் மாடல்களும் அக்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்ததை மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கண்டு, கேட்டு அறிந்தனர்.

முத்தாய்ப்பாக அந்த அருங்காட்சியகத்தில் மாணவர்கள் அனைவரையும் சந்தித்து உரையாடினார் ரஷ்ய விண்வெளி வீரர்கள் கழகத்தின் துணைத் தலைவரும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் தேர்வுக்குழுவில் பணியாற்றியவருமான முஷ்கின் அல்யேக் பெட்ரோவிச். விண்வெளி அறிவியல் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொண்டதில் ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்பின் தருணங்களை நினைவுகூர்ந்து பேசிய அவர், தற்கால விண்வெளி அறிவியல் குறித்த மாணவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார். மேலும், ரஷ்ய விண்வெளி மியூசியங்களைக் காண வருகை தந்த தமிழக மாணவர்களைக் கௌரவிக்கும்விதமாக, சுற்றுலாக் குழுவில் இடம்பெற்றிருந்த அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

இரண்டாம் இடம்

ஒன்றேபோல் தோற்றமளிக்கும் பழமையான கட்டிடங்கள், காணும் இடங்களில் எல்லாம் அரண்மனைகள், பிரம்மாண்ட ஆர்த்தொடாக்ஸ் தேவாலயங்கள் எனப் பல நூற்றாண்டு வரலாற்றுக்கான நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்துவருகிறது செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரம். அதன் உலகப் புகழ்பெற்ற ‘ஹெர்மிட்டேஜ்’ வரலாற்று மியூசியத்தைச் சுற்றுலாவின் மூன்றாம் நாளில் மாணவ, மாணவியர் கண்டுகளித்தனர். கப்பல்களும் சுற்றுலாப் படகுகளும் ஓடும் நேவா நதிக்கரையில் அமைந்துள்ள அது, உலகின் இரண்டாம் பெரிய மியூசியமாகும். அதில், ரஷ்யாவை ஆண்ட அரசர்கள், அரசிகள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களது ஓவியங்கள், சிற்பங்கள், எகிப்திய மம்மி உட்பட, உலகம் முழுவதும் இருந்து தருவிக்கப்பட்ட பல்வேறு அரிய பொக்கிஷங்கள். பாதுகாக்கப்பட்டு வருவதைக் கண்டு மகிழ்ந்தனர்.

மாஸ்கோ மற்றும் கலூகா

நான்காம் நாள் செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரிலிருந்து ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவுக்கு புல்லட் ரயிலில் பயணித்தனர். 1980-ல் மாஸ்கோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தபோது, பன்னாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக 25 மாடிகள் 2000 அறைகளுடன் ‘விண்வெளி’ என்ற பெயருடன் சோவியத் அரசால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான ‘ஹோட்டல் காஸ்மாஸ்’ நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டனர்.

அங்கிருந்து உலகின் முதல் விண்வெளி வீரரான யூரி ககாரின் பெயரால் நிறுவப்பட்டிருக்கும் ரஷ்யாவின் விண்வெளி வீரர்கள் பயிற்சி மையத்துக்கு (Yuri Gagarin Cosmonaut Training Center - GCTC) மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். ‘ஸ்டார் சிட்டி’ என்ற பெயருடன் ரஷ்ய ராணுவத்தின் பல அடுக்குப் பாதுகாப்பில் இருக்கும் இந்தப் பயிற்சி மையத்தில், பாதுகாப்புச் சோதனைகளுக்குப் பின் மாணவ, மாணவியர் அனுமதிக்கப்பட்டனர். இங்கே ரஷ்ய மற்றும் இந்திய விண்வெளி வீரர்கள் நேரடியாக பயிற்சிபெறும் பல்வேறு இடங்களையும் வானில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் விண்வெளி நிலைத்தின் மாதிரியையும் உள்ளே சென்று பார்த்து ரசித்தனர்.

சுற்றுலாவின் ஐந்தாம் நாளில் மாஸ்கோ நகரத்திலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கலூகா (Kaluga) நகரத்துக்குப் பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். இயற்கை எழில் நிறைந்த மலை நகரமான இங்கேதான் வாண்வெளி அறிவியலின் தந்தை எனப் போற்றப்படும் கே.இ. சியோல்கோவ்ஸ்கி (K.E.Tsiolkovsky) வாழ்ந்தார். இவரது பெயரால் இங்கே அமைக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய வாண்வெளி அருங்காட்சியகமும் பிளானட்டோரியமும் ரஷ்ய வாண்வெளியின் அறிவியல் தொழில்நுட்ப வரலாற்றின் முழுமையை மாணவ, மாணவ மாணவிகளுக்கு உணர்த்தின.

அடுத்துவந்த மூன்று தினங்கள் மாஸ்கோ மாநகரில் அமைக்கப்பட்டிருக்கும் மேலும் இரு முக்கிய வாண்வெளி மியூசியங்களைப் பார்வையிட்டனர். சோவியத் ரஷ்யாவின் வாண்வெளிச் சாதனைகளின் பின்னால் தொழில்நுட்ப மூளையாகச் செயல்பட்டுத் தனது பெயரை வெளிப்படுத்தாமலேயே வாழ்ந்து மறைந்த எஸ்.பி. கோராலவின் அலுலக அறை உட்பட, ரஷ்யாவின் விண்வெளிச் சாதனைகளை தேதி வாரியாக விளக்கும் ஆர்.எஸ்.சி.எனர்ஜியா மியூசியம் அவற்றில் ஒன்று. இங்கே, விண்வெளி வீரர்கள் விண்வெளிக்குச் சென்று பின்னர் பூமிக்குத் திரும்பிவந்த பல ‘ரீ எண்ட்ரி கேப்சூல்’கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் விண்வெளிக்கு முதன்முதலில் சென்ற மனிதரான யூரி ககாரின் விண்வெளி சென்று திரும்பி வந்த ‘ரீ எண்ட்ரி கேப்சூலும் ஒன்று’. அதில் மாணவ, மாணவிகள் உள்ளே சென்று புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

இந்தோ ரஷ்ய வர்த்தக சபையின் சார்பில் அதன் செயலாளர் பி.தங்கப்பன் ஒருங்கிணைந்த இந்த விண்வெளிக் கல்விச் சுற்றுலாவில் சென்னை வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளியின் தாளாளர் வேல்மோகன், முதல்வர் ஹேமலதா ஆகியோரின் தலைமையில் மாணவ, மாணவிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

- ஜெயந்தன்

தொடர்புக்கு:jesudoss.c@hindutamil.co.in


Tamil Students in Russia Rocket Museumரஷ்ய ராக்கெட் மியூசியங்களில் தமிழக மாணவர்கள்: சிறப்பு அனுமதி வழங்கியது ரஷ்யக் குடியரசு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author