

தமிழ் சினிமாவுக்கும் இலக்கியவாதிகளுக்கும் உள்ள உறவு என்பது தாமரை இலை தண்ணீராகத்தான் அந்தக் காலத்தில் இருந்தே இருந்து வருகிறது.
தமிழ் எழுத்தாளர்களின் நாவலை, சிறுகதைகளை அவ்வப்போது தமிழ் சினிமா பயன்படுத்திக்கொண்டு வருகிறது. வை. மு. கோதைநாயகி அம்மாளின் 'அனாதைப் பெண்' , கொத்த மங்கலம் சுப்புவின் 'தில்லானா மோகனாம்பாள்’, வடுவூர் கே. துரைசாமி ஐயங்காரின் 'மேனகா’, கல்கியின் 'தியாக பூமி', நாமக்கல் ராமலிங்கத்தின் ‘மலைக்கள்ளன்’, அகிலனின் ‘பாவை விளக்கு’ஆகியவை திரைப்படங்களாக மக்கள் வரவேற்பைப் பெற்றதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
பின்னாட்களில் இயக்குநர் மகேந்திரன், புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’, சிவசங்கரியின் ‘நண்டு’, உமா சந்திரனின் ‘முள்ளும் மலரும்’ போன்ற கதைகளை திரைப்படமாக இயக்கியிருக்கிறார். கடந்த வாரம் வெளியான ‘அசுரன்’ படத்தின் கதை பூமணியின் ‘வெக்கை’ நாவலை அடியொற்றி எடுக்கப்பட்ட அதிஅற்புதமான திரைப்படமாகும்.
தமிழ் இலக்கியப் பரப்பில் மிகச் சிறந்த கவிஞர்களாக அறியப்பட்ட கண்ணதாசன், கவி.கா.மு.ஷெரீப், உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமய்யா தாஸ், கவியரசு கண்ணதாசன், உவமைக் கவிஞர் சுரதா, வைரமுத்து, மு.மேத்தா, நா.முத்துக்குமார், யுகபாரதி போன்றோரை பாடல் எழுதுவதற்கு மட்டும் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டது தமிழ் சினிமா. இதில் புதுமைப்பித்தன் தொடங்கி... பாலகுமாரன், சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ஜெயமோகன் வரை ஆகச்சிறந்த எழுத்தாளர்களை தங்கள் திரைப்படங்களுக்கு அவ்வப்போது வசனம் எழுத வைத்துள்ளனர் சில தமிழ் சினிமா இயக்குநர்கள். இதுதான் இலக்கியவாதிகளுக்கும் தமிழ் சினிமாவுக்கும் உள்ள தொடர்பு.
கவிக்கோ அப்துல்ரகுமானை வெகுவாக ரசிக்கிற ஒரு சினிமாக்காரர் கவிக்கோவை சினிமாவுக்குப் பாட்டெழுத அழைத்தபோது, ''அம்மிகொத்துவதற்கு சிற்பி எதற்கு?'' என்று சொல்லி கவிக்கோ நாகரிமாக வர மறுத்துவிட்டார் என்பது நேற்றைய இலக்கிய வரலாறாகும்.
இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் வசனம் எழுத புகுந்துள்ளார் எழுத்தாளர் ஜி.ஆர்.சுரேந்தர்நாத். நேற்று வெளியான 'பெட்ரோமாக்ஸ்' என்கிற திரைப்படத்தில் வசனம் எழுதியுள்ள இவரை நேற்று சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
ஜி.ஆர்.சுரேந்தர்நாத் இதுவரையில் 18 நூல்களை எழுதியுள்ளார். இதில் தீராக்காதல், மதுவந்தி, இயதயத்தை திருடுகிறாய், ஏதோ மாயம் செய்கிறாய் போன்ற படைப்புகள் இலக்கிய வாசகப் பரப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படைப்புகளாகும்.
2013-ம் ஆண்டு, பிரபலமான வார இதழில் ஜி.ஆர்.சுரேந்தர்நாத் எழுதியிருந்த ‘இளையராஜா’என்கிற சிறுகதை இவருக்கு திரைத்துறையிலும், வெகுஜன வாசகப் பரப்பிலும் மிகுந்த வாழ்த்துகளைக் குவித்தது. இசைஞானி இளையராஜாவே அழைத்துப் பாராட்டும் வகையில் அந்தச் சிறுகதை அமைந்திருந்தது.
ஜி.ஆர்.சுரேந்தர்நாத் இதுவரை 125-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 9 நாவல்கள், எழுதியுள்ளார். 'இந்து தமிழ்' நாளிதழின் 'இளமை புதுமை' இணைப்பிதழில் இவர் எழுதியிருந்த ‘வேலையற்றவனின் டைரி’ என்கிற தொடர் கட்டுரை வாரந்தோறும் ஏராளமான வாசகர்களின் பாராட்டுதலைப் பெற்றதுடன் தனி நூலாகவும் வெளிவந்துள்ளது. அண்மையில் இவர் ‘காமதேனு’ இதழில் எழுதியிருந்த ‘காதல் ஸ்கொயர்’ என்ற தொடர் கதையும் விரைவில் தனி நூலாக்கம் பெற இருக்கிறது.
இந்நிலையில்தான் ஜி.ஆர்.சுரேந்தர்நாத் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படத்தில் வசனகர்த்தாவாக அவதாரம் எடுத்துள்ளார். தமன்னா, யோகிபாபு, முனீஸ்காந்த், காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள இப்படத்தில் வசனகர்த்தாவாக வலம் வர ஆரம்பித்திருக்கிற இந்த எழுத்தாளரை வரவேற்பொம்... வாழ்த்துவோம்.
- மானா பாஸ்கரன்