Published : 11 Oct 2019 06:34 PM
Last Updated : 11 Oct 2019 06:34 PM

இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் சோர்வளிக்கின்றன - மைக்கேல் வான் நெத்தியடி: நெட்டிசன்கள் பதிலடி

இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் உண்மையில் மிகவும் சோர்வூட்டக்கூடியதாக இருக்கின்றன என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தன் ட்விட்டரில் தெரிவிக்க அதற்கு எப்போதும், எப்படியிருந்தாலும், இந்திய கிரிக்கெட்டை பாராட்டியே தீர வேண்டியிருக்கும் நெட்டிசன்கள் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

இதுவரை இந்திய அணியில் மயங்க் அகர்வால் இரட்டைச்சதம், ரோஹித் சர்மா இரண்டு சதங்கள், மயங்க் அகர்வால் மீண்டும் சதம், விராட் கோலி இரட்டைச் சதம், ஜடேஜா சதத்திற்கு அருகில் என்று இந்திய வீரர்கள் சதங்களை அள்ளிக்குவிக்க தென் ஆப்பிரிக்கா ஒட்டுமொத்தமாகவே சதம் தேறுமா என்று ஆடிவருகின்றனர்.

டாஸ்வெல்லும் அணி போட்டியை வெல்லும் என்ற ரீதியிலான பிட்சைப் பற்றி விமர்சனம் செய்தால் டாஸ் நம் கையில் இல்லையே என்பார்கள். டாஸ் என்ற நடைமுறையையே ஒழித்து விட்டு வேறு சிஸ்டம் பற்றி யோசிக்க வேண்டும், அதே போல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்றால் பிட்ச் போடுவதற்கும் நிபுணத்துவம் தேவை, அதை ஐசிசியே மேற்கொள்ள வேண்டும். ஒரு அணி 600 அடிக்கும் இன்னொரு அணி 5 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகும் என்றால் அது பிட்சா? இது கிரிக்கெட்டா என்ற கேள்வியே நம் ரசிகர்களுக்கு எழ விடாமல் புள்ளிவிவரக் குறிப்புக்குப்பைகளைக் கொடுத்து ஊடகங்கள் இந்திய வீரர்களை மகா வீரர்களாக சித்தரிக்கும் போக்குதான் ‘கிரிக்கெட்’ என்ற பெயரில் இங்கு நடந்து வருகிறது. விமர்சனப் பிரக்ஞை என்பது கிரிக்கெட்டிலும் தேவை என்பது மறக்கடிக்கப்படுகிறது.

இந்நிலையில்தான் உண்மையான கிரிக்கெட்டை விரும்பும் மைக்கேல் வான் போன்றவர்களின் விமர்சனத்தை நேர்மறையாகப் பார்க்க வேண்டியுள்ளது.

அவர், “இந்திய டெஸ்ட் மேட்ச் கிரிக்கெட் பிட்ச்கள் சோர்வூட்டக்கூடியதாக உள்ளன. முதல் 3/4 நாட்கள் பேட்டிங்கிற்கு அதிகபட்ச சாதகமாக பிட்ச்கள் உள்ளன. பவுலர்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் உதவி பிட்ச் தரப்பிலிருந்து தேவை” என்று கூறியுள்ளார்.

இதில் மைக்கேல் வான் செய்யும் தவறு என்னவெனில் 3/4 நாட்களுக்கு பேட்டிங் பிட்சாக இருந்தால்தான் பரவாயில்லையே, ஒன்றரை நாளிலேயே பிட்ச் உடைந்து விடுகிறதே என்பதுதான் பிரச்சினை. உண்மையான் ஸ்பின் பிட்சில் ஆடிவிடலாம், உடைந்த குழிபிட்ச்களில் அயல்நாட்டு வீரர்கள் ஆட முடியாது, நம் வீரர்களுக்கு இந்தக் குழிபிட்ச் கிரிக்கெட் ஆட வந்தது முதல் பழக்கமான ஒன்று என்பதை நாம் கவனிக்க வேண்டும். நிற்க.

மைக்கேல் வான் கருத்திற்கு நெட்டிசன்கள் பலர் அவரைச் சாடியுள்ளனர். அவற்றில் சில:

‘இங்கிலாந்தை விட சிறப்பாகவே உள்ளது, ஒருநாள் விட்டு ஒருநாள் மழை பெய்கிறது, மழைநீர் வடிகால் வசதிகளும் போதவில்லை”

“உங்களால் வெற்றி பெறமுடியவில்லை எனில் நீங்கள் குறைகூறுவீர்கள், இங்கிலாந்து கிரிக்கெட் இதைத்தான் செய்து வருகிறது. அலிஸ்டர் குக் 200 அடித்தபோது எல்லாம் நன்றாக இருந்ததோ” என்று ஒரு வாசகர் கேள்வி எழுப்பினார்.

“இங்கிலாந்து ஒரு அழும் குழந்தை. பவுலிங் பிட்ச் போட்டால் மோசமான பிட்ச், குழிபிட்ச் என்று கதறுவார்கள், இங்கிலாந்து டீம் ஒரு ஜோக், நல்ல பேட்டிங் பிட்சிலும் கூட இந்தியா, ஆஸ்திரேலியா போல் அவர்களால் பேட் செய்ய முடியாது” என்று இன்னொரு ட்விட்டர்வாசி கேலி செய்துள்ளார்.

வான் இந்தியப் பிட்ச்கள் பற்றி விமர்சித்தால் அதற்குப் பதிலாக இங்கிலாந்தைக் குறைகூறுவது முறையல்ல, இந்தியாவில் போடப்பட்ட நல்ல பிட்ச்களைப் பற்றி பேசுவதுதான் சரியாக இருக்கும், ஆனால் புரிகிறது... இப்படி யோசிப்பது கடினம்.

-நட்சத்திரேயன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x