Published : 09 Oct 2019 11:37 AM
Last Updated : 09 Oct 2019 11:37 AM

இன்று கொரிய மொழி நாள்

சியோல்

தாய்மொழி என்பது மனிதர்களின் கலாச்சாரத்தின் அடையாளம். இதன் சிறப்பையும், பெருமையையும் பிறமொழி மக்கள் அறியச் செய்ய தாய்மொழி தினம் பல நாடுகளில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தவகையில் தென் கொரியாவில் ஒவ்வொரு ஆண்டும் தன் மொழி உருவாக்கப்பட்ட நாளான அக்டோபர் 9 ஆம் தேதி 'ஹான்குல் நால்' எனும் பெயரில் கொண்டாடப்படுகிறது.

இதே கொரிய மொழி நாள், வட கொரியாவில் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஜனவரி 15, 1444-ல் கொரியமொழி உருவாக்கப்பட்ட நாள். கொரிய மொழியை அம்மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள் அக்டோபர் 9, 1446 ஆகும். இவ்விரு தினம் அன்றும் வட மற்றும் தென்கொரியாவில் அரசு விடுமுறை அளிக்கப்படுகிறது.

14-வது நூற்றாண்டின் முற்பகுதி வரை கொரிய மக்களுக்கு என்று தனியாக எழுத்து வடிவம் இல்லை. வெறும் பேச்சு மொழி மட்டுமே இருந்தது. பேச்சு மொழியை எழுத்து வடிவில் எழுதிப் படிப்பதற்கு சீனர்களின் 'இடு (Yidu)'என்ற எழுத்து முறையைப் பயன்படுத்தினார்கள்.

கொரியாவில் ‘யாங்பான் (Yang Ban)’என்றழைக்கப்படும் நன்கு படித்த அறிவுஜீவிகளும், அரசர்களும் மட்டுமே சீனமொழியில் புலமை பெற்று இருந்தார்கள். இத்தகைய மொழியை சாதாரணப் பொதுமக்களால் படிக்கவோ, எழுதவோ முடியவில்லை.

இந்த நிலை, ஜோசன் எனும் ராஜவம்சத்தின் நான்காவது அரசரான மாமன்னர் சேஜோங்கின் (Sejong) ஆட்சிக் காலமான கி.பி. 1397–1450 ஆண்டுகளில் மாறியது. தன் நாட்டு மக்கள் தங்கள் உணர்வுகளை எளிய முறையில் வெளிப்படுத்த ஒரு மொழியில்லையே என சேஜோங் வருந்தினார்.

அறிவியல், கலை மற்றும் இலக்கியத்தில் வல்லவரான சேஜோங் சாதாரண மக்களும் பயன்படுத்தக்கூடிய ஒரு எளிய மொழியை உருவாக்கவும் முடிவு செய்தார். தன் அரசவை அறிஞர்களின் பல்லாண்டு கூட்டு ஆராய்ச்சியின் முடிவின் பயனாக கி.பி. 1446 ஆம் ஆண்டு 'ஹுன் மின் ஜோங் இம் (Hun Min Jeong Eum)’ என்ற கொரிய மொழி எழுத்துகளைக் கற்கும் வழிகாட்டிப் புத்தகத்தை வெளியிட்டார்.

இதன்பின் கொரியாவின் கல்வியறிவு மிகச்சிறந்த அளவில் முன்னேற்றம் அடைந்தது. கொரியர்கள் தாங்கள் பேசிய வார்த்தைகளை, ஆழ் மனதில் தோன்றிய எண்ணங்களையும், கருத்துகளையும் சுலபமாக வெளிப்படுத்த ஹன் குல் எழுத்துகள் உதவியாக இருந்தன.

கொரியமொழி உருவாகி 573 ஆண்டுகள் ஆனாலும் அது, 1970-க்குப் பிறகே முழு அளவில் பயன்பாட்டுக்கு வந்தது. அதுவரை கொரிய அரசின் முக்கியப் பணிகள் சீன மொழி அல்லது கொரிய மற்றும் சீன மொழிக் கலப்பில் இருந்தது. இந்நிலை, தற்போது முற்றிலும் மாறிவிட்டது.

'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்' என்றான் பாரதி. இந்தக் கூற்று இந்திய மண்ணில் நடைமுறைப்படுத்தப்படுகிறதோ இல்லையோ அது கொரிய மொழியில் திறன்பட வேகமாக அமலாகிறது. உலகின் சிறந்த அனைத்து துறை நூல்களும் கொரியமொழியில் எழுதப்படுகின்றன. கொரிய அரசு, தன்நாட்டின் மொழியை சர்வதேச நாடுகளுக்குக் கொண்டு செல்வதில் வெற்றி கண்டு வருகிறது.

அறுபது நாடுகளின் 180 இடங்களில் சேஜோங் கல்வி நிறுவனத்தை தொடங்கி கொரிய மொழியை மற்ற நாட்டினர்களுக்கும் கற்றுத் தருகிறார்கள். இந்தியாவிலும் சென்னை உட்பட நான்கு நகரங்களில் இந்த நிறுவனம் உள்ளது. இம்மொழியைக் கற்கும் மற்ற நாட்டினர் தங்கள் கொரிய மொழிப்புலமையை 83 நாடுகளில் உள்ள 291 தேர்வு மையங்களில் தேர்வு எழுதி தங்கள் திறனை ஊக்குவித்துக் கொள்ள முடியும்.

தமிழ் மொழியைப் போல் கொரிய மொழியிலும் உயிர், மெய் மற்றும் உயிர்மெய் எழுத்துகள் உள்ளன. கொரிய மொழியின் அடிப்படையான உயிர் எழுத்துகள் யின்-யாங் கொள்கையின்படி ஆகாயம், நிலம் மற்றும் மனிதன் என்ற மூன்று கூறுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழில் அடிப்படை மெய் எழுத்துகள் ஒலி எழுப்பும் நமது உறுப்புகளான 'நாக்கு, தொண்டை, வாய் மற்றும் பல்' ஆகியவை ஒலி எழுப்பும் அமைப்பின் படியும் உருவாக்கப்பட்டுள்ளது. தினத்தை தமிழில் 'நாள்' என்பது போல் கொரியமொழியிலும் ‘நால்’ என்றே உச்சரிக்கிறார்கள்.

கொரிய மொழி தமிழ் மொழியைப் போல் ஒரு ஒட்டுநிலை மொழிதான். ஆங்கில மொழி தன்னுள் ஆயிரக்கணக்கான லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டாலும் தன் அடிப்படை இலக்கணக் கட்டமைப்பை சிதையாமல் வைத்துள்ளது.

இதுபோல கொரிய மொழி கணக்கற்ற சீன வார்த்தைகளை தன்னுள் வைத்திருந்தாலும் அடிப்படை இலக்கணக் கட்டமைப்பு பல வகைகளில் தமிழ் மொழியுடன் ஒன்றுபட்டிருப்பது நாம் பெருமைப்படவேண்டிய செய்தி.

சில நூறுவருடங்களுக்கு முன் உருவான கொரிய மொழி பிற மொழி பேசும் பல லட்சம் வெளிநாட்டு மக்களை தன்பால் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இதுபோல், ஹான்குல்லை விடப் பல்லாயிரம் வருடம் தொன்மை வாய்ந்த நம் தமிழ் மொழியை பார் எங்கும் பரவிட நம்மாலான முயற்சிகளை எடுப்போம்.

- சுரேஷ்குமார் மந்திரியப்பன்.

(கட்டுரையாளரான முனைவர் சுரேஷ்குமார் மந்திரியப்பன் தென்கொரியாவின் சியோலில் உள்ள சுவான் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறைப் பேராசிரியர். கோயம்புத்தூரைச் சேர்ந்த தமிழரான இவர் தன் தாய்த்தமிழின் மீதான பற்றினால் கொரிய மாணவர்களுக்காக அடிப்படை பேச்சுத்தமிழ் பற்றிய நூல்களை எழுதியுள்ளார். தமிழ்-கொரிய மக்களின் பண்பாடு, மொழி, பழக்கவழங்களின் ஒப்புமைகளைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார்.)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x