

அண்மையில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியானது இலக்கியத் திருவிழாவாக அமைந்திருந்தது. காலத்தின் வாசலில் நின்று மீசை முளைத்த மின்சாரக் கவிஞனின் புகழ்பாடும்.... திருவல்லிக்கேணி மகாகவி சுப்பிரமணிய பாரதியார் இல்லத்தில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாதான் அது!
சித்த மருத்துவத் துறையில் புகழொளி வீசிக்கொண்டிருக்கும் மருத்துவர், கவிஞர் ஜீவரேகாவின் தலைமையில் இயங்கும் தென் சென்னை தமிழ்ச் சங்க அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த அந்த விழா காலை 10 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணிவரை தமிழ் இலக்கிய நேயர்களை மனம் குளிர வைத்தது.
இந்த தென் சென்னை தமிழ்ச் சங்க அறக்கட்டளை விழாவில் கவிஞர் வானரசன் வாசனைத் தமிழால்... புன்சிரிப்பு மத்தாப்புக் கொளுத்தி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க.... தமிழ்த் தாய் வாழ்த்துடன் மணக்க ஆரம்பித்தது....
இவ்விழாவில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்கும் வகையில் குழந்தைகளின் சிறப்பு நடன நிகழ்ச்சியுடன் அழகுத் தோரணம் கட்ட ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கவிஞர் செம்மங்குடி துரையரசனின் தலைமையில் கவியரங்கம் துள்ளல் தமிழை வாசக நெஞ்சங்களில் எல்லாம் தூவி மகிழ்வித்தது.
இக்கவியரங்கில் ஆரோக்கியதாஸ், ஜெயந்தி ராஜகோபால், எஸ்தர் மேரி, அந்தியூர் கோவிந்தன், சேலம் சூர்யநிலா வாசித்த கவிதைகள் கேட்போரை வசியம் செய்தன.
இதை அடுத்து கவிஞர் ஜீவரேகா எழுதியுள்ள நூலைப் பற்றியும், தென் சென்னை தமிழ்ச் சங்க அறக்கட்டளையை வாழ்த்தியும் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் மற்றும் கவிஞர் மானா பாஸ்கரனும் மகிழ்வுரை நிகழ்த்தினர்.
கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் உரையாற்றும் போது,
''சுடர் நிலவே பைந்தமிழே
சொக்க வைக்கும் தேனே
அடர்வனமே அற்புதமே
திணற வைக்கும் மானே
கலங்க வைக்குக் உறவே
கண் திறவாய் வாய்மலராய்
உளமதனைத் தாராய்
என்வரமே பொற்பதமே
எங்கிருக்கின் றாய் நீ
உன்னுமையாள் வாடுகிறாள்
உயிர்ச் சுனையாய் வா நீ'' என்ற கவிஞர் என்கிற ஜீவரேகாவின் கவிதை எடுத்துக்காட்டி அதில் உள்ள கவிதை அலங்காரத்தை பார்வையாளர்களின் நெஞ்சங்களுக்குக் கடத்தினார்.
மானா பாஸ்கரன் பேசும்போது,
''படமரம்
பசுமையாய் காட்சியளித்தது
கிளிகள்'' என்கிற ஜீவரேகாவின் கவிதையை எடுத்துக்காட்டி, அதில் உள்ள நவீன உத்தி மற்றும் ஹைக்கூவின் உச்சத்தையும் சிலாகித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் கலந்துகொண்டு தென் சென்னை தமிழ்ச் சங்க அறக்கட்டளையைச் சிறப்பிக்கும் வகையில் பாராட்டு உரையாற்றியதோடு கவிஞர் ஜீவரேகாவின் ‘மனதோடு பேச வா’ நூலை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினர்.
இந்நிகழ்ச்சியில் இந்ந நூலைப் பற்றி மிக அற்புதமான தமிழுரையை கவிஞர் தமிழ் மணவாளன், இயக்குநரும் கவிஞருமான ராசி அழகப்பன் ஆகியோர் நிகழ்த்தினர். அற்புதமாக அரங்கேறிய இந்த விழாவால் அன்றைய பொழுதில் திருவல்லிக்கேணி பாரதியார் இல்லம்... மேலும் இலக்கிய முகம் சூடிக்கொண்டது.
இவ்விழாவை தென் சென்னை தமிழ்ச் சங்க அறக்கட்டளையின் தலைவர் கவிஞர் ஜீவரேகாவுடன் இணைந்து இந்த அமைப்பின் நிர்வாகிகள் ரகுநந்தன் மற்றும் பேசில்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.