

நாகப்பட்டினத்துக்காரரான கே.ஜி. ஜவர்லால், பொறியியல் முடித்து, துணைப் பொது மேலாளராக ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். எழுத்தின்பால் ஆர்வம் கொண்டவர், குமுதம், சாவி முதலிய பத்திரிகைகளில் சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரின் நகைச்சுவைத் துணுக்குகளோடு கூடிய ஜென் கதைகள் மற்றும் நாவல் வடிவிலான சிலப்பதிகாரம் ஆகிய இரு புத்தகங்கள், கிழக்குப் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளன.
இதயம் பேத்துகிறது என்னும் பெயரில் சிரிக்கவும், ரசிக்கவும், விவாதிக்கவும் ஒரு பல்சுவை வலைத்தளத்தை எழுதி வருகிறார். இயல்பிலேயே அதிகம் நகைச்சுவை உணர்வு கொண்டவரான ஜவர்லாலின் பதிவுகள் முழுக்கவும் கேலியும் கிண்டலும் நிரம்பி வழிகின்றது. யதார்த்த நடையோடு, நகைச்சுவையும் இழையோடுகிற அவரின் பதிவில், சொல்ல வந்த உண்மை நம் பொட்டிலறையும். இதோ அத்தகைய ஒரு பதிவு.
நவீனக் கடவுளர்களாக மாறிவிட்ட பரமசிவனும், பார்வதியும் புவியில் பிறப்பதைப் பற்றிப் பேசுகின்றனர். பிறப்பெடுக்கச் செல்லும் பார்வதிக்கு என்னவாகிறது?
பரிமேலழகர் உரை தெரியும். நரி மேலழகர் உரையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நல்ல குணம் கொண்டவர்களை ஏன் பத்தரை மாற்றுத்தங்கம் என்கிறோம்?
காதலை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படங்களும் எழுதப்பட்ட இலக்கியங்களும் பல வருடங்களாக விற்றுக் கொண்டிருக்கின்றன. காதலின் விஞ்ஞானத்தைக் கொஞ்சம் பார்த்தோமானால், அதற்குத் தரப்படுகிற இலக்கிய அந்தஸ்து பைத்தியக்காரத்தனமாக நமக்குத் தோன்றலாம் என்கிற ஜவர்லால், காதலோடு விஞ்ஞானத்தைச் சேர்த்து, >காதலர் தின மறு ஒளிபரப்பு செய்கிறார்.
பரமசிவனும், பார்வதியும் பொழுது போகாமல் பூலோகத்திற்கு வந்திருந்த கதை தெரியுமா? மனைவி சொல்வதே சரியாக இருக்கும் என, சிவன் ஒத்துக் கொண்டது தெரியுமா?
அரசியல், ஆன்மீகம், கதைகள், கட்டுரைகள், துணுக்குகள் என ஜவர்லாலின் எல்லாப் பக்கங்களிலுமே நக்கலும், நையாண்டியும் மிளிர்ந்து ஒளிர்கிறது. எல்லாத்தளங்களிலும் தடம் பதித்த ஜவர்லால், கவிதைத்தளத்தையும் விட்டுவிடவில்லை.
மழையில் நிற்கிறாய்
பொறாமை
மழைத்துளி மேல்
*
முதலீட்டைத் தின்றால்தான்
விற்பனை தொடரும்
இட்லிக் கடை
*
ஜிப்பைப் போட மறப்பது
மறதி- திறக்கவே மறப்பது
முதுமை
மாமன்னர் அசோகர் காலகட்டத்துக் காதல் கதை தெரியுமா உங்களுக்கு? >கிமுவில் பாலச்சந்தர் கதை
நகைச்சுவையாய்த் தொடங்கும் பதிவுகளை, நறுக்கென்ற கருத்தோடு முடிப்பதும், சீரியஸான தொனியில் எழுதுவதை நகைச்சுவையோடு முடிப்பதும் ஜவர்லாலின் பாணி. இதோ ஒன்று உங்கள் பார்வைக்கு!
நடிக்க வந்தவர்கள் எல்லோரும் சிவாஜியிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். பாட வந்தவர்கள் எல்லோரும் எஸ்.பி.பி யிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். நல்ல டைரக்டர்கள் எல்லோரும் பாலச்சந்தரிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். எழுத வந்தவர்கள் எல்லாரும் சுஜாதாவிடம் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அரசியலுக்கு வருகிறவர்கள் யாருமே ஏன் பெருந்தலைவர் காமராஜரிடம் எதுவுமே கற்றுக் கொள்ளவில்லை?
மந்திரியான முதல் வருஷமே வெள்ளையிலேயே சில கோடிகள் சேர்த்துவிடுகிறார்கள் மஹானுபாவன்கள். கறுப்பில் எவ்வளவோ! காமராஜர் ஆள்தான் கறுப்பே ஒழிய பணம் வெளுப்பில் கூட அவரிடம் இருந்ததில்லை!
கணினி, மென்பொருள், வலைப்பூ, முகப்புத்தகம் முதலியவை பிரபலமாவதற்கு முன்பிருந்தே எழுத்துலகப் பயணத்தை ஆரம்பித்தவர்களில் ஜவர்லாலும் ஒருவர்.
கால ஓட்டத்தின் நீட்சியிலும், தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமலும் பலர் கரைந்து போக, எழுத்தோட்டத்தில் எல்லோருடனும் உற்சாகமாய்ப் பயணிக்கிறார் ஜவர்லால்.
ஜவர்லாலின் வலைப்பூ முகவரி: >இதயம் பேத்துகிறது>
நீங்கள் வாசித்து வரும் நல்ல வலைப்பூ, ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களைப் பரிந்துரைக்க ramaniprabhadevi.s@thehindutamil.co.in என்ற மின்னஞ்சலுக்கு இணைப்புகளை அனுப்பலாமே!