Published : 02 Oct 2019 03:38 PM
Last Updated : 02 Oct 2019 03:38 PM

''காந்தி சிலை வைக்க காசில்லை!'' - கண்டுகொள்ளப்படாத திருச்செங்கோடு காந்தி ஆசிரமம்

புதுப்பாளையம் கிராமத்திற்கு ஒரே பஸ். அதையும் மதியம் 12 மணிக்கு திருச்செங்கோடு பஸ் நிலைய ‘ரேக்’கில் போட்ட டிரைவர், 2.30 மணிக்குத்தான் எடுத்தார். 12 கி.மீ. பயணம். 3.15 மணிக்கு நான் இறங்கிய இடம் காந்தி ஆசிரமம் முகப்பு. ‘கரிச்சி பாளையம் போயிட்டு இதே பஸ் 4 மணிக்குத் திரும்பும். அதுக்குள்ள நீங்க வந்தா ஏறிக்கலாம்’என்றார் இறக்கி விட்ட கண்டக்டர்.

கண் எதிரே வெம்பரப்புக்காடு. பெரிய மதில். அதன் நுழைவிலேயே ஏராள விழுதுகளுடன் பெரிய ஆலமரம். ‘காந்தி ஆசிரமத்தில் உலர்ந்த வேப்பமுத்துகள் வாங்கப்படுகின்றன!’என எழுதப்பட்ட ஒரு சிறிய போர்டு மரத்தடியில். இடது புறம் திரும்பினால் ஒரு சிறு கூரை வீடு. அதில் காந்தி படத்துடன், ‘தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த தின தொடக்க விழா. சத்தியம், அன்பு, கருணை வழி நடப்போம். காந்தி ஆசிரமம் திருச்செங்கோடு!’ பொறிக்கப்பட்டிருந்த வாசகங்கள். வாசித்துக் கொண்டிருந்தவனை எதிர்கொண்டவர் என்.ராமனுஜம். விஷயம் சொன்னதும் ஆசிரமச் செயலாளர் குமாரிடம் அழைத்துச் சென்றார்.

வரிசையாக பெரிய, சிறிய, குட்டியான கட்டிடங்கள். எல்லாமே பழைய காலத்துக் கூரை. காந்தியின் மது ஒழிப்புக் கொள்கை, தீண்டாமை எதிர்ப்பு பொன்மொழிகள் எல்லாம் ஆங்காங்கே போர்டுகளாக, ஓவியங்களாகத் தொங்கின. செயலாளர் குமார் இருந்த அறையும் மூங்கில் சிமிர்கள் வேயப்பட்ட பழங்கால கூரைக்கட்டிடம்தான்.

அவர் நான் அமர்ந்ததும் ஆசிரமம் உற்பத்தி செய்யும் ஃபர்னிச்சர் அயிட்டங்கள், எக்ஸ்பெல்லர் எனப்படும் வேப்ப எண்ணெய் தயாரிப்பு, பார்சோப்பு, குளியல் சோப்பு பற்றியெல்லாம் பட்டியலிட்டார். என் பார்வை அறையெங்கும் சுற்றியது. சுவர்களில் ஜவஹர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேல், திருப்பூர் குமரன், ஜீவா, இந்திரா காந்தி, காமராஜர், டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜாஜி, சி.ஆர்.நரசிம்மன், அப்துல் கலாம் என பழைய படங்களில் அணிவகுப்பு.

‘‘19.03.1925, 13.2.1934ன்னு ரெண்டு முறை இரண்டு முறை காந்தி வந்திருக்கார். 18.12.1932ல் கஸ்தூரிபா வந்தார். அப்புறமா நேரு, லால்பகதூர் சாஸ்திரி, ராஜேந்திரபிரசாத், வல்லபாய் படேல், காமராஜர், ஆர்.வெங்கட்ராமன், கே.கே.ஷா, சி.சுப்பிரமணியம், ம.பொ.சி -ன்னு வராத தலைவர்கள் இல்லை. காந்தி உட்பட பலபேர் ரெண்டு மூணு நாள் இங்கே தங்கியும் இருக்காங்க. முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 8.2.2003-ல் பி.கே.ரத்தினசபாபதி கவுண்டர் சிலையை இங்கே திறந்து வச்சார். ரத்தின சபாபதி ஆசிரமத்திற்கு முதலாவதா நாலு ஏக்கர் நிலம் தந்தவர். அதுக்கப்புறம்தான் 25 ஏக்கர்னு பெருகுச்சு. ரத்தினசபாபதி வேறு யாருமல்ல. ப.சிதம்பரத்தின் மாமியார் செளந்தரா கைலாசத்தின் தாத்தா முறை. அதுதான் அவர் சிலையைத் திறக்க சிதம்பரம் வந்தார். இப்பத்தான் பெரிய தலைவர்கள் யாரும் வர்றதில்லை!’’

இப்படி பேசிய குமார் என்னை அழைத்துச் சென்று ராஜாஜி இல்லம், அங்குள்ள ராஜாஜி சிலை, கைராட்டினம், காந்தி பிரார்த்தனை செய்த மேடை (பலகை எழுதி வைக்கப்பட்டுள்ளது), கொடிக்கம்பம், கதர் உற்பத்தி கூடம், கதர் பொருட்கள் விற்பனை நிலையம், எக்ஸ்பெல்லர் தயாரிப்பு தொழிற்சாலை என பலவற்றையும் சுற்றிக் காண்பித்தார். அங்கெல்லாம் ஓரிருவர் பணியில் இருந்தாலே அதிசயம். பல பூட்டப்பட்டு பாழடைந்தும் கிடந்தது. ராஜாஜி இல்லத்திற்குள் சுதந்திர போராட்டத் தலைவர்களை நினைவுறுத்தும் விதமாய் ஏராளமான புகைப்படங்கள். ராஜாஜி காந்தியுடன், நேருவுடன், லால்பகதூர் சாஸ்திரியுடன், தண்டி யாத்திரை, வேதாரண்யம் யாத்திரை, உப்பு சத்தியாகிரகம். பிரேம் செய்யப்பட்டு பல்வேறு செய்திக்கட்டுரைகள் .

குமார்

‘‘ராஜாஜி காலத்தில் கல்கி கிருஷ்ணமூர்த்தி இதன் மேலாளராக இருந்தார். பள்ளிக்கூடம் ஆதரவற்றோர் இல்லம்னு இருந்துருக்கு. காந்தியப் பிரார்த்தனைகள், மதுவிலக்கு பிரச்சாரம் நடந்துருக்கு. ஆசிரமத்தில் காந்தியவாதிகள் தங்கினாங்க, காந்திய உணவு முறைகள் பின்பற்றப்பட்டனன்னு கேள்விப்பட்டிருக்கேன். அதுல ஏதாச்சும் இப்ப இருக்கா?’’ என்று கேட்டேன்.

‘‘பக்கத்து கிராமங்கள்ல பள்ளிக்கூடம் வந்துடுச்சு. அதுல இங்கே மாணவர்கள் வருகை குறைஞ்சு மூடிட்டாங்க. பால்வாடி இருந்துச்சு. அதுவும் 25 வருஷம் முன்னாலயே நிறுத்தியாச்சு. இப்ப ஆசிரமத்தை சுத்திப் பார்க்க பள்ளிக்கூடம், காலேஜ்லயிருந்து பசங்க வருவாங்க. போவாங்க. அவ்வளவுதான். 1956 கூட்டுறவு சொசைட்டி ஆக்ட்ல காதி இண்டஸ்ட்ரீஸ் கமிஷன் சார்பு நிறுவனமாயிருச்சு. வாசிங் சோப், ஹேண்ட் மேடு ஃபைல்க, பேப்பர், நீம் கேக், நீம் ஆயில், மெத்தை - தலையணை ஸ்டீல் பர்னிச்சர் அயிட்டம்னு உற்பத்தி செய்றோம்.

கதர், பட்டு நெசவு எல்லாம் வெளியே நடக்குது. தறிகாரங்க, சர்க்காக்காரங்கன்னு 500 பேர் இருக்காங்க. அது போக 100 பேர் அலுவலக பணியாளர்கள் இருக்காங்க. இவங்க ரிட்டயர்ட்மென்ட்டுக்கு பணிக்கொடை சலுகைகள் கொடுக்கிறதுக்கே சிரமப்பட வேண்டியிருக்கு. இங்கே உற்பத்தி செய்யறதை வச்சுத்தான் நாங்க செலவு செஞ்சுக்கணும். இதுதான் இங்கே நிலைமை!’’ என்றெல்லாம் கசகசத்தவரிடம், ‘‘உலகமே காந்தியோட 150-வது ஆண்டு பிறந்த தின விழாவை வருஷம் முழுக்க கொண்டாடுது. அப்படி வருஷக் கொண்டாட்டம் ஏதும் இங்கே இல்லையா?’’கேட்கிறேன்.

‘‘காந்தியோட 150-வது பிறந்த தின விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அழைச்சு செஞ்சோம். அது நடந்தது 2018 ஜூன்ல. அப்ப, அதோ அந்த சுவத்துல அந்த 150-வது காந்தி பிறந்த நாள் வாசகங்கள் பொறிச்சோம். இங்கே ராஜாஜி, ரத்தின சபாபதி கவுண்டர் சிலைக இருக்கு. காந்தி சிலை ஒண்ணு வைக்கலாம்னு மட்டும் ஒரு யோசனை. அது முடியல!’’ என்று பதில் சோர்வுடன் வருகிறது.

‘‘காந்தி 150 நிறைவுக்கு என்ன செய்யப்போறீங்க?’’என்றேன் திரும்ப.

‘‘வழக்கம்போலத்தான். பிரார்த்தனை, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி, அன்னதானம், மதுவிலக்கு பிரச்சாரம் எல்லாம் செய்யணும். அதுக்கு யாரைக்கூப்பிடறது... பார்ப்போம்!’’ என்று பொத்தாம்பொதுவாக சொல்லி கைகூப்பி எனக்கு விடை கொடுத்தார் அவர்.

திரும்பி வரும்போது 4 மணி பஸ் போய்விட்டது. என்னை பழைய டி.வி.எஸ்-50ல் கொண்டு வந்து 3 மைல் தள்ளி உள்ள சித்தாளத்தூர் மெயின் ரோட்டில் விட்டார் ஆசிரம ஊழியர் ஒருவர். அவருடன் வரும்போது பேச்சுக் கொடுத்தேன்.

‘‘சபர்மதி ஆசிரமம் போல் பேர் பெற்ற ஆசிரமத்திற்கு வர வசதியா பஸ்கூட இல்லையே. யாரும் கோரிக்கை வைக்கறதில்லையா?’’
‘‘வச்சு என்னங்க செய்யறது? பஸ்காரன் அதை அமல்படுத்தணும்ல? நீங்க வந்த பஸ்ஸையே எடுத்துக்குங்க. 12 மணிக்கும், 2.30மணிக்கும் 2 ட்ரிப் வரணும். ஒரு ட்ரிப் வர்றதில்லை. திருச்செங்கோட்டுலயே போட்டு தூங்கிட்டு 2.30 மணிக்குஒரு டிரிப்தான் வர்றான். இன்னொரு டவுன் பஸ் இருக்குன்னு பேரு. அதுவும் வந்தா, வந்ததுதான். போனா போனதுதான். ஆசிரமத்திலிருந்து மேற்கே 3 மைல் இந்த சித்தாளந்தூர் வேலூர் மெயின் ரோடு. கிழக்கே 3 மைல் போனா மோளியப்பள்ளி, நாமக்கல் மெயின் ரோடு. இங்கே இருக்கிறவங்க டூவீலர்ல ரெண்டுல ஏதாவது ஒரு திக்குல போய் பஸ் ஏறிடறாங்க. அதனாலதான் இந்த நிலைமை. உங்களைப் போல புதுசா வர்றவங்கதான் மாட்டிக்கிறாங்க!’’ என்றார்.

மேடையில் காந்தியம்; ஆசிரமத்தில் ஜி.எஸ்.டி!

‘காந்தியத்தை மேடையில்தான் அரசியல் தலைவர்கள் பேசுகிறார்கள். செயலில் ஒன்றுமேயில்லை!’ என்ற குரல்கள் காந்தி ஆசிரமம் முழுக்க எதிரொலிக்கிறது. அதற்கு காரணம் ஜி.எஸ்.டி. எப்படி? ஆசிரமம் தற்போது இயங்கிக் கொண்டிருப்பதே இங்கு தயாராகும் டெக்ஸ்டைல், ஸ்டீல் பர்னிச்சர், சோப்பு போன்ற குடிசைத் தொழில் மூலமாகத்தான். அதற்கெல்லாம் 5 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை ஜி.எஸ்.டி வரி உள்ளதாம். வெளிமார்க்கெட் ஆசாமிகள் இந்த பொருட்களை பில் போடாமலே கூட விற்று விட முடிகிறது. காந்தி ஆசிரமம் வரிமுறை மீறுவதில்லை. மலிவாக வெளியில் மேற்கண்ட பொருட்கள் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் வருவதேயில்லை. ‘இங்குள்ள பொருட்களுக்கு ஜி.எஸ்.டி விலக்கு தந்தால்தான் ஆசிரமம் பிழைக்கும்!’என்பதே ஆசிரமவாசிகளின் கோரிக்கையாக உள்ளது.

கா.சு.வேலாயுதன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x