Published : 01 Oct 2019 12:12 PM
Last Updated : 01 Oct 2019 12:12 PM

இடம் பொருள் இலக்கியம்:  5- ''சிவாஜி ஒரு சகாப்த கோபுரம்'' - நாட்டுப்புற எழுத்தாளர் பாரததேவி

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் ஓர் எழுத்தாக்கம் வேண்டுமென 'இந்து தமிழ்' இணையதளம் சார்பாக என்னிடம் கேட்டபோது, எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

சிவாஜி கணேசன் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்ற சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும், அந்த அபூர்வக் கலைஞனைப் பற்றி யோசிக்காமல் எழுத கிடைத்த வாய்ப்பாகக் கருதி… இதை நினைத்து நான் ரொம்பவும் பெருமைப்படுகிறேன்.

சிவாஜி கணேசனின் நடிப்பைப் பற்றி எவ்வளவோ எழுதிக் கொண்டே இருக்கலாம். அவருக்கு கொடுக்கும் பாத்திரங்களில் அவர் நடிக்க மாட்டார். அவர்களாகவே அவர் வாழ்ந்து காட்டிவிடுவார். எத்தனையோ நடிகர்கள் 'சிவபெருமான்' வேடமிட்டு திரையில் தோன்றி இருக்கிறார்கள். ஆனால் 'திருவிளையாடல்' படத்தில் சிவாஜி கணேசன் நிஜ சிவபெருமான் போன்றே வந்து எல்லோரையும் பக்தியில் அல்லவா ஆழ்த்திவிட்டார்.

அதோடு கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், கொடிகாத்த குமரன், பாரதியார் இன்னும் சில சரித்திர நாயகர்களை எல்லாம் நாம் கண்ணால் பார்த்ததில்லை. ஆனால், அவர்களை எல்லாம் நினைக்கும்போது நமக்கு சிவாஜி கணேசன்தானே நினைவில் தோன்றுகிறார்.

பிரமிப்பின் உச்சம் தொட்ட கலைஞன்

’தெய்வமகன்’படத்தில் ஒரு காட்சி. அப்பா சிவாஜியை முகம் கோரமான மகன் சிவாஜி பார்க்க வந்திருப்பார். அப்போது, தன் மகனுக்காக மிகவும் வேதனைப்பட்ட அப்பா சிவாஜி, ஒரு பெரிய தொகையை செக்கில் கையெழுத்திட்டு மகனுக்குக் கொடுக்க நினைத்து மேஜையில் வைக்கும்போது இளைய மகனான சிவாஜி அப்பாவின் அறைக்குள் பணம் கேட்பதற்கு என்றே வந்துவிடுவார்.

அப்போது முகம் கோரமான மகன் சிவாஜி சட்டென்று மறைந்துகொள்ள…இளைய சிவாஜி நெளிந்தும், வளைந்தும், கொஞ்சலுமாக பணம் கேட்பார். அந்த வேளையில் மேஜையில் இருக்கும் செக் (காசோலை) அவர் கண்ணில் பட்டுவிடும்.

'தேங்க்யூ டாடி' என்று அவர் அதை சந்தோஷமாக எடுத்துக்கொள்ள, அதற்காக அப்பா சிவாஜி ஒளிந்திருக்கும் மகனிடம் அனுமதி கேட்க, அவர் ஒளிந்துகொண்டே தம்பியைப் பார்த்து பாசத்தோடு கண்கலங்கியவாறு அனுமதி கொடுக்க, அப்பா செக் கொடுத்த சந்தோஷத்தில் இளைய சிவாஜி தன் அப்பாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு துள்ளி ஓட, இதில் யார் நடிப்பை யார் மிஞ்சினார்கள் என்றே தெரியாமல் நாம் பிரமித்துப் போய் நிற்போம்.

'ராஜபார்ட் ரங்கதுரை' படத்தில் அவர் தம்பியாக வரும் ஸ்ரீகாந்தின் மாமனாருக்காக 'அம்மம்மா தம்பி' என்று ஒரு பாட்டு பாடிவிட்டு வேதனையும், கண்ணீருமாக தன் பையையும், சிப்பளா கட்டைகளையும் எடுத்துக்கொண்டு துவண்ட நடையோடு வெளியேறுவாரே சிவாஜி… அந்தக் காட்சி அனைவரின் மனதையும் பிழிந்து எடுத்துவிடும்.

பாரததேவி

நடிப்பு சமுத்திரம்

'கௌரவம்' படத்தில் சிவாஜிக்கு இரட்டை வேடம். அதில் மகனாக வரும் சிவாஜி முதன்முதலாக கோர்ட்டில் வாதாடப் போகிறார். அப்போது தன் பெரியப்பாவின் வாழ்த்துகளைக் கேட்டு அதைப் பெறமுடியாமல் அங்கே சுவரில் தொங்கும் பெரியப்பாவின் பழைய கோட்டை எடுத்துக்கொண்டு, “பெரியப்பா, நீங்கள் ஆசிர்வதிக்காவிட்டால் பரவாயில்லை. உங்க கோட்டை எடுத்துக்கொண்டு போகிறேன். உங்களால் என்னை என்ன செய்ய முடியும்?” என்று கேட்டுவிட்டு, அந்தக் கோட்டை எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டே போவார் பாருங்கள்... அப்போது அவர் முகத்தில் தோன்றும் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் பார்க்கும்போது அவர் சினிமாவுக்காக நடிக்கிறார் என்றே சொல்ல முடியாது.

'அன்னை இல்லம்' என்ற படத்தில், முத்துராமனிடம் தன் காதலியைப் பற்றி 'மவுத் ஆர்கனை' வாசித்தபடியே,,, 'எண்ணிரண்டு பதினாறு வயது' என்று பாடிக்கொண்டே ஒரு நடை நடப்பாரே... நிச்சயமாக, அந்த நடையை யாராலும் நடக்க முடியாது.

'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் சிவாஜி சிங்கப்பூர் போவதைத் தடுப்பதற்காக பத்மினி சண்டைபோட, சிவாஜி சுற்றியுள்ள ஆட்களின் முன்னால் சண்டைபோட நேர்ந்துவிட்டதை எண்ணி அவமானமும், கோபமுமாக ஒரு அழுத்தமான பார்வையோடு பத்மினியிடம் ஒரு சீறு சீறுவார் பாருங்கள்... அதுபோன்று நடிக்க சிவாஜியால் மட்டும்தான் முடியும்.

'கர்ணன்' படத்தில் கர்ணனாக நடித்த சிவாஜி. நெஞ்சில் அம்புகள் தைத்த வேதனையில் கடவாயில் ரத்தம் வடிய பெருமூச்சுவிட்டவாறு உயிருக்குப் போராடும்வேளையில் கிருஷ்ணர் மாறுவேடத்தில் வருவார். வந்தவர் கர்ணனிடம் தர்மம் கேட்பார். ஆனால் கர்ணனோ தன் இயலாமையால் கிருஷ்ணரை சற்று ஏறிட்டுப் பார்ப்பார். அந்தப் பார்வையில் அவர் உயிர் அலைபாய்ந்து மரணத்தை நோக்கி தவித்துக் கொண்டிருப்பது நமக்குத் தெரியவரும்.

இன்னும் ’வசந்தமாளிகை’, ’தங்கப்பதக்கம்’, ’வாழ்க்கை’ என்று சிவாஜி கணேசன் படங்களையும், அதில் அவரது அசர வைக்கும் நடிப்பையும் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

(பாரததேவி - தென் தமிழகத்தில் ராஜபாளையத்துக்கு அருகில் ஒரு கிராமத்தில் இருந்துகொண்டு நாட்டுப்புற இலக்கியங்களை படைக்கும் படைப்பாளி. கி.ராஜநாராயணன் இவரை தனது இலக்கிய மகள் என்றே குறிப்பிடுவார். அவர் சிவாஜி கணேசனின் நடிப்பின் மீது பெருவிருப்பம் கொண்டவர் - அவர் இந்த நாளை பெருமைப்படுத்த எழுதியிருக்கும் கட்டுரை இது. )

சந்திப்பு: மானா பாஸ்கரன்

ஏன் சிவாஜியைப் பிடிக்கிறது?

இன்றைக்கு 50 வயதைத் தாண்டிய தமிழர்களுக்கெல்லாம் சிவாஜி கணேசன் எனும் திரைக் கலைஞரை ஏன் பிடிக்கிறது? ஏனெனில் – அந்த தலைமுறையைச் சேர்ந்த தமிழர்களுக்கு சிவாஜி அண்ணனாக, அப்பாவாக, தாத்தாவாக, அரசனாக, தெய்வ வடிவாக, வக்கீலாக, டாக்டராக, வாத்தியாராகத் தெரிந்தார். அப்போது வந்த சிவாஜி படங்கள் எல்லாம் பெரும்பாலும் குடும்பப் படங்களாக இருந்தன. குடும்ப உறவுகள், குடும்பப் பகை, கணவன் – மனைவி குடும்பத்தில் நிகழும் சின்னச் சின்ன உரசல்கள், அன்பின் திருவிளையாடல்கள், ஆனந்த விழாக்கள், பெரியவர்களுக்கான மரியாதை, விதவிதமான கலைஞர்கள்… என்று ஆர்ப்பரித்து அசைந்தோடும் நதியாக மக்களின் ரசிக விருப்பங்களை பூர்த்தி செய்யும் விடுமுறை விருப்பமாவே சிவாஜி கணேசன் இருந்தார். அவரது 92-வது பிறந்த நாளில் அவரைப் போற்றுவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x