Published : 25 Sep 2019 02:51 PM
Last Updated : 25 Sep 2019 02:51 PM

பாரதிதாசனின் 'இரணியன்': மீண்டும் தவழத் தொடங்கும் முதிர்ந்த நாடகம்

சென்னை எழும்பூர் அருங்காட்சியகக் கலையரங்கத்தில் சமீபத்தில் அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகம் மூத்தவர்கள், நடுத்தர வயதினர், இளைஞர்கள் என எல்லாத் தரப்பு பார்வையாளர்களையும் கொண்டிருந்தது. 1934-ல் இயற்றப்பட்ட பெரும் கருத்துகள் பொதிந்த அந்நாடகம், இந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி 85 ஆண்டுகளை நிறைவு செய்தது. பல தசாப்தங்களைக் கடந்த அந்நாடகம், சம காலத்திற்கு ஏற்ற வகையில் நவீன முறையில் அரங்கேற்றப்பட்டது. பல சிறப்புகளைக் கொண்டிருக்கும் பாரதிதாசன் இயற்றிய 'இரணியன் அல்லது இணையற்ற வீரன்' நாடகம் தான் புதுச்சேரி, கடலூர், சென்னை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், அரங்கேற்றப்பட்டு வருகிறது.

புதுச்சேரி குருவிநத்தத்தைச் சேர்ந்த அரங்க கலைஞர் சி.ராமசாமி, புதுச்சேரியிலும் சிங்கப்பூரிலும் நாடகக் கலை குறித்து கற்றறிந்தவர். அவர், 'இரணியன் அல்லது இணையற்ற வீரன்' நாடகத்திற்கு நெறியாளுகை செய்திருந்தார்.

அரங்கக் கலைஞர் சி.ராமசாமி

தொன்மங்களில் அரக்கனாகச் சித்தரிக்கப்பட்ட இரணியனை, பாரதிதாசன் இயற்றிய 'இரணியன் அல்லது இணையற்ற வீரன்' நாடகம், இன ஆதிக்கம், சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துப் போராடிய திராவிட இன வீரனாக, தமிழ்ச் சிந்தனை கதைநாயகனாக முன்னிறுத்தியது.

தொன்மங்களை மறுவாசிப்பு செய்தல், சாதி, மத, மொழி ஆதிக்கத்தை எதிர்த்தல் உள்ளிட்டவற்றை மையமாகக்கொண்டு பாரதிதாசன் இயற்றிய இந்நாடகம் இரணியன், பிரகலாதன், சித்ரபானு என முக்கியக் கதாபாத்திரங்களைக் கொண்டது. கதைத்தலைவனாக இரணியன், நாடகத்தில் தமிழ் அரசன். புராணங்களில் கடவுள் விரோதியாக இருக்கும் இரணியனை தம்மக்கள் பிற இன ஆதிக்கத்தில் சிக்காமல், தமிழ் நெறியுடன் வாழ ஆதிக்கங்களை எதிர்த்துப் போரிடும் மன்னனாக பாரதிதாசன் எழுதியுள்ளார். ஆனால், இரணியனின் மகன் பிரகலாதன் சூழ்ச்சியாலும் வஞ்சகத்தாலும் தன் தந்தை இரணியனின் கொள்கைகளிலிருந்து நழுவி, வேறு தவறான வழியில் நடைபோடுகிறான். இறுதியில், அந்த சூழ்ச்சியால் இரணியன் கொல்லப்படுகிறான். இதனை இரணியனின் வீர வரலாறாக பாரதிதாசன் சித்தரித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு பாரதிதாசனால் இயற்றப்பட்ட இந்த நாடகத்தை சி.ராமசாமி இயக்கி நெறியாளுகை செய்துள்ளார். இரணியன் நாடகத்தை அரங்கேற்ற அரங்கக் கலைஞர்களுக்கு 6 மாத காலப் பயிற்சி அளித்துள்ளார் நாடக நெறியாளர் ராமசாமி.

முடிசூட்டப்படும் பிரகலாதன்,

நவயுக மாற்றங்களுடன் அரங்கேற்றப்பட்ட நாடகத்தில், பிரேம்நாத் இரணியனாகவும், மாணிக் சுப்பிரமணியம் பிரகலாதனாகவும், அறிவழகன் கட்டியக்காரனாகவும், டெல்பின் சித்ரபானுவாகவும் நடித்திருந்தனர். முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் நாடகக் கலையை முறையாகக் கற்றவர்கள். சமணராஜா என்பவர் இந்நாடகத்திற்கு இசையமைத்துள்ளார். உரைநடை, பாடல் வடிவில் பாரதிதாசன் எழுதிய இந்நாடகத்தை, களரி, இசை, அவ்வப்போது நகைச்சுவை, சமகால அரசியல் எள்ளல், சுயபகடி என நவீனம் கலந்து இந்நாடகத்தை அரங்கேற்றியது 'பிராண்ட் மீடியா'.

நாடகம் உருவாக்கப்பட்ட பின்னணியைப் பகிர்ந்துகொண்ட ராமசாமி, " திடீரென இந்த நாடகத்தை அரங்கேற்றவில்லை. அதற்காக சில ஆய்வுகள் செய்தோம். நாடகத்தின் அரசியல், சமூகப் புரிதல்களை அறிந்துகொள்ள வேண்டியிருந்தது. சூழ்ச்சி செய்து வீழ்த்தப்படுவது தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமல்லாமல் எல்லா சமூகங்களுக்கும் பொருந்தும். இதனை மறுவாசிப்பு செய்து பார்க்க வேண்டும் என நினைத்தோம். இந்த ஆண்டு ஜனவரியில் நாடகத்திற்கான பயிற்சியைத் தொடங்கினோம். கிட்டத்தட்ட 6 மாத காலம் நாடகத்திற்கான வேலைகளைச் செய்திருக்கிறோம். பாரதிதாசன் இயற்றிய இந்த நாடகம், சங்ககால இயல்புகளுடன் எழுதப்பட்டது. அவர் எழுதியது இசை நாடக வடிவில் இருக்கும். விருத்தம், பாடல், காட்சி என இருக்கும். இதனை நாங்கள் சமகாலத்திற்கு ஏற்ப நவீன வடிவத்தில் கொண்டு வந்திருக்கிறோம். இதில் நடிக்கும் கலைஞர்களுக்கும் சவால்கள் உள்ளன. இதுவொரு குழு நாடகம். இதில் நடிக்கும் கலைஞர்கள், ஆடல், பாடல், வசனம், உடல்மொழி என எல்லாத் திறன்களுடனும் இருக்கும் வகையில்தான் அவர்களை உருவாக்கியிருக்கிறேன். அதற்கான பயிற்சிகளுக்கு 6 மாத காலமானது.

பிரகலாதனும் சித்ரபானுவும்

ஆரம்பத்தில், காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறையில் பேராசிரியராக இருக்கும் சுந்தர் காளி என்பவர், தஞ்சாவூரில் தொடர்ச்சியாக நடக்கும் இரணியன் நாடகங்கள், கூத்து குறித்து ஆய்வு செய்தவர். அவருடன் கலந்தாலோசித்தோம். நாடகக் கலையில் தொடர்ந்து இயங்கிவரும் வீ.அரசு, மங்கை உள்ளிட்டவர்களிடம் ஆலோசித்தோம். பாரதிதாசன் குறித்தும் அவரின் பின்புலம் குறித்தும் எந்த காலகட்டத்தில் இந்நாடகத்தை எழுதினார் என்பது குறித்து ஆய்வு செய்தோம். அதுசார்ந்து படிக்கவும் செய்தோம்.

நாடகக் கலைஞர்களை கருத்தியல் ரீதியாகத் தயார்படுத்த வேண்டிய தேவை இருந்தது. உடல், அரசியல் ரீதியாகவும் தயார் செய்தோம். பாரதிதாசன் குறித்த புத்தகங்களை கலைஞர்களுக்குக் கொடுத்து படிக்கக் கொடுத்தோம். முழுநேரப் பயிற்சி அளித்தோம். பாரதிதாசனின் பழைய வீட்டுக்கு அழைத்துச் சென்றோம். குழு ஆலோசனை, கலந்துரையாடல் செய்தோம்" எனக் கூறும் ராமசாமி, கூத்து வடிவமாகவும் இந்நாடகத்தை அரங்கேற்றலாம் என்கிறார்.

குறிப்பிட்ட சமூகத்துக்கு அல்லாமல், உலக அளவில் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் பேசியது இந்த நாடகம்.

இன்றைக்கு நாடக சூழலிலும், திரை நடிப்புச் சூழலிலும் நடிகர்களை உருவாக்க சிலர் மேற்கத்திய முறையிலான பயிற்சி முறைகளைக் கடைபிடிக்கின்றனர். ஆனால், தமிழ் வாழ்க்கை முறை, அன்றாட வேலைகளில் இருந்து பயிற்சிகளைக் கொடுத்து கலைஞர்களை உருவாக்கியிருக்கிறார் ராமசாமி. இந்நாடகத்திற்காக கலைஞர்கள் அனைவருக்கும் களரிப் பயிற்சி, அரங்க விளையாட்டுகள், கவனத்திற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. 85 ஆண்டுகளுக்குப் பிறகு மறுஆக்கம் செய்யப்படுவதால், பார்வையாளர்களும் இந்நாடகத்துடன் ஒன்றிணையும் முறையில் கவனமாக இருந்துள்ளனர். நாடகம் அரங்கேற்றும் மேடை, இடத்துக்கு ஏற்ப அரங்க ஒருங்கிணைப்பை மாற்றிக்கொண்டுள்ளனர்.

சேனாதிபதியும் சித்ரபானுவும் ஒரு காட்சியில்

‘ஒரு பண்பாட்டு விழுமியங்களை உள்வாங்கிய வாழ்க்கை நன்கு பழக்கமாகிய பிறகு, அதுதொடர்பான நடிப்பு எளிதானதாக இருக்கிறது’ என்பது தன் முயற்சியின் அர்த்தத்துக்கு ராமசாமி சொல்லும் சூத்திரம்.

1934-ல் சமூகத்தில் புரையோடியிருந்த பழமைவாதத்தையும், சாதிய, மதவாதத்தையும் எதிர்த்துக் கேள்வியெழுப்பிய இரணியன் நாடகம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. பெரியார் தலைமையில் பாரதிதாசன் முதன்முறையாக இந்நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இந்நாடகத்தில், குத்தூசி குருசாமி இரணியனாகவும், திருவாசகமணி கே.எம்.பாலசுப்பிரமணியம் பிரகலாதனாகவும், சம்பந்தம் காங்கேயனாகவும், ரங்கநாதன் சேனாதிபதியாகவும், டி.என்.ராமன் கஜகேதுவாகவும், தங்கராசு ரிஷியாகவும், கே.கிருஷ்ணசாமி லீலாவதியாகவும், எம்.எஸ்.முத்து சித்பரபானுவாகவும் நடித்தார்கள். 1948- ம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில அரசால் இந்நாடகம் தடை செய்யப்பட்டது. அதன்பிறகு, 1967-ல் திமுக ஆட்சியில் அண்ணா முதல்வராக இருந்தபோதுதான் இந்நாடகத்துக்கான தடை விலக்கப்பட்டுள்ளது.

அரங்கக் கலைஞர்களை பாராட்டிய கி.வீரமணி

தமிழ் நாடக மரபிலும், அரசியல் வரலாற்றிலும் முக்கிய இடம் வகிக்கும் இந்நாடகத்தின் வரலாற்றுப் பின்புலத்தைச் சொல்லும் திராவிட இயக்க ஆய்வாளர் சுபகுணராஜன், “இந்த நாடகம் எழுதப்பட்ட காலம், சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்ப காலம். சுயமரியாதை இயக்கம் தொடங்கி 7-8 ஆண்டுகள்தான் அப்போது ஆனது. இதிகாசங்களும் புராணங்களும் பெருகியிருந்த காலகட்டத்தில் கலை, இலக்கியத் தளத்தில் திராவிட இயக்கத்தின் பலம்பொருந்திய நாடகங்கள் தொடங்கப்பட்ட காலமாக இந்நாடகம் எழுதப்பட்ட காலத்தைக் கருத வேண்டும். இதற்கு பின்புதான் மற்ற திராவிட இயக்க நாடகங்கள் எழுதப்படுகின்றன. பாரதிதாசன் இதனை வலுவான தளத்தில் இருந்து பார்க்கிறார்.

இரணியன் ஒரு அரசன். அவன் தனக்குள்ளேயே கடவுள் தன்மை இருப்பதாக நம்புகிறவன். இரணியன் சுயமரியாதைக்காரன். அவரின் மகன் பிரகலாதன் சுயமரியாதைக்கு எதிரான ஆளாக மாறுகிறான். சில சூழ்ச்சிகளால் அப்படி மாறுகிறான். குறிப்பிட்ட சமூக ஆதிக்கம், ஒருவனை எப்படி மூடநம்பிக்கை அற்றவனாக மாற்றுகிறது என்பதுதான் பிரகலாதனின் கதாபாத்திரம்.

சுபகுணராஜன்

இந்த நாடகம் சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கத்தின் தொடக்கப் புள்ளியிலேயே கலை இலக்கியத் தளத்தில் எதிர்க்குரலை வலுவாக முன்வைத்தது. அதன்பிறகுதான் புலவர் குழந்தையின் ராவண காவியம் வருகிறது. காலத்தால் மிகவும் முக்கிய மாற்று உரையாடலை முன்வைத்த படைப்பு இரணியன் நாடகம். கடைசிக் காட்சிகள் மிகவும் வலுவானவை. அரசா, ஆன்மிகமா என்கிற தர்க்கத்துக்குள் தான் இந்த நாடகமே நிற்கிறது. இது மிகப்பெரிய விவாதம். தடையை மீறியும் திராவிட இயக்கத்தினர் ஆங்காங்கே இந்த நாடகத்தை அரங்கேற்றினர். இதனால் கைது செய்யப்பட்ட திராவிட இயக்கத்தவர்களின் பட்டியல் நீளும். தடை செய்யப்பட்டதால், இந்த நாடகத்தைப் பொது இடங்களில் திராவிட இயக்கத்தினர் வாசித்தனர். தடை விதிக்கும் அளவுக்கு அப்போது மக்கள் மத்தியில் இந்த நாடகம் வரவேற்பைப் பெற்றது," என்கிறார்.

பெரும் கவிஞரான பாரதிதாசன் நாடகத்துறையில் ஆற்றிய பங்களிப்பின் முக்கியமான சாட்சி இந்நாடகம். பாரதிதாசனின் படைப்புகளையும், பங்களிப்புகளையும் விரிவாக ஆய்வு செய்துள்ள முனைவர் ச.சு.இளங்கோவிடம் இந்நாடகம் குறித்துப் பேசினோம். "புராணங்களெல்லாம் மக்களைச் சிந்திக்க முடியாமல் செய்கிறது என்பது பாரதிதாசனின் அடிப்படைக் கருத்து. இந்தக் கருத்தின் அடிப்படையில் தான் இரணியன் நாடத்தை இயற்றியிருப்பார். புராணத்தை மாற்றி இந்திய அறிவுலகத்துக்கு ஏற்றவாறு மாற்றி எழுதினார்" என்றார் ச.சு.இளங்கோ.

தனித்த நாடக மரபையும், வெளிப்பாடுகளையும் கொண்ட திராவிட இயக்க நாடகங்கள், கலைப்பணிகள் சமீப ஆண்டுகளில் எதுவுமே நடப்பதில்லை. திமுகவின் தலைமையும், திராவிடர் கழகச் செயல்பாடுகளும் கலைஞர்களையும், படைப்பாளிகளையும் ஊக்குவிக்கும் வகையில் இல்லை என்கிற குற்றச்சாட்டு சமீபகாலங்களில் அதிகரித்துள்ளது. இந்த நாடகம் அரங்கேற்றப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, கலையுலகில் அடைந்திருக்கும் தொய்வுகளைப் பற்றி தன் உரையிலேயே பதிவு செய்தார்.

திமுக, திராவிடர் கழகம் உள்ளிட்டவை நாடகக் கலையை ஏன் சமகாலத்தில் நிகழ்த்துவதில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த சுபகுணராஜன், "பெரியாரின் கருத்துகள் உட்பட அனைத்தும் பொதுவானதாக மாறிவிட்டது. இம்மாதிரியான கருத்துகளைச் சொல்வது சமூகத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. அதனை பிரத்யேகமாக நாடக வடிவில் சொல்வதன் தேவை குறைந்துவிட்டது" என்கிறார்.

தூசி விழுந்து போயிருக்கும் அரசியல் நாடக மரபை மீண்டும் புதுப்பிக்கும் வண்ணம், தமிழகம் முழுவதும் கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர் வெளிப்படை அரங்க இயக்கத்தின் ராமசாமியும் அவரது குழுவினரும். அவர்களின் முயற்சிக்கு வாழ்த்துகள்.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x