Published : 22 Sep 2019 20:02 pm

Updated : 24 Sep 2019 09:29 am

 

Published : 22 Sep 2019 08:02 PM
Last Updated : 24 Sep 2019 09:29 AM

விபத்தில் மனைவியை இழந்த துக்கத்திலும் மதுக்கடையை மூடப் போராடிய மருத்துவர் ரமேஷ் இப்போது எப்படி இருக்கிறார்?- ஒரு சந்திப்பு

a-meeting-with-dr-ramesh

குடிபோதை ஆசாமிகள் ஏற்படுத்தின விபத்தில் படுகாயம் அடைந்த மகளை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டு, இறந்த மனைவியின் உடலுடன் 6 மணி நேரம் சாலை மறியல் நடத்தி சம்பந்தப்பட்ட மதுபானக் கடையை மூடச்செய்தவர் கணுவாய் டாக்டர் ரமேஷ். இது அனைத்து பத்திரிகை, மீடியா, சமூக வலைதளங்களுக்கும் மூன்று மாதத்திற்கு முந்தைய பரபரப்பு செய்தி.

இன்று வரை அந்த மதுபானக் கடை பூட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில்தான் உள்ளது. அந்த டாக்டரும், படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் மகளும் எப்படியிருக்கிறார்கள்? நேரில் பார்த்து வர புறப்பட்டேன்.

சம்பவத்தைச் சொன்னாலே போதும், கோவை கணுவாய் கிராமத்தில் டாக்டர் வீட்டை எளிதில் அடையாளம் காட்டி விடுகிறார்கள் ஊர் மக்கள். பெரிய வீடு. ஃபோர்டிக்கோ. இரண்டு கார்கள். அழைப்பு மணியை அழுத்தியதும் கதவு திறந்த இளம்பெண், விவரம் சொன்னதும் டாக்டர் வருகிறார்.

முள்ளாய் தாடி. வெளுப்பான சட்டை. டாக்டருக்கான சின்ன அடையாளம் கூட இல்லை. கல்பாக்கம், கூடங்குளம், மீத்தேன் வாயு திட்ட எதிர்ப்பு மற்றும் சூழலியல் விவகாரங்களில் டாக்டர் புகழேந்தியுடன் பணியாற்றிய விஷயங்கள் பற்றியெல்லாம் பேசுகிறார்.

‘‘பொதுவான போராட்டங்களில் பங்கெடுப்பது பெரிய பிரச்சினையே இல்லை. எப்படி சொந்த பாதிப்பிற்கு, உணர்ச்சிகள் கொந்தளிக்கிற அந்த நேரத்தில் ஒரு டாக்டர் தனிமனிதனா நின்னு ஆறு மணிநேரம் பெரும் போராளியா போராட்டம் செய்யத் தோணுச்சு?’’

‘‘அது என் மனைவி மீதான காதல். அவ எங்கிட்ட செவிலியரா வந்து 23 வருஷத்துக்கு மேல ஆச்சு. பிறந்து வளர்ந்ததுதான் கேரளா. இங்குள்ள மலைகளையும், காடுகளையும், நதிகளையும், நீரோடைகளையும் பழங்குடி மக்களையம் ரொம்பவுமே நேசிச்சா. அவளுக்கான மரணம் அவளுக்கானது மட்டுமல்ல. இங்குள்ள ஜனங்களுக்கானது. நான் உட்கார்ந்தேன். ஜனங்களும் உக்காந்துட்டாங்க!’’ என்றவர் அப்படியே புருவத்தை நெரித்து அன்று நடந்த சம்பவங்களுக்குள் சென்றார்..

‘‘அன்னெய்க்கு சாயங்காலம் தகவல் வந்து நான் எதிர்ல போகும்போதே பொண்ணை எடுத்துட்டு ஆம்புலன்ஸ் வந்துடுச்சு. மகளோட ஒரு தொடை ரெண்டா உடைஞ்சுடுச்சு. கண், காது மூக்குன்னு எங்கே பாரு ரத்தம். வலியால துடிக்கிறா. அதுல வந்தவங்க பேச்சிலயே என் மனைவிக்கு அது நடந்துடுச்சுன்னு புரிஞ்சுடுச்சு. அந்த நிலையிலதான் மகளை ஆஸ்பத்திரியில் அட்மிட் செஞ்சுட்டு டாக்டர்களுக்கும் யோசனைகள் சொல்லிட்டு கிளம்பறேன்.

ஸ்பாட்ல துப்பட்டால போர்த்தி மனைவி. தொட்டுப் பார்க்கிறேன். கதகதப்பு இருக்கு. ரத்தம் அப்படியே ஓடி சாலையோர மண்ணுக்குள்ளே ஊறி நிற்குது. தாங்கலை. அதே சாலையில நானும், மனைவியும், மகளும் சேர்ந்தே கூட அந்த வழியில் போகும்போது நிறைய டிரங்க் அண்ட் டிரைவ் விபத்துகளைப் பார்த்திருக்கோம். ஒரு தடவை காலையில ஒரு லாரிக்காரர் ஆட்டுமந்தையில விட்டு 50 ஆடுக குளோஸ். ரோடு முழுக்க ரத்த ஆறு. மனுஷ உயிருக்கும் இங்கே மரியாதை இல்லை. மதுவினால இந்தப் பகுதியில மட்டும் நூத்துக்கணக்குல செத்திருக்காங்க. அதுல 150 விதவைப் பெண்கள் இருக்காங்க. பேச்சா பேசறாங்க ஜனங்க. அந்த எடத்துலதான் என் மனைவியும். ‘இனி ஒண்ணு இப்படி நடக்கக்கூடாது!’ என் மனைவிதான் எங்கூட பேசறா. அங்கேயே உட்கார்ந்துடறேன். ராத்திரி ஏழு, எட்டு மணி. ஜம்பு கண்டி கிராமம். யானைக்காடு. கூட இருந்தவங்க அப்படியே இருந்தாங்க. துளி பயப்படல.

‘அப்புறம்தான் எங்களை நம்புங்க’ன்னு இன்ஸ்பெக்டர் வர்றார். உங்க மனைவி ஹெல்மெட் போடலை. ‘ராங்க் ரைடிங்’ல வந்திருக்கார்ங்கிறார். ‘என்னய்யா இது ஹெல்மெட் ரோட்டுல சிதறிக்கிடக்கு., பிரில்லிமெரி இன்வெஸ்டிகேசன் கூட செய்யாம மூணு மணி நேரம் என்ன பண்ணிட்டிருந்தீங்க?’ன்னு யார் குரலோ உயருது. உடனே இன்ஸ்பெக்டர் குரல் தாழுது. ‘நாங்க அந்த வண்டில வந்தவங்க மேல சிவியர் ஆக்சன் எடுக்கிறோம். கடுமையான செக்சன் போட்டு வெளியே வராம பண்றோம்!’ங்கிறார்.

மூணு பேர் வந்திருக்காங்க. குடிச்சிருக்காங்க. பொண்ணு வண்டியில வந்ததைப் பார்த்ததும் வீலிங் பண்ணியிருக்காங்க. இவங்க வண்டி மேல விட்டிருக்காங்க. எப்பவும் நடக்கிறதுதான். ‘அது தப்பு செய்யாதே’ன்னு ஊர்க்காரங்க பசங்களுக்கு சொல்லி வளர்த்திருக்கணும். செய்யல. குடிக்கிறது தப்புன்னு அரசாங்கமாவது சொல்லணும். அதுவே சாராயக்கடை நடத்துது. இங்கே சமூகம் பலவேறா உடைஞ்சு இருக்கு. அதுக்கு இந்த பசங்களுக்கு கடுங்காவல் தண்டனைன்னா எப்படி?ன்னு கேட்கிறோம். ‘இனி இங்கே சாராயக்கடை இருக்காது, எடுத்துடுவோம்!’னு வாய்மொழியா சொல்றாங்க. ‘அரசுங்கிறது வாய்மொழி உத்தரவாதத்திலா இயங்குது? இந்த எல்கேஜி பாடம் கூடவா உங்களுக்குத் தெரியாது?’ கேட்கிறோம். அதுலதான் தாசில்தார் ஓடி வர்றார். மதுக்கடை மூட தற்காலிகமா ஒரு உத்தரவு போடறார்!’’பொங்கி வந்த உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொள்கிறார். பிறகு தொடர்கிறார்.

‘‘எனக்கும் என் மனைவிக்கும் வெவ்வேற ஊரு. வேற, வேற சமூகம். விபத்து நடந்த ஜம்புகண்டி மலைகிராம மக்கள் பழங்குடி சமூகம்னாலும் ரொம்ப கட்டுப்பாடா இருக்கிறவங்க. அந்நியர்களை அவ்வளவு சுலபமா தங்களோட சேர்த்துக்க மாட்டாங்க. அப்படிப்பட்டவங்ககிட்ட என் மனைவி ரத்தம் சிந்தின இந்த மண்ணுலதான் அடக்கமும் ஆகணும்னு ஒரு கோரிக்கை வைக்கிறேன். அவங்க ரொம்ப எமோஷனலாயிட்டாங்க. ‘இது எங்க பொண்ணு. இங்கேயே அடக்கம் பண்ணுவோம்!’னு குரலை உயர்த்தறாங்க.

போஸ்ட் மார்ட்டம் அந்த கிராமத்து பூமியில, நீர்வழிப்பாதையில, வனத்தோட வனமா அடக்கம் செய்யறாங்க. அடையாளத்துக்கு ஒரு கல்லு, கல்லறை, நடுகல் எதுவும் கிடையாது. ஆனா இப்பவும் ஒரு கூட்டம் பயப்படுது. ஏன்னு தெரியலை. அட்டப்பாடி சுத்து வட்டாரத்துலயிருந்து சில பேர் வந்தாங்க. ‘நடந்தது நடந்து போச்சு. சிறப்பாவும் செஞ்சுட்டீங்க. இனி போராடி ஆகப்போறது ஒண்ணும் இல்லை!’ன்னு சொல்லி சாராயக்கடைய திரும்ப திறக்கறதுக்கு பேச்சைத் தொடங்கினாங்க. ‘எனக்கென்ன அதைப் பத்தி. இந்த ஜல்லியடிக்கிற வேலையெல்லாம் வேண்டாம்!’னு சொல்லி அனுப்பினேன்.

அப்புறம் எம்.எல்.ஏ ஆளுக, செங்கல் சூளைக்காரங்கன்னு சிலர் வந்தாங்க. அவங்களுக்கும் அந்த சாராயக்கடை திறக்கறதுதான் குறி. ‘அங்கே எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா அங்கே ஒருத்தியின் ரத்தம் படிஞ்சிருக்கு. அதுக்கு அவங்க பதில் சொல்லியே ஆகணும்!’னு பேசறேன். திரும்பிப் போறாங்க. போலீஸிற்கும் தகவல் போயிருக்கு. ஒரு சாதாரண விபத்துதான். நியாயம் கேட்டு போராடியிருக்கேன்தான். ஆனா அதை உலகம் பூரா கோடானு கோடி பேர் பத்திரிகை, மீடியா, வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்குனு பார்த்திருக்காங்க.

ஒரு யுனிவர்சிட்டி பேராசிரியர் வந்து, ‘எப்படி ஒரு தனிமனிதனா அப்படி போராட முடிஞ்சுது?’ன்னு கேட்டாங்க. அவங்களுக்கு, ‘ஐ ரெஸ்பான்ஸ் டூ லவ்!’னு சொன்னேன். என் மனைவி இந்த உலகத்துக்கு ஒரு செய்திய சொல்லீட்டு போயிருக்கா. இவ்வளவு போராட்டம். இவ்வளவு பேர். இவ்வளவு போலீஸ். இவ்வளவு வாகனங்கள். இவ்வளவு ட்ராமா. அந்த event -ட்ல இருக்கிற ஒற்றை வார்த்தை arrack, liquire...! அவ்வளவுதான்’’

அவர் கண்கள் சிவக்கிறது. இமையோரம் நீர் ததும்புகிறது. பேச்சு திசைமாற்றுகிறேன்.

‘‘உங்களை, உங்கள் மகளை எப்படி பாதுகாத்துக் கொள்கிறீர்கள். மகளின் எதிர்காலம்...? வழக்கு என்னாச்சு?’’
‘‘வழக்கை பத்தி ஒண்ணும் தெரியலை. இந்த சம்பவத்துல என் ஃப்ரண்ட் தன் குடும்பத்தோட என் வீட்லயே வந்து ரெண்டு மாசம் தங்கி பொண்ணைப் பார்த்துக்கிட்டாங்க. அசுரன்னு இன்னொரு ஃப்ரண்டோட தங்கை, அவன் மகள் என்னோடவே வந்து இங்கேயே இருக்காங்க. எங்களோடவே வாழறதுன்னு முடிவு செஞ்சுட்டாங்க. என் மனைவிக்கான போராட்டத்திலும், வாழ்க்கையிலும் இத்தனை நட்புகள் என்னோடு ஐக்கியமாகும்னு நினைச்சு கூடப் பார்க்கலை!’’

அவர் மகளைப் பார்க்க வேண்டும் என சொல்கிறேன். படுக்கையிலிருந்து மகளை அழைத்து வருகிறார் ரமேஷ். 15 வயதுப் பெண். 11-ம் வகுப்பு படிப்பவர். குணமாகி விட்டது. ஆனாலும் விந்தி விந்தி மெதுவாக நடக்கிறார். முகம் நிறைய வாட்டம். நலம் விசாரித்து விட்டு போட்டோ எடுக்கும்போது முகத்தில் சுணக்கம். ‘புகைப்படம் வேண்டாம் ப்ளீஸ்!’ என்கிறார். தந்தையும் அவளுடன் பேசி விட்டு சொல்கிறார்.‘அவ பயந்து போயிருக்கா. ஸ்கூலுக்கு போக வர, அந்த நிகழ்வுகளின் பாதிப்பு நிறைய. போட்டோ டெலிட் செஞ்சிடலாமே!’’ அவர்கள் சொன்ன வண்ணமே செய்து விட்டு விடைபெறுகிறேன்.

ஜம்புகண்டி மதுபானக்கடை பின்னணி அரசியல்

ஜம்புகண்டியில் மூடப்பட்டிருக்கும் மதுபானக்கடையின் பின்னணியில் ஒரு சரித்திரம் உண்டு. தற்போது அமைந்திருக்கும் இடத்திற்கு மூன்று கிலோமீட்டர் தள்ளி ஆனைகட்டியில் அமைந்திருந்தது கடை. தமிழக- கேரள எல்லை என்பதால் கடையில் பல மடங்கு வியாபாரம். கேரள அட்டப்பாடி ஆதிவாசி மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அங்கே கள்ளுக்கடைகளையே திறக்காமல் இருக்கிறது கேரள அரசு. அப்படியிருக்க, அங்குள்ள மக்கள் இங்குள்ள டாஸ்மாக் கடைக்கு வந்து கெட்டுப் போகவே கேரளத்தில் பெரும் போராட்டம் எழுந்தது. 60 நாட்கள் கேரள எல்லையோரம் நடந்த தொடர் உண்ணாவிரத சத்தியாகிரக போராட்டத்தில் இருமாநில அதிகாரிகளும் பேசி 2 வருடங்களுக்கு முன்பு அக்கடையை மூடினார்கள். சில மாதங்களிலேயே அதே கடையை ஜம்புகண்டியில் திறந்தார்கள். உள்ளூர் எம்.எல்.ஏவின் முயற்சியால் திறக்கப்பட்ட கடை என்பதால் யாரும் பூனைக்கு மணி கட்ட முடியவில்லை. இப்போது டாக்டர் ரமேஷ் மனைவியின் இறப்பும், அவரின் போராட்டமும் இந்த டாஸ்மாக் கடையை இதுகாறும் மூட வைத்திருக்கிறது.

- கா.சு.வேலாயுதன்


டாக்டர் ரமேஷ்டாஸ்மாக் போராட்டம்டாஸ்மாக் அரசியல்ரமேஷுடன் ஒரு சந்திப்புபோராளி ரமேஷ்போராட்டப் பின்னணிஜம்புகண்டி டாஸ்மாக்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author