Published : 22 Sep 2019 10:37 AM
Last Updated : 22 Sep 2019 10:37 AM

இடம் பொருள் இலக்கியம்: 4- கம்போடியாவில் உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு

கம்போடியா நாட்டில் உள்ள அங்கோர் தமிழ்ச் சங்கம் சர்வதேச தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டை செப்டம்பர் 21 மற்றும் 22 தேதிகளில் கோலாகலமாக நடத்தியது. இதில் உலகெங்கும் உள்ள தமிழ்க் கவிஞர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ் படைப்புலகில் தனக்கென்ற தனித் தன்மையுடன் கவிதைகளைப் படைத்து வரும் கவிஞர் ஈரோடு எஸ்.ஆர். சுப்பிரமணியம், கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம், கவிஞர் ப.முத்துக்குமாரசாமி, கவிஞர் சுமதி சங்கர், கவிஞர் அன்பு செல்வி சுப்புராஜ், கவிஞர் தர்மாம்பாள் ரத்தினம், பாடலாசிரியர் விவேகா உள்ளிட்ட ஏராளமான தமிழ்க் கவிஞர்கள் அம்மாநாட்டில் கலந்துகொண்டனர். இவர்களுடன் சித்த மருத்துவச் செம்மல் மருத்துவர் திருத்தணிகாசலமும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார்.

இந்தக் கவிதை மாநாட்டைப் பற்றி கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம் பேசும்போது, ''அங்கோர் தமிழ்ச் சங்கம் நடத்தும் சர்வதேச தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டில் உரையாற்ற எனக்கு சிறப்பு அழைப்பு வந்துள்ளது. இதில் நான் புதிய தமிழ்க் கவிதை வடிவமான ‘தன்முனைக் கவிதைகள்’குறித்து உரையாற்றவுள்ளேன். மரபு, புதுக்கவிதை, புதினம் மற்றும் ஹைக்கூ கவிதைகள் என எழுதி வரும் நான் யூனியன் வங்கியில் மேலாளராக இருந்து ஓய்வு பெற்றாலும்கூட கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்ச்சேவை செய்து வருகிறேன். எனக்கு பல இலக்கிய அமைப்புகள் கவிச்சுடர், மதிப்புறு தமிழன் உட்பட பல்வேறு விருதுகள் கொடுத்துப் பாராட்டியுள்ளன. இம்மாநாட்டில் 40 கவிஞர்களின் தன்முனைக் கவிதைகளை தொகுத்து 'வானம் தொடும் வண்ணத்துப் பூச்சிகள்' என்ற நூலினையும் வெளியிடப் போகிறேன்'' என்றார்.

தெலுங்கு 'நானிலு' வடிவக் கவிதைகளை மூலமாகக் கொண்டு கவிஞர் கா.ந.கல்யாணசுந்தரம் தமிழில் 'தன்முனைக் கவிதைகள்' எனப் பெயர் சூட்டி ஆரம்பித்த முகநூல் குழுமத்தில் ஏறக்குறைய இன்றளவில் நூற்றுக்கணக்கான கவிஞர்கள் ஆர்வமுடன் எழுதி வருகின்றனர்.

செய்தித்தாள்கள், வார மாத இதழ்கள், இலக்கியச் சிற்றிதழ்கள், முகநூல், மின்னிதழ்கள் என ஆயிரக்கணக்கில் கவிஞர்களின் தன்முனைக் கவிதைகள் வெளியாகி வருகின்றன. தமிழில் குறுங்கவிதைகள் காணாமல் போன தருணத்தில் நான்கு வரிகளில் வரிக்கு மூன்று சொற்கள் என ஆழ்ந்த கருத்துகளோடு எழுதப்பட்டு வருகின்ற இந்தக் கவிதை வடிவத்தை கம்போடியா - அங்கோர் தமிழ்ச்சங்கத்தின் பெருமைக்குரிய அங்கீகாரம்தான் இந்த நூல் வெளியீடாகும். மேலும் தன்முனைக் கவிதைகள் எனும் புதிய கவிதை வடிவம் தொடங்கிய 20 மாதங்களில் பன்னாட்டு சிறப்பு பெறுவது பெருமைக்குரிய செய்தியாகும்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட கவிஞர் எஸ்.ஆர்.சுப்பிரமணியம் க பேசும்போது, ‘’கம்போடியா அரசின் மேலான ஆதரவுடன் அங்கோர் தமிழ்ச்சங்கம் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற தமிழுக்கான பெருமுயற்சிகளை செய்துகொண்டே இருக்கிறது. அங்கோர் தமிழ்ச் சங்கம் நடத்தும் இந்த இலக்கியத் திருவிழாவில் கலந்துகொள்வதைப் பெருமைமிகு வாய்ப்பாக கருதுகிறேன்’’ என்றார்.

நேற்று (21.92019) இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்வுகள் சிறப்புடன் அரங்கேறின. கம்போடிய அரசு தமிழையும் தமிழ் மக்களையும் அவ்வளவு கொண்டாடுகிறது என்று வாயாரச் சொல்லி நேற்று கம்போடியாவில் நட்டைபெற்ற நிகழ்வுகளின் புகைப்படங்களையும் கம்போடியாவில் இருந்து ஆசையுடன் அனுப்பி வைத்துள்ளார் கவிஞர் ப.முத்துகுமாரசாமி.

எட்டுத் திக்கும் நம் தமிழ் இன்ப கீதமாய் இசைத்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு இம்மாநாடு எடுத்துக்காட்டாக அமைகிறது!


- மானா பாஸ்கரன், எழுத்தாளர். புத்தனின் டூத் பேஸ்ட்டில் உப்பு இல்லை, அன்ரூல்டு நோட்டு உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: baskaran.m@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x