Last Updated : 21 Sep, 2019 04:20 PM

 

Published : 21 Sep 2019 04:20 PM
Last Updated : 21 Sep 2019 04:20 PM

தமிழ் சினிமாவின் 'தந்தை' நான்... -ட்ரெண்டி தமிழாசிரியர் கு.ஞானசம்பந்தனின் கலகல பேட்டி

‘தமிழ் வாத்தியார்’ என்றதும் மனதிற்குள் ஒரு உருவம் தோன்றுமே, அதற்கு கொஞ்சமும் பொருத்தமில்லாதவராக இருக்கிறார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.

ரொம்ப காலமாக கருகரு கேசத்துடன் காட்சியளிப்பதைச் சொல்லவில்லை. நேத்து ஓடிடியில ஒரு படம் பார்த்தேன்... அடுத்து நெட் ஃப்ளிக்ஸுக்கு ஒரு நிகழ்ச்சி பண்ணப்போறேன்... என்றெல்லாம் பேசி ஆச்சரியப்பட வைக்கிறார்.

35 படங்களில் நாயகன், நாயகிகளின் தந்தையாக நடித்துவரும் அவர் 'பிகில்' படத்தில் நயன்தாராவுக்கு அப்பாவாகவும், 'சூரரைப் போற்று' படத்தில் சூர்யாவுக்கு மாமனாராகவும் நடித்திருக்கிறார். டிவி, ரேடியோ, சினிமா ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் ‘யு டியூப்’ சேனலிலும் தினம் ஒரு வீடியோ பதிவு போட்டு அசத்துகிறார்.

அந்த ட்ரெண்டி தமிழ்ப் பேராசிரியரை மதுரை கே.கே.நகர் டெபுடி கலெக்டர் காலனியில் உள்ள வீட்டில் சந்தித்தேன்.

எப்படிங்கய்யா இவ்வளவு அப்டேட்டாக இருக்கீங்க?

அத ஏன் கேட்கிறீங்க. முதல்ல எனக்கு செல்போன்ல குறுந்தகவல் அனுப்பவே தெரியாம இருந்துச்சி. ஒரு தடவை கமல்ஹாசன் போன் பண்ணி, இன்னொரு நண்பரோட கைப்பேசி எண்ணை அனுப்பச் சொன்னார். “போனிலேயே சொல்லிடுறேனே, எனக்கு அனுப்பத் தெரியாது” என்று கெஞ்சினேன்.

“ஞானசம்பந்தம், இன்னும் தமிழ் வாத்தியாராவே இருக்காதீங்க. இப்ப என்ன பண்றீங்க, எனக்கு நம்பரை அனுப்புறீங்க” என்று இணைப்பைத் துண்டித்துவிட்டார். வேற வழியில்லாம அந்தப் புது முயற்சியில இறங்குனேன். அவரைத் தவிர ஒரு டஜன் பேருக்கு நம்பரை அனுப்பிட்டேன். ஆனா, அவருக்குப் போகலை. எப்படியோ ஒரு வெற்றுச்செய்தி (எம்டி மெசேஜ்) போயிருக்கு. உடனே இணைப்புல வந்து, “ஆங். ஏதோ முயற்சி நடக்குதுன்னு தெரியுது. தொடரட்டும்”னு மறுபடியும் வெச்சிட்டார். வேர்க்க விறுவிறுக்க ஒரு வழியா அனுப்பிட்டேன்.

சில சமயம் நம்ம வாத்தியாரைப் பார்த்து நாமே யோசிப்போம் இல்லியா? “அய்யய்ய, இவர்கிட்டையா நாம படிச்சோம்?” என்று. அப்படியிருக்கக் கூடாது. சில வாத்தியாருங்க அவங்க சப்ஜெக்ட்ல மன்னாதி மன்னனா இருந்தாலும், நாம அஞ்சாம் கிளாஸ் படிச்சப்ப எப்படியிருந்தாரோ அப்படியே இருப்பாங்க. என்னைப் பொருத்தவரைக்கும் வாத்தியார் என்பவர் ஏணி மாதிரி அதே இடத்துல இருக்கக்கூடாது. லிப்ட் மாதிரி கூடவே வரணும். முடிந்தால் மாணவர்களையும் விஞ்சி நிற்க வேண்டும். அப்போதுதான் மரியாதைக்குரியவர்களாக இருப்போம். வாத்தியார் என்றில்லை, எல்லாத்துறைகளுக்கும் இது பொருந்தும்.

யு டியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லாத்திலேயும் வந்திட்டீங்களே, ஏன்?

இன்ஸ்ட்ராகிராமை விட்டுட்டீங்க (சிரிக்கிறார்). பட்டிமன்றத்தில் பேசிய காலத்திலேயே, மதுரையில் மருத்துவர் சேதுராமனுடன் இணைந்து 1991-ல் நகைச்சுவை மன்றத்தைத் தொடங்கினேன். 27 ஆண்டுகளுக்கு முன்பு அதை எந்த வடிவத்தில் நடத்தினேனோ, அதே வடிவத்தை எடுத்துத்தான் இப்போது அனைத்து தொலைக்காட்சிகளிலும், காமெடி ஷோக்களை நடத்துகிறார்கள்.

ஒரு ஸ்டேண்ட் அப் காமெடி, ஒரு மிமிக்ரி, ஒரு ஸ்கிட் (நகைச்சுவை குறுநாடகம்). கூடவே இன்னொரு தவறையும் செய்தேன். ‘வாங்க சிரிக்கலாம்’ என்று 1 மணி நேரம் ‘ஸ்டேண்ட் அப்’ காமெடி செய்து, ஆடியோ கேசட்டாக வெளியிட்டேன்.

1000 கேசட்தான் நான் போட்டது. பைரஸியில் லட்சம் கேசட் போயிடுச்சி. சில பேரு அதை மனப்பாடம் பண்ணி, மேடைகளில் பேசிப்பேசியே பெரிய ஆள் ஆகிட்டாங்க. இப்போது நானே எனது பழைய காமெடியைப் பேசினால், “இந்தாளு காப்பியடிக்கிறார் பாருங்க” என்கிற அளவுக்குப் போயிடுச்சி. “யோவ் நான் 90களில் எழுதிய புத்தகத்தை படிச்சியா?” என்று கேட்க முடியாது, கேட்கவும் கூடாது.

நான் அவங்களைப் போய் அடையிறதுக்கு என்ன வழின்னு யோசிக்கணும். அதனாலதான் டிவி, எஃப்எம்மைத் தொடர்ந்து, ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யு டியூப்னு களம் இறங்கிட்டேன். இதுவரையில் 500 வீடியோ போட்டிருக்கிறேன்.

ஆன்மிகம், சினிமா, இலக்கியம், பயணம் என்று அரசியலைத் தவிர எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசுகிறேன். ஒரு முழுமையான சேனல் மாதிரியே அது ஓடிக்கிட்டு இருக்குது.

50 படம் நடித்த நாயகிகள், "இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்"னு பேட்டி கொடுக்கிற மாதிரி, நீங்களும் ஏதாவது வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கலாமே?

இப்படி 'தமிழ் சினிமாவின் தந்தை'யாக்கிட்டாங்களேன்னு கொஞ்சம் வருத்தம் இருந்தாலும், "நயன்தாராவின் தந்தை (நடிப்பில்)" என்று சொன்னால் இளைஞர்களுக்கும் நம்மைப் பிடிக்குமே என்று ஆறுதல்படுத்திக் கொள்கிறேன்.

எனக்கு வித்தியாசமான கேரக்டர்கள் வரத்தான் செய்யுது. சில பேரு, “நீங்க பெர்முடாஸ் போட்டுக்கிட்டு கையில பீர் பாட்டிலோட வாறீங்க” என்பது போன்ற ரொம்ப ‘வித்தியாச’மான வாய்ப்புகளைத் தரத்தான் செய்றாங்க. “அய்யய்யோ அதுக்கு வேற ஆளைப் பாருங்க” என்று தப்பித்துவிடுகிறேன்.

நான் மதுரை தியாகராசர் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்தபோதே, ‘விருமாண்டி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டேன். “உங்களுக்கும் சரி, கல்லூரிக்கும் சரி கெட்ட பெயர் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார்கள். அதை இன்று வரையில் கடைபிடிக்கிறேன்.

பேட்டி முடிந்ததும், வாங்க என்னோட ஸ்டூடியோவைக் காட்டுகிறேன் என்று மாடிக்கு அழைத்துப்போனார் பேராசிரியர். அங்கே கிரீன்மேட் பின்னணியுடன் பக்கா ஸ்டுடியோ ஒன்று இருந்தது. வீடியோ பதிவுகளை எல்லாம் அங்கேயே படமாக்கி எடிட் செய்கிறார்கள். தவிர, அவர் நடிக்கிற தொலைக்காட்சி தொடர்களுக்கான டப்பிங்கையும் இங்கேயே பேசி பதிவு செய்துவிடுகிறார்.

இப்போ சொல்லுங்க... செம ட்ரெண்டியான வாத்தியாருதானே இவரு?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x