Published : 18 Sep 2019 09:42 PM
Last Updated : 18 Sep 2019 09:42 PM

இடம் பொருள் இலக்கியம்: 1- முத்துவிஜயன் - நெடுங்காலம் புழங்காத வெளியில்..!

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னால் பாடலாசிரியர் முத்துவிஜயன் மரணமடைந்தார். விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் இடம்பெற்ற ‘மேகமாய் வந்து போகிறேன்’, ‘பெண்ணின் மனதைத் தொட்டு’ படத்தில் ‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா’ போன்ற பிரபலமான பாடல்களை எழுதி புகழ்பெற்றவர். உடல்நலக் குறைபாடு காரணமாக காலமான பாடலாசிரியர், கவிஞர் முத்து விஜயனைப் பற்றி ‘நேரம்’படத்தில் ‘காதல் என்னுள்ளே’என்ற பாடலை எழுதி புகழ்பெற்ற பாடலாசிரியர் வேல்முருகன் தனது ஞாபகக் குறிப்புகளைப் பதிவு செய்கிறார் .

எல்லோருக்கும் பிடித்த பாடலாசிரியர், கவிஞர் நா.முத்துக்குமார். நா.முத்துக்குமாருக்குப் பிடித்த பாடலாசிரியர் யாரென்று அவருடைய 3-ம் ஆண்டு நினைவு நாளில், ஒரு தனியார் யூ-டியூப் சேனலில் என்னிடம் கேட்டார்கள். பாடலாசிரியர் முத்துவிஜயன் என்று நான் பதில் சொல்லியிருந்தேன்.

நானும் இயக்குநர் சுரேஷ் சங்கையாவும் சென்னை பெருங்குடியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இசையமைப்பாளர் ரகுராமைச் சந்தித்துவிட்டு வந்துகொண்டிருக்கும் போதுதான் கவிஞர் முத்துவிஜயன் காலமானார் என்று நண்பரும் இயக்குநர் மணிரத்தனத்தின் உதவி இயக்குநருமான நாகலிங்கம் போன் செய்து வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார்.

நின்று நிதானிப்பதற்குள் கவிஞர் குகை மா. புகழேந்தி, 'தம்பி நானும் ஓடி வந்தேன், ஆனா முகத்தைப் பார்க்க முடியல, வளசரவாக்கம் சுடுகாட்டில் எரிஞ்சிட்டு இருக்கு’என்று போன் செய்தார். கவிஞர் முத்துவிஜயன் என் வாழ்க்கையில் ஒரு அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தவர். முதன்முதலில் கவிஞர் இளைய கம்பனோடுதான் நான் முத்துவிஜயனைச் சந்தித்தேன். 2005-06 ஆம் ஆண்டு ராஜ் டி.வி-யில் ‘காசுமழை’ என்ற கேம் ஷோவில் நான் உதவி இயக்குநராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு சுற்று, பிரபல பாடல் வரிகளைச் சொல்லி அதற்கடுத்த வரி என்னவென்று போட்டியாளர்களிடம் கேள்வி கேட்டு அவர்கள் சொல்லும் பதில் சரிதானா என்று அந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியரிடமே கேட்போம்.

கவிஞர் முத்துவிஜயன்

அப்போதுதான் யுகபாரதி, தாமரை, முத்துவிஜயன், இளைய கம்பன் என நிறைய கவிஞர்களோடு என்னால் பழக நேர்ந்தது. அந்த கேம் ஷோவில் கவிஞர் முத்துவிஜயனை அவர் எழுதிய பாடல்களான ‘மேகமாய் வந்து போகிறேன்’,‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா..’ ‘வத்தலக்குண்டு கொடியே கொடியே வெத்தலக் கொடியே..’ ‘கால் கிலோ காதல் என்ன விலை.. கடைகளில் கேட்டேன் கிடைக்கவில்லை…’ போன்ற பாடல்களில் இருந்தும் அவருக்குப் பிடித்த சில பாடல்களில் இருந்தும் கேள்விகள் கேட்டு பதில்கள் கேட்டு படம் பிடித்து ஒளிபரப்பினோம். அதன்பிறகு பார்க்கும் இடங்களிலெல்லாம் வாஞ்சையோடு பேசுவார்.

அப்போது பிரபல வார இதழ் ஒன்றில் கவிஞர் நா.முத்துக்குமார் படம் இயக்கப் போவதாக ஒரு செய்தி வந்தது. அதைப் பார்த்துவிட்டு கவிஞர் முத்துவிஜயனிடம் என்னை நா.முத்துக்குமாரிடம் உதவி இயக்குராகச் சேர்த்துவிடறீங்களா என்று கேட்டேன். அவர் ரொம்ப இயல்பாக, ''ஆமாம். அவனும் உதவியாளர் ஒருவர் வேணும்னு எங்கிட்ட சொல்லியிருந்தான். நான் ரெண்டு மூன்று நாள்ல அவனப் பார்ப்பேன். கேட்டுச் சொல்றேன்'' என்று சொன்னார். நம்பிக்கையாய் இருந்தது.

சரியாக 2007 நவம்பர் 4-ம் தேதி காலை 10 மணியளவில், 21. கே.கே சாலை, சாலிகிராமத்தில் இருந்த கவிஞர் நா.முத்துக்குமாருடைய அலுவலகத்துக்குள் இருவரும் நுழைந்தோம். சற்று நேரத்தில் வந்த கவிஞர் முத்துக்குமாரிடம் முத்துவிஜயன் என்னை அறிமுகப்படுத்தினார். என்னை விசாரித்த முத்துக்குமார், ஒரு பேப்பரையும் பரீட்சை அட்டையையும் கொடுத்து எழுதச் சொன்னார். எழுதிக் காட்டினேன். ஒரு இருக்கையைக் காட்டி அதுதான் உங்கள் இடம் போய் உட்கார்ந்து கொள்ளுங்கள் என்றார்.

அதன்பிறகு அதே காலகட்டத்தில் இரண்டு முறை முத்துக்குமார் அண்ணனோடு கவிஞர முத்துவிஜயனைச் சந்தித்தேன். நான் முத்துக்குமார் அண்ணனிடம் சேர்ந்த ரெண்டாவது மாதம் பொங்கல் விழா வந்தது. ''ஊருக்கு போய்ட்டு வாங்க தம்பி'' என்று கொஞ்சம் பணம் கொடுத்து என்னை அனுப்பி வைத்தார் அண்ணன். ஒரு வாரத்தில் வருவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். என் கிராமம் என்னை ரெண்டு மூன்று வாரங்களுக்குப் பிறகே சென்னைக்கு என்னை அனுப்பி வைத்தது. அதற்குள் இங்கு பெரிய களேபரமே நடந்திருந்தது. ''அலுவலகத்தின் சாவியை நீங்களே எடுத்துக்கொண்டு ஊருக்கு போய்ட்டு வாங்க'' என்று சொல்லியிருந்தார் அண்ணன்.

ஆனால், எனக்கு அந்த நினைவே இல்லாமல் ஊரில் சுற்றிக்கொண்டிருந்துவிட்டேன். அப்போது என்னிடம் செல்போன் ஏதும் இருக்கவில்லை. அதே நேரத்தில் இங்கு சாவி இல்லாமல் அலுவலகம் சரியாக இயங்காமல் இருந்திருக்கிறது. முத்துக்குமார் அண்ணன் முத்துவிஜயனிடம் என்னைத் தொடர்புகொள்ள என்ன வழியென்று கேட்டுள்ளார். அதற்கு முத்துவிஜயன், ''அவன் எந்த ஊருனே எனக்குத் தெரியாது முத்து. ரொம்ப ஆர்வமாக இருக்குறானே என்றுதான் உன்னிடம் சேர்த்துவிட்டேன்'' என்று அலட்டிக்காமல் சொல்லியிருக்கார்.

வேலைக்குச் சேர்ந்த ஒரு புதுப் பையனிடம் அலுவலக சாவி மாட்டிக் கொண்டுவிட்டது. அந்தப் பையனின் ஊர், முகவரி எதுவும் தெரியாத நிலைமை. பையனைப் பற்றி அதிகம் தெரியாது, தொடர்புகொள்ள எந்த வழியும் இல்லை. இந்நிலையில் சாதாரண மனிதர்கள் என்ன யோசிப்பார்களோ, அது தெரியாது. ஆனால், அந்த இரு கவிஞர்களும் என்ன யோசித்தார்கள் என்பது பின்னர் ஒருநாள் எனக்குத் தெரியவந்தது.

பாடலாசிரியர் வேல்முருகன்

நான் வந்ததும் முத்துவிஜயன் என்னிடம் , ''போன் பண்ணியாவது சொல்லியிருக்கலாமே தம்பி'' என்று கடிந்து கொண்டார்.
அப்போது என் ஊரில் இருந்து சென்னைக்குப் பேசினால் அது எஸ்டிடி கட்டணம். அதுவுமில்லாமல் அந்த யோசனை எனக்கு வரவில்லை என்று சொன்னேன்.

''நீங்க வந்தால் உங்களிடம் சாவியை வாங்கி வைத்துவிட்டு, உங்களை திரும்பிப் போய்விடச் சொன்னார்'' என்று சொல்லிவிட்டு, ''எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, நான் வெளியே போகணும். முத்துக்குமார் வர்ற நேரம்தான். நீங்களே அவரிடம் சாவியைக் கொடுத்துவிட்டு கெளம்பிடுங்க. அப்புறம் பார்க்கலாம்''னு சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

எனக்கு அழகிய கவிதையில் ரெண்டு மூன்று வரிகளை இடையில் உருவியது போல் இருந்தது. முத்துக்குமார் அண்ணன் வந்தார். அவர் எதுவும் கேட்குமுன்னே, ''நான் இனிமேல் இதுபோல பண்ணமாட்டேன். என்னை மன்னிச்சுடுங்கனா'' என்று இரக்கம் கோரினேன். அவர் எதுவும் பேசாமல். கொஞ்ச நேரம் அவர் அறையில் இருந்தார். அப்புறம், ''தம்பி இங்க வாங்க'' என்றதும், அவர் முன் ஓடி நின்றேன். ரெண்டு ஆயிரம் ரூபாய் நோட்டைக் கையில் கொடுத்து ஒரு செல்போன் வாங்கிக்குங்க, என்றார். செகனெண்ட்ல ஒரு போனும், 'வாலு' பட இயக்குநர் விஜய்சந்தர் பெயரில் ஒரு சிம் கார்டும் வாங்கி, முதல் போன் முத்துக்குமார் அண்ணனுக்கு பண்ணினேன். அப்போது சென்னையில் எனக்கு எந்த அட்ரஸ் ப்ரூப்பும் இல்லை. இன்றும் எந்த அட்ரஸ் ப்ரூப்பும் இல்லாமல்தான் இருக்கிறேன்.

கடைசியாக கவிஞர் முத்துவிஜயனை நேரில் சந்தித்தது முத்துக்குமார் அண்ணனின் இறப்பில்தான். நான் எங்கோ போய்க்கொண்டிருந்தேன். அவர் எங்கோ போய்க்கொண்டிருந்தார். ஏதோ ஒரு பயணத்தில் பார்த்தோம். நான் போகும் பாதையை ஒரு வழிகாட்டியைப்போல் எனக்குக் காட்டிவிட்டு அவர் எங்கோ போய்விட்டார்.

மனதிற்கு நெருக்கமான ஒரு மனிதரை வாழ்க்கையில் ஓரிரு முறைதான் சந்திக்க முடியும் என்பதை, அவ்வளவு கச்சிதமான வரையறையாக வகுத்து வைத்திருக்கும் இந்தக் காலம்தான் எவ்வளவு பெரிய பொறியாளராக இருக்கிறது.

''மரணம் ஒரு கறுப்பு ஆடு, அது சில சமயம் நமக்குப் பிடித்த ரோஜாக்களையும் தின்றுவிடுகிறது'' என்று எழுத்தாளர் சுஜாதா மரணத்திற்கு இரங்கல் எழுதினார். அண்ணன் நா.முத்துக்குமார். அதனையே இங்கும் நினைவுகூர்கிறேன்.

'நேரம்' திரைப்படத்தில் நான் எழுதிய 'காதல் என்னுள்ளே' பாடலைக் கேட்டுவிட்டு, ''நல்லா இருக்கு நிறைய எழுதுங்க'' என்றார். அதன்பிறகு எங்கேயும் சந்திக்கவில்லை. 'எனக்குள் ஒருவன்' திரைப்படத்திற்கு நான் வசனம் எழுதியது தெரிந்து போன் செய்தார். அப்போது நானும் சக கவிஞரான முத்துவேலும் பெசன்ட்நகர் பீச்சில் பேசிக்கொண்டிருந்தோம்.

''படம் இயக்க முயற்சிப் பண்றாராம், முடிவானதும் கூப்பிடுறேன் வாங்க சேர்ந்து வேலைப் பார்க்கலாம்'' என்று சொல்றார் என்று முத்துவேலுவிடம் சொன்னேன். ஒரு அரை மணி நேரம் கழித்து அதே நம்பரிலிருந்து மீண்டும் போன். ''சொல்லுங்கண்ணே'' என்றேன். எதிர்முனையில் ஒரு பெண்ணின் குரல். என்னை யார் எவரென்று விசாரித்து, ''முத்துவிஜயன் என்ன பேசினார்'' என்றார். நான் அவரை யார் எவரென்று விசாரிக்காமல் கவிஞர் சொன்னதை அப்படியே சொன்னேன். ''ம்க்கும்.. படம் டைரக்ட் பண்ணப்போறாராமா...'' என்று கிண்டல் தொனியில் கேட்டுவிட்டுப் போனை வைத்தார்.

ஒரு வருடத்திற்கு முன் இருக்கும். போன் பண்ணி பேசினேன். தேனியில் வீடெடுத்துத் தங்கியிருப்பதாகச் சொன்னார். ''இந்தப் பக்கம் வந்தால், வீட்டுக்கு வாங்க'' என்றார். சினிமா எல்லாம் சென்னையில் உள்ளது. இவர் தேனியில் என்ன செய்கிறார் என்று எனக்கு விசித்திரமாகப்பட்டது.

நா.முத்துக்குமாருக்குப் பிடித்த பாடலாசிரியர், கவிஞர் முத்துவிஜயன் தான் என்று நான் சமீபத்தில் ஒரு நேர்காணலில் சொன்னதைக்கூட அவரிடம் சொல்லவில்லை. அவர் இறந்துபோனதாக வந்த செய்திக்குப் பிறகு அவர் எண்ணிற்கு அழைத்துப் பார்த்தேன். அந்த எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. யாரிடமாவது பேச வேண்டுமென்று தோன்றினால் அது எந்த நேரமாக இருந்தாலும் பேசிவிட வேண்டும். ஏனென்றால் மீண்டும் பேசுவதற்கு வாய்ப்பே இல்லாமலும் போகலாம்.

அவர் வரிகளிலிருந்தே ஒன்று சொல்லலாம். ''நெடுங்காலமாய் புழங்காமலே… எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே...'' உண்மைதான் யாரோடும் அதிகம் புழங்காமலே கவிஞர் முத்துவிஜயன் போய்விட்டார்.

இவ்வாறு வேல்முருகன் தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

- மானா பாஸ்கரன், எழுத்தாளர். புத்தனின் டூத் பேஸ்ட்டில் உப்பு இல்லை, அன்ரூல்டு நோட்டு உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x