Published : 18 Sep 2019 05:54 PM
Last Updated : 18 Sep 2019 05:54 PM

இந்துப்பு, கல் உப்பு... இதில், எந்த உப்பு நல்லது? ஏன்?

இன்று நோய்கள் பல்கிப் பெருக வெள்ளை விஷங்கள் எனப்படும் சில உணவுப்பொருள்களே காரணம் என்று பட்டியலிட்டிருக்கிறார்கள். அதில் வெள்ளை நிறத் தூள் உப்பும் ஒன்று; கல் உப்பல்ல. தூள் உப்பில் கல் உப்பில் உள்ளதைப்போலவே சோடியம் குளோரைடு இருந்தாலும் அது வெள்ளை வெளேர் என பளிர் நிறத்தில் இருக்க வேண்டுமென்பதற்காக உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த உண்மை நம்மில் பலருக்குத் தெரியாது. கூடவே அயோடின் பற்றாக்குறையால் வரும் ஹைப்போதைராய்டு பிரச்சினையைப் போக்குகிறோம் என்று சொல்லி தூள் உப்பில் அயோடின் சேர்க்கிறார்கள்.

இதுநாள்வரை கடல் உப்பான கல் உப்பைப் பயன்படுத்தி வந்த நமக்கு தூள் உப்பைக் கொடுப்பதால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. தைராய்டு பிரச்சினை இல்லாதவர்கள் அயோடின் சேர்க்கப்பட்ட தூள் உப்பைச் சாப்பிடுவதால் அவர்களுக்கு வேறுவிதமான உடல்நலக் குறைவுகள் ஏற்படலாம் என்பதுபற்றி யாரும் சிந்திக்கவில்லை. மேலும் கடல் நீரிலிருந்து இயற்கையாக உப்பு தயாரித்த முறைகளையெல்லாம் இப்போது கைவிட்டு விட்டனர். கடல் நீரிலிருந்து இயற்கையாகக் கிடைக்கும் உப்பிலுள்ள தாதுக்களை எடுத்து வெள்ளை நிறமாக மாற்றி செயற்கையாக சில தாதுக்களை அவற்றில் சேர்த்து விற்கின்றனர். ஆக, இயற்கைத் தாதுக்கள் இல்லாத கல் உப்பே இப்போது விற்பனைக்கு வருகின்றன.

கல் உப்பில் சோடியம் குளோரைடு உள்ளது. இந்துப்பில் பொட்டாசியம் குளோரைடு உள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே சோடியம் குளோரைடு உள்ள கல் உப்பைப் போல பொட்டாசியம் குளோரைடு உள்ள இந்துப்பைச் சேர்க்கச் சொல்கிறார்கள். அத்துடன் இந்துப்பில் இயற்கையாகவே அயோடின் சத்து, இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண்சத்துகளும் இருக்கின்றன. இதனால்தான் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் இந்துப்பு சேர்த்துக் கொள்ளலாம் என்கிற குரல் அதிகமாகவே ஒலித்துக்கொண்டிருக்கிறது.

80 விதமான தாதுக்களைக் கொண்ட இந்துப்புக்கென சில தனித்துவங்கள் உள்ளன. அதுபற்றி அறிந்துகொள்வோம். பாறை உப்பு எனத் தமிழிலும், ஆங்கிலத்தில் ராக் சால்ட் எனவும், இமயமலை உப்பு எனத் தமிழிலும், ஆங்கிலத்தில் ஹிமாலயன் சால்ட் என்ற பெயர்களிலும் இந்துப்புவை அழைக்கிறார்கள். இந்தியில் சேந்தா நமக் என்பார்கள். சைந்தவம், சிந்துப்பு, சோமனுப்பு, சந்திரனுப்பு, மதிக்கூர்மை, சிந்தூரம், மதியுப்பு என பல்வேறு பெயர்களில் இந்துப்பு அழைக்கப்படுவதாக சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. பஞ்சாப் மற்றும் இமயமலை அடிவாரத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் இந்துப்பு அதிக அளவில் கிடைக்கிறது. பாறைகளிலிருந்து வெட்டியெடுக்கப்படும் இந்துப்புவை சுத்தமான நீரிலும், இளநீரிலும் ஊற வைத்து பதப்படுத்தி அதன்பிறகே நமக்கு விற்கிறார்கள்.

ஊதா, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் இந்துப்பு மருத்துவக் குணம் நிறைந்தது என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். பல்வேறு நோய்களுக்கு மலச்சிக்கலே அடிப்படையாக இருக்கிறது. அப்படி நோய்களின் அடிப்படையாக உள்ள மலச்சிக்கலைப் போக்குவதில் இந்துப்பின் பங்கு அதிகம். எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி அதில் பாதிப் பழத்தின் (வெட்டிய பாகத்தில்) மீது இந்துப்பு தூவி சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் குடித்தால் மலச்சிக்கல் நீங்கும். முக்குற்றம் எனப்படும் வாதம், பித்தம், கபம் ஆகிய நோய்களின் தன்மைகளை நீக்கி உடலை வலுவாக்கும்.

கல் உப்பு நல்லது என்றாலும் சோடியம் அளவு அதிகரித்தால் இதய நோய் வரலாம். அயோடின் பற்றாக்குறையால் தைராய்டு பாதிப்பு வரும். இவற்றையெல்லாம் சரிசெய்ய பொட்டாசியம் குளோரைடு மற்றும் இயற்கையாகவே அயோடின் சத்து உள்ள இந்துப்பு சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும் ரத்த அழுத்தத்தைச் சீராக்குவதுடன் சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய சுவையின்மை பிரச்சினையைச் சரிசெய்யும். வயதானவர்களை மட்டுமே பாதித்த எலும்புத் தேய்மானம் இன்று எல்லா வயதினரையும் பாதிக்கிறது. எலும்புத் தேய்மானத்தால் பாதிக்கப்பட்டவர்களும், பாதிப்பு ஏற்படாமல் முன்கூட்டி தடுக்கவும் இந்துப்பு பயன்படுத்துவதன் மூலம் தங்களைக் காத்துக் கொள்ளலாம்.

உடல் பருமன் பிரச்சினை குழந்தைப் பருவத்திலேயே தொடங்கிவிடுகிறது. உண்ணும் உணவில் தொடங்கி பல்வேறு நோய்களின் பக்கவிளைவான எல்லா வயதினரையும் பாதிக்கும் உடல்பருமன் பிரச்சினையிலிருந்து காத்துக்கொள்ள இந்துப்பு பயன்படுத்தலாம். மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தும் தன்மை வாய்ந்தது இந்துப்பு. உண்ணும் உணவில் தொடங்கி உடலில் ஏற்கெனவே உள்ள சக்தியை ஆற்றலாக மாற்ற பயன்படுத்தும் உயிர் வேதியியல் செயல்முறைகளின் கலவையே வளர்சிதை மாற்றம். இந்தப் பணியைச் சரியாக செய்ய இந்துப்பு உதவும். இதுதவிர செரிமானத்தைத் தூண்டும். மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். சீக்கிரம் வயதாவதைத் தள்ளிப்போட உதவும். சுவாசத்தைச் சீராக்கும். தசைப்பிடிப்பைக் குறைக்கும். சிறுநீரகம் மற்றும் பித்தப்பை ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். சைனஸ் பிரச்சினை வராமல் தடுக்கும். இப்படி பல்வேறு பிரச்சினைகளைத் தடுக்கவும் அவற்றிலிருந்து நம்மை விடுவிக்கவும் உதவுகிறது.

`சிறுநீரகச் செயலிழப்பை இந்துப்பு போக்கும்' என்ற செய்தி முகநூல், வாட்ஸ் அப் மற்றும் பல்வேறு இணையங்களில் பரவலாகப் பரப்பப்படுகிறது. உண்மையிலேயே இந்துப்புக்கு அந்த அளவுக்கு சக்தி இருக்கிறதா என்ற கேள்வி எழாமல் இல்லை. சோடியம் நம் உடலில் நீர் மேலாண்மைக்கு மிகவும் முக்கியமான நுண்ணூட்டச்சத்தாகும். சிறுநீரகம் செயலிழந்த பலருக்கு சோடியம் குளோரைடின் அளவு அதிகரித்திருக்கும். அதேவேளையில் பொட்டாசியம் குளோரைடு குறைவாக இருக்கும். சிலருக்கு பொட்டாசியத்தின் அளவு அதிகமாக இருக்கலாம். சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டவர்களுக்கு சோடியத்தின் அளவு அதிகரித்து, பொட்டாசியத்தின் அளவு குறைந்திருந்தால் கல் உப்பைத் தவிர்த்து இந்துப்பைப் பயன்படுத்தலாம். பொட்டாசியத்தின் அளவு ஓரளவு அதிகரித்ததும் கல் உப்பு, இந்துப்பு என மாற்றி மாற்றி பயன்படுத்தலாம். மற்றபடி இந்துப்பு பயன்படுத்தியதால் சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாக சொல்லப்படும் தகவல்கள் உண்மையல்ல. ஆனாலும், முழுமையாக இந்துப்புக்கு மாறுவது சரியல்ல.

இந்துப்பு என்றில்லை, எந்த உப்பாக இருந்தாலும் அளவோடு சேர்த்துக் கொள்வதே நல்லது. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று சொன்னாலும், அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

- தமிழ்க்குமரன், மூலிகை ஆராய்ச்சியாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x