

எல்லிஸ். ஆர். டங்கன் இயக்கிய அம்பிகாபதி (1937) திரைப்படம் பார்த்தவர்கள், அதில் வரும் இளம் வில்லனை மறந்திருக்க முடியாது. வஞ்சகமும் பொறாமையும் கொண்ட அந்தக் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார் அந்த நடிகர். அதற்கு ஓராண்டு முன்னர்தான் டங்கன் இயக்கிய ‘சதிலீலாவதி’ படத்தில் அவரது திரையுலக வாழ்வு தொடங்கியது. 1964-ல் வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் ‘விஸ்வநாதன்’ எனும் மறக்க முடியாத நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்திருந்தார் அவர். அவரும் நாகேஷும் தோன்றும் காட்சிகளில் திரையரங்கமே அதிரும். டி.எஸ். பாலையாதான் அந்த நடிகர்.
இடைப்பட்ட காலத்தில் எதிர்மறைப் பாத்திரங்கள், குணச்சித்திரப் பாத்திரங்கள், நகைச்சுவை என்று பல வேடங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனித்த இடத்தைப் பிடித்திருந்தார் பாலையா. தூத்துக்குடி மாவட்டம் சுண்டங்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்த பாலையா, நாடகங்கள் வழியாகத் திரை உலகுக்கு அறிமுகமானவர். நடிப்பின் உச்சத்தைத் தொட்ட கலைஞர்களின் வரிசையில் சிவாஜி, எம்.ஆர். ராதா ஆகியோருக்கு இணையாகப் பேசப்படும் நடிகர் அவர். சிறுவயதில் சர்க்கஸ் சாகச நிகழ்ச்சிகளால் ஈர்க்கப்பட்ட அவர், தானும் சர்க்கஸ் கலைஞராக வேண்டும் என்ற ஆசையில் மதுரைக்குச் சென்றார். எனினும், காலம் அவரை நடிப்பை நோக்கித் தள்ளியது. பிழைப்புக்காக இறைச்சிக் கடையில் வேலை பார்த்த அவருக்கு ‘பாய்ஸ் கம்பெனி’ நாடகக் குழுவில் இடம் கிடைத்தது. எம்.கே. ராதா, எம்.ஜி.ஆர்., என்.எஸ். கிருஷ்ணன் போன்ற ஜாம்பவான்கள் பட்டை தீட்டப்பட்டதும் அங்குதான்.
பாய்ஸ் கம்பெனியின் வாத்தியாரும், எம்.கே. ராதாவின் தந்தையுமான மெட்ராஸ் கந்தசாமி முதலியார்தான் பாலையாவின் திரையுலக வாழ்வைத் தொடங்கிவைத்தவர்.
எஸ்.எஸ். வாசன் எழுதிய ‘சதிலீலாவதி’ நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியைத் தொடங்கினார் கந்தசாமி முதலியார். அப்படத்தில் எம்.கே. ராதா, எம்.ஜி.ஆர். ஆகியோருடன் முக்கியப் பாத்திரத்தில் பாலையா நடித்தார். எந்த மாதிரியான பாத்திரமாக இருந்தாலும் அதைப் புரிந்துகொண்டு, கதைக்கு நியாயம் செய்யும் விதத்தில் நடிப்பது ஒரு கலை. அந்த வகையில் அதிகம் மிகையில்லாமல் அந்தந்தப் பாத்திரத்தின் தன்மையைத் தனது நடிப்பின் மூலம் கொண்டுவந்தார் பாலையா. அண்ணாதுரை எழுதிய ‘வேலைக்காரி’, ‘மீரா’, ‘ஏழை படும் பாடு’ என்று பல படங்களில் நடித்தார். தொடர்ந்து திரையுலகில் இயங்கிவந்த பாலையா, 1972 ஜூலை 22-ல் தனது 57-வது வயதில் காலமானார். ‘திருவிளையாடல்’, ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘பாமா விஜயம்’, ‘ஊட்டி வரை உறவு’ போன்ற திரைப்படங்களில் அவர் நடித்த பாத்திரங்கள், இன்றைய தலைமுறை ரசிகர்கள் மனதையும் வெல்லக் கூடியவை.