

இனம், சாதி என்று சக மனிதர்களை வெறுக்க எத்தனையோ காரணங்களைக் கொண்டிருப்பவர்கள் உண்டு. அவர்கள் அனைவரையும் வெட்கித் தலைகுனிய வைத்த சம்பவம் இது. 2001 செப்டம்பர் 11-ல் அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, முஸ்லிம்கள் அனைவரையும் ‘பயங்கரவாதிகள்’ என்று கருதத் தொடங்கிய அமெரிக்கர்களில் சிலர், அவர்கள் மீது வெறுப்பைக் காட்டத் தொடங்கினர். அரேபியர்கள் என்று கருதி சீக்கியர்கள் உள்ளிட்ட ஆசிய மக்கள் மீதும் வெறுப்புக் குற்றங்களை நிகழ்த்தினர், இனவெறியும் ‘தேசபக்தி’யும் நிரம்பிய அமெரிக்கர்களில் சிலர். தினக்கூலியாக வேலைபார்த்த மார்க் ஆண்டனி ஸ்ட்ராமேன் அவர்களில் ஒருவர்.
தனது தவறான புரிதலின் காரணமாக டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில், பாகிஸ்தானைச் சேர்ந்த வக்கார் ஹஸன் (46), இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வாசுதேவ் படேல் (49) ஆகியோரைச் சுட்டுக் கொன்றார் ஸ்ட்ராமேன். அவரது இனவெறித் தாக்குதலில் ரயிசுதீன் ரயிஸ் புயான் என்ற வங்கதேச இளைஞரின் வலது கண் பார்வை பறிபோனது. “எங்கிருந்து வருகிறாய் நீ?” என்று கேட்டுக்கொண்டே அவரது முகத்துக்கு நேராகச் சுட்டிருந்தார் ஸ்ட்ராமேன். பார்வை பறிபோனாலும் உயிர் பிழைத்துக்கொண்டார் ரயிசுதீன். ஸ்ட்ராமேனைக் கைதுசெய்த போலீஸார் அவரைச் சட்டத்துக்கு முன் நிறுத்தினர். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவருக்கு ஆதரவாக, வலுவாக எழுந்த குரல் ரயிசுதீனுடையதுதான். “ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாக முடியாது” என்று கூறிய ரயிசுதீன், ஸ்ட்ராமேனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தார். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவரான ரயிசுதீன், தான் சுடப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர் எதிர்கொண்ட பொருளாதாரச் சிக்கல்களும், உடல்ரீதியான வலியும் மிக அதிகம். இத்தனை சிரமங்களுக்கு இடையிலும், ‘வேர்ல்டு வித்தவுட் ஹேட்’ எனும் அமைப்பைத் தொடங்கி ஸ்ட்ராமேனுக்காக நீதிமன்றக் கதவுகளைத் தட்டியபடியே இருந்தார். எனினும், ஸ்ட்ராமேனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்துசெய்ய முடியாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. அதன்படி, 2011 ஜூலை 21-ல் டெக்சாஸ் சிறையில் விஷ ஊசி போடப்பட்டு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அவருடன் பேசிய ரயிசுதீன், “உங்களை மன்னித்துவிட்டேன். நான் உங்களை வெறுக்கவில்லை” என்று கூறினார். இதைக் கேட்டு நெகிழ்ந்த ஸ்ட்ராமேன், “மனமார்ந்த நன்றி சகோதரா! என்னை நெகிழச் செய்துவிட்டீர்கள். இதை நான் எதிர்பார்க்கவேயில்லை” என்று கூறினாராம். பாதிக்கப்பட்டவரே குற்றவாளியை மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப் போராடியும், அதை ஏற்க மறுத்த அமெரிக்க மண்ணில் இன்று கருப்பினத்தவர்களுக்கு எதிராகக் காவல் துறையினரில் சிலரே வெறுப்புக் குற்றங்களில் ஈடுபடுவது விநோதம்தான்!