Last Updated : 06 Jul, 2015 04:24 PM

 

Published : 06 Jul 2015 04:24 PM
Last Updated : 06 Jul 2015 04:24 PM

கமல், நயன்தாரா, த்ரிஷா... இது சினிமா விஷயம் மட்டுமல்ல!

"நயன்தாரா இப்போது யாருடன் பழகுகிறார்?" (மிக நாகரிகமாக மாற்றி எழுதி இருக்கிறேன்).

இந்தத் தலைப்புடன் தொடர்புடைய மிக முக்கியச் செய்தியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒருவர் பகிர்ந்திருந்தார். அதில் பலரும் தங்கள் ஆராய்ச்சியின் முடிவுகளை எழுதி இருந்தார்கள், "ஆத்துல போறதை யார் குடிச்சா என்ன?" முதலான தத்துவங்கள் வேறு.

நடிகை நயன்தாரா மீது அக்கறை கொண்டு, 'ஐயோ பாவம், யாரையாச்சும் கட்டிக்கிட்டு நல்லா இருந்தா என்ன?' அப்படியெல்லாம் எழுதப்படும் அல்லது பகிரப்படும் பதிவுகள் எதுவும் இல்லை. நயன்தாரா யாருடன் பழகினால் என்ன? இந்த விஷயத்தைக் கலாய்ப்புப் பொருளாக்குவதிலேயே இவர்களிடம் உள்ள ரகசிய ஆதங்கம் அம்பலமாகிறது.

ஒரு நடிகையோ நடிகனோ, அவர்களின் தொழில் நடிப்பு. அவர்களின் நடிப்பை விமர்சனம் செய்யலாம். காசு கொடுத்து திரையரங்கில் படம் பார்ப்பவனுக்கு ஒரு படம் 'நன்றாக இருக்கிறது', 'மொக்கை' என்று விமர்சனம் செய்யும் அளவுக்கு உரிமை இருக்கிறது. மற்றப்படி அந்த நடிகர் - நடிகையரின் சொந்த வாழ்க்கையை விமர்சிக்க ரசிகனுக்கு எந்த உரிமையும் இல்லை என்றே நம்புகிறேன்.

ஒருவர் மீதுள்ள அதீத ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டு ஆர்வக்கோளாறினால் விமர்சனம் செய்பவர் என்றே வைத்துக் கொண்டாலும், பெரும்பாலும் நடிகைகளைப் பற்றியே இவர்களின் விமர்சனம் சுற்றித் திரிகிறது. நயன்தாராவின் காதல் பற்றி விமர்சிப்போரும் கலாய்ப்போரும், சிம்புவைப் பற்றியோ அல்லது பிரபுதேவாவைப் பற்றியோ இவ்வாறாக விமர்சனம் செய்வதில்லை. விமர்சனம் என்றாலும், விளம்பரம் என்றாலும் இவர்களுக்குப் பெண்தான் கருப்பொருள், பெண்தான் கற்பைப் பேணிக்காக்க வேண்டியவள்.

நடிகையரின் அந்தரங்கங்களைப் பற்றிப் பதற்றப்படுவோர், அக்கறைக்கொள்வோர், உண்மையில் அந்த நடிகையின் அந்தக் குறிப்பிட்ட நிலைக்குக் காரணமான எந்த ஓர் ஆணைப் பற்றியும் யோசிப்பதுக்கூட இல்லை என்பதே கசப்பான உண்மை.

அட, கற்பைப் பற்றிக் கவலைப்படுவோர், அந்தப் பெண்ணுக்காக எந்தக் கருத்தையும் அல்லது உதவியையும் தரப் போவது இல்லை. "மச்சி அந்த வீடியோ இருக்கா?" என்ற அளவிலேயே இவர்களில் பெரும்பாலானோரின் அக்கறை நீர்த்துப் போகும்.

சரி நடிகைகளுக்குத்தான் இந்த நிலைமை. சாமானிய பெண்களுக்கு..?

*

நாடு முழுவதுமே பாலியல் தொழிலில் பெண்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் விரும்பி, இந்தத் தொழிலில் வந்திருக்கச் சாத்தியமில்லை. ஏதோ ஒரு நெருக்கடி, ஏதோ ஓர் இயலாமை, அந்த நெருக்கடியின் பின்னே, இயலாமையின் பின்னே, யாரோ ஒரு குடிகாரத் தகப்பனோ, சோம்பேறிக் கணவனோ, ஏமாற்றிய காதலனோ, பேராசைக் கொண்ட ஓர் உறவோ, பாலுக்காகத் தவிக்கும் குழந்தையோ, நிராதரவான ஒரு குடும்பமோ அல்லது நசுக்கப்பட்ட ஏதோ ஒரு கனவோ நிச்சயம் இருக்கலாம்.

எல்லா மாநிலங்களிலுமே பாலியல் தொழிலாளிகள் அணுகக் கூடிய வகையில்தான் இருக்கின்றனர். இருப்பினும், நாட்டில் பாலியல் பலாத்காரங்கள், குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமை எல்லாம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கு என்ன காரணம்?

ஆடைகள்தான் பெண்கள் கொடுமைக்கு ஆளாகக் காரணம் என்று வாதிக்கும் ஆண்கள் கூட்டத்துக்கு, குழந்தைகள் மீதான் பாலியல் வன்முறைத் தாக்குதலுக்கு காரணம் கூற முடியவில்லை. பிறக்கும்போது குழந்தைகள் அம்மணமாய்த்தான் பிறக்கும் என்ற இயற்கையின் கூற்றை இவர்களால் மாற்ற முடியுமோ?

பெண்களைப் பற்றி ஆராயும் பொதுநலவாதிகளுக்காக நாம் பெண்களைப் பற்றிய சில செய்திகளைப் பார்ப்போம்

*

ஐம்பதைக் கடந்த ஒரு பெண், கணவர் வெளியூர் சென்றிருக்க, மூத்த மகள் கல்லூரிக்குச் சென்றிருந்த வேளையில், தன் பதினான்கு வயது மகனுடன் வீட்டில் படுகொலை செய்யப்பட்டார் என்று ஒரு தினசரி எழுதியது. ஐம்பது வயது பெண் தன் கள்ளக் காதலனால் கொலை செய்யபட்டார் என்று, பக்கத்தில் இருந்து சம்பவங்களைப் பார்த்தார்போல் விவரித்து எழுதியது.

சில பல மாதங்களுக்குப் பிறகு, அந்தப் பெண்ணின் கணவரால் திருட்டுக் குற்றத்துக்காக வேலையை விட்டுத் துரத்தப்பட்ட ஒருவன் பழிவாங்கும் செயலாக, திருட்டோடு சேர்த்து இரண்டு கொலைகளையும் செய்ததாகக் காவல்துறை வழக்கை முடித்து வைத்ததையும் அதே நாளிதழ் சிறிய செய்தியாய் பிரசுரித்து இருந்தது. மருந்துக்கும்கூட தவறான தகவலுக்கு மன்னிப்பு இல்லை.

*

ஓர் இளம் பெண் தன் தாயுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, கஞ்சா கடத்தினார் என்று சில வருடங்களுக்கு முன் ஒரு வழக்கு பரபரப்பு ஊட்டியது. பின்னாளில் அந்தப் பெண் கஞ்சா கடத்தவில்லை, அவர் வைத்திருந்த பணம் அவருடையது, அவர் நிரபராதி என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறி விடுவித்தது, குற்றம் சாட்டப்பட்டு அந்தப் பெண் விடுதலை செய்யப்படுவதற்கு நடுவே பல வருடங்கள் கடந்து போயிற்று.

போதைப் பொருள் கடத்தியது பொய்யான குற்றசாட்டு என்று தீர்ப்பு வந்தாலும், இடைப்பட்ட பல வருடங்களில் பத்திரிகைகள் செய்திகள் அனைத்தும் அந்தப் பெண் யாருடன் படுக்கையைப் பகிர்ந்து அந்தப் பணத்தைப் பெற்றிருப்பார் என்றும், அந்தப் பெண்ணின் நடத்தை, அந்தப் பெண்ணின் குடும்பத்தைக் குடும்பத்தைச் சார்ந்தவர்களின் வாழ்க்கைக் குறிப்பு, புகைப்படங்கள் என்று எல்லாவற்றையும் வெளியிட்டு இருந்ததன சில பத்திரிகைகள். விடுதலை செய்யப்பட்ட அன்று மட்டும் மிகச் சிறிய அளவில் செய்தி வெளியிட்டிருந்தன.

செய்திகள் என்பதும் இங்கே பெண்ணைச் சுற்றியேதான். கணவனால் பெண் கொலை செய்யபட்டால் முதலில் முன்னிலைப்படுத்தப்படும் தகவல் - பெண்ணுக்கு கள்ளக்காதல், (இந்தக் கள்ளக் காதல் என்ற வார்த்தைப் புழக்கம் இந்தியப் பத்திரிக்கைக்கே உரித்தான ஒரு பெருமை) ஏன் கணவனுக்கு ஏற்பட்ட காதலால் அந்தக் கொலை நிகழ்ந்திருக்கக் கூடாதா? பெண் கணவனைக் கொலை செய்தால், அதுவும் ஏற்பட்ட கள்ளக் காதல்தான். ஒரு குடிகாரக் கணவனைச் சகிக்க முடியாமல் செய்த கொலையாகவும் அது இருக்கலாம். முதலில் அந்தச் செய்தி வந்தால், அதில் வாசகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டும் கடமையை ஆற்ற முடியுமா என்று ஆராய்வதுதான் பத்திரிகைச் சுதந்திரமா?

அழகிகள் கைது என்று படிக்கும்போது, அழகன்கள் என்னவானார்கள்? அந்த அழகிகளால் சீரழிக்கப்பட்ட அத்தனை அப்பாவிகளும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவார்கள் என்று நான் யோசித்ததுண்டு.

களவு என்றால் பெண், கொலை என்றால் பெண், கற்பு என்றால் பெண், காதல் தோல்வி என்றால் ஏமாற்றியவள், கள்ளக் காதல் என்றால் அதற்கும் காரணம் பெண். பாலியல் தொழிலுக்குக் காரணம் பெண், திரையில் மின்னினாலும் தன் தனிப்பட்ட வாழ்க்கையை நிம்மதியாய் வாழ முடியாதவள் பெண். விளம்பரத்தில் சமைப்பதற்கும் பெண், நீங்கள் போடும் வாசனைத் திரவியத்தில் காம மிகுதியில் உங்களைப் பின் தொடர்பவளும் பெண், விளம்பரம் என்றாலும் விமர்சனம் என்றாலும் உங்கள் விதைகளுக்கான தோட்டம் என்றாலும் எல்லாவற்றிருக்கும் காரணம் பெண்.

வாய்க் கூசாமல் பெண்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு உங்கள் சொந்த வாழ்க்கையின் கசடுகளைச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு கஞ்சா பொட்டலமும், பாலியல் தொழிலாளி என்ற பட்டமும் போதுமானதாய் இருக்கிறது ஒரு பெண்ணின் மீது புனைவு வழக்குகளைப் போடுவதற்கு. பொய்க் கூறும் நல்லுலகு, ஓர் உண்மையேனும் கூறி ஒரு பெண்ணை ஒரு குடும்பத்தை வாழ வைக்கட்டும்.

பத்திரிகை தர்மம் என்று ஒன்று உள்ளது. ஜனநாயகத்தின் முக்கியத் தூணில் பத்திரிகை என்பது ஒன்று. கமலின் விருப்பபடி வாழும் அவரின் சொந்த வாழ்க்கையை செய்தியாக்காத, விமர்சிக்காத, விமர்சிக்கக் கூடாத உங்களின் நிலைப்பாடு நயன்தாராக்களையும் திரிஷாக்களையும் வாழ விடட்டும்.

*

இந்தியா என்று ஒரு நாடு உள்ளது. அருமையான வளங்களும், நால்வகைக் காலப் பருவ நிலைகளும் கொண்டது. உலகின் முக்கியச் செல்வந்தர்கள் இந்தியர்கள். எனினும் இந்தியர்கள் ஏழைகள். உலகில் அதிக ஆணாதிக்க மனோபாவத்தோடு இருப்பவர்கள் - அவ்வாறு செயல்படுபவர்கள் இந்திய ஆண்களே ஓர் ஆய்வறிக்கைச் சொல்கிறது.

இந்தியக் கண்மணிகள் ஒரு பக்கம் திரையரங்குகளில் லயித்துக் கிடக்கிறார்கள். படங்களையும் நடிகைகளையும் விமர்சித்துப் புரட்சி செய்கிறார்கள். ஊழல்களுக்கு வாய் பொத்தி போதையில் திளைக்கும் மற்றொரு குழு, பெற்றவளுக்குச் சோறு போட முடியாவிட்டாலும், பதவிக்காக அம்மையென்றும் அப்பனென்றும் ஆராற்றிக் கிடக்கிறது.

ஆண்களும் பெண்களுமாய்த் தெரிந்தும் தெரியாமலும் கதைகள் புனைகிறோம், எல்லாம் பெண்களைப் பற்றியே!

நடிகைகளை நடிப்புக்காக விமர்சனம் செய்யுங்கள், அரசியல் தலைவர்களை ஊழலுக்காக விமர்சனம் செய்யுங்கள், பிள்ளைகளை அவர்களின் வருங்காலத்துக்காக விமர்சனம் செய்யுங்கள், யாரை நீங்கள் விமர்சித்தாலும் உங்களின் விமர்சனம் என்பது ஊக்குவிப்பதற்காக இருக்கட்டும், மற்றவர்களின் நலனுக்காக, நாட்டின் நலனுக்காக இருக்கட்டும், ஆனால் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதற்கு முன்பு உங்கள் மனசாட்சி சொல்வதைக் கொஞ்சம் உற்றுக் கேளுங்கள், "நீங்கள் வழிபடும் கடவுள் அங்கேதான் ஒளிந்து கொண்டு இருக்கிறார்!"

மு.அமுதா - தொடர்புக்கு amudhamanna@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x