

அ.மகாலிங்கம்
தேசிய கண்தான இரு வார விழா ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் செப். 8-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. கண்தானம் பற்றிய விழிப்புணர்வை ஒவ்வொருவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய தேவை உள்ளது.
கண் பார்வை இழப்பு என்பது இந்தியாவில் அதிகம். சுமார் ஒன்றரை கோடி பேர் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 60 சதவிகிதம் பேர் 12 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்க கண்தானம் பெரிதும் உதவுகிறது.
செய்ய வேண்டியவை என்ன?
இறந்தவரின் கண்களை அப்படியே மற்றவர்களுக்கு பொருத்தமாட்டார்கள். கண்ணிலுள்ள கார்னியா என்ற கருவிழியை மட்டும் எடுத்து பார்வையிழந்தவருக்கு பொருத்துகிறார்கள். கண்களை எடுத்தபின் இமைகளை மூடி தைத்து விடுவதால், முகம் விகாரமாக தோன்றாது.
இறந்த பிறகு, மண்ணால் அரிக்கப்பட்டோ அல்லது தீயினால் எரிக்கப்பட்டோ, எவ்வித பலனும் இல்லாமல் போகக்கூடிய கண்கள் தானமாக கொடுக்கப்பட்டால் இறந்த பிறகு அவரின் கண்கள் மூலம் மற்றவர்கள் வாழ்வார்கள்.
நமக்கு தெரிந்து யாரேனும் ஒருவர் மரணமடைந்துவிட்டால்,அந்த வேளையில் நெருங்கிய உறவினர்கள் வேதனை மற்றும் அதிர்ச்சியில் இருப்பார்கள். அவர்களுக்குஆறுதல் கூறி, மரணமடைந்தவர் உடல் உறுப்புகள் அல்லது கண்களை தானம் செய்ய உறுதிமொழி ஏதேனும் எடுத்திருந்தால் உடனடியாக கண் வங்கியை தொடர்புகொள்ளலாம்.
கண்தான உறுதிமொழி
எடுத்திருக்கவில்லை என்றால் நெருங்கிய உறவினரிடத்தில் பக்குவமாக எடுத்துச் சொல்லி "அவரது கண்களை தானம் அளிப்பதால், இரண்டு பேருக்கு பார்வை கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறதே.. அவரது ஆத்மா சாந்தியடையுமே" என்று ஊக்குவித்து அவர்களது சம்மதம் பெற்று கண்வங்கியை தொடர்பு கொள்ளலாம்.
கண் வங்கி மற்றும் அதன் செயல்பாடுகள்:
கண் வங்கி என்பது ஒரு சமுதாய அமைப்பாகச் செயல்படுகிறது. இது கண் தானம் மூலம் பெறப்படும் கருவிழிகளைச் சேகரித்து, முறையாகப் பரிசோதித்து அதைக் கருவிழி மாற்றுசிகிச்சை செய்யும் கண்மருத்துவமனை மருத்துவருக்கு அனுப்பும் பணியைக் கண் வங்கிகள் செய்து வருகின்றன.
கண் வங்கிகளின் பணிகள்:
* பயிற்சி பெற்ற மருத்துவர்கள் அடங்கிய குழு 24 மணி நேரமும் கண்களைத் தானமாகப் பெற்றிட தயார் நிலையில் வைத்துள்ளது.
தானமாகப் பெறப்பட்ட கருவிழிகளை பரிசோதனை செய்து அவற்றைத் தரம் பிரித்தல்.
* நல்ல நிலையிலுள்ள கருவிழிகளை மாற்று அறுவை சிகிச்சை மருத்துவருக்கு அனுப்பி வைத்தல்.
* மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்த முடியாத கரு விழிகளைப் பல்வேறு புதிய ஆராய்ச்சிப் பணிகளுக்கும், கண்களைப் பதப்படுத்தல் குறித்த ஆராய்ச்சிக்கும் பயிற்சி கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கும் அனுப்பி வைத்தல்.
* கண் தானம் செய்வது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துதல்.
ஆகியவை கண் வங்கிகளின் பணிகளாகும்.
கண் வங்கியை தொடர்பு கொண்டு மரணமடைந்தவரின் பெயர், வயது, ஆண்/பெண், மரணத்தின் காரணம், மரணமடைந்த நேரம், தற்போது உடல் இருக்கும் இடத்தின் முகவரி ஆகியவற்றுடன், தகவல்அளிப்பவரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் போன்ற விவரங்களை அளித்தால் உரிய நேரத்திற்குள் கண் வங்கி மருத்துவர் குழு வர வசதியாக இருக்கும்.
இறந்தவரின் உடலில் இருந்து 6 மணி நேரத்துக்குள் கண்களை அகற்றிவிட வேண்டுமென்பதால், இறந்தவுடன் அருகில் உள்ள கண் வங்கிக்குத் தொலைபேசி மூலம் தகவல் சொல்ல வேண்டும்.
இறந்தவரின் கண்களை மூடி, மூடிய இமையின்மேல் ஈரப் பஞ்சை வைக்கலாம். உடல் வைக்கப்பட்டிருக்கும் அறையின் மின்விசிறியை நிறுத்திவிட வேண்டும்.
கண் வங்கியிலிருந்து மருத்துவர் வீட்டுக்கே வந்து கண்களை எடுத்துச்செல்வார். கண் விழிப்படலத்தை எடுக்க 10 நிமிடங்கள் போதும். எடுத்தவுடன் முகம் விகாரமாகத் தோன்றாது. ஆண், பெண், சிறுவர், பெரியவர், கண்ணாடி அணிந்தவர், கண்ணில் அறுவைசிகிச்சை செய்தவர்கள் என யார் வேண்டுமானாலும் தானம் செய்யலாம். ஒருவரிடமிருந்து தானமாகப் பெற்ற இரண்டு கண்கள், பார்வை இழந்த இரண்டு நபர்களுக்குப் பொருத்தப்படுகின்றன.
கண் தானம் செய்வதற்கு ஜாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம், ஆண் / பெண் பாகுபாடு ஏதும் கிடையாது. மரணமடைந்த அனைவரது கண்களும் தானமாக ஏற்றுக்கொள்ளப்படும். அனைத்து மதங்களும் கண் தானம் உட்பட அனைத்துவிதமான தானங்களையும் போற்றுகின்றன.
எந்த வயதுள்ளவரும் கண்தானம் செய்யலாம். ஒரு வயது நிரம்பிய குழந்தை முதல், எவ்வளவு வயதானவராக இருந்தாலும், அவரது கண்கள் தானமாக ஏற்றுக் கொள்ளப்படும்.
கண்ணாடி அணிந்தவர்களும் கண்ணில் கண் புரை நீக்க அறுவை சிகிச்சை (காட்ராக்ட்) செய்துக் கொண்டவர்களும் கூட தானம் அளிக்கலாம்.
ஒருவரது மரணத்தின் பின்னணியில் ஏதேனும் தொற்று நோய்க்கிருமிகள், வெறிநாய்க்கடி, கல்லீரல் அழர்ச்சி, கண்களில் புற்றுநோய், உடலில் ஒன்றுக்கும் மேற்பட்டஇடங்களில் புற்று நோய் பரவிய நிலை, எய்ட்ஸ், மஞ்சள் காமாலை போன்ற பிரச்சினைகள் இருந்தால் அவர்களது கண்கள் ஆராய்ச்சிகளுக்கு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
சென்னையில் உள்ள சில முக்கியமான கண் வங்கிகள்:
அரசு. கண் மருத்துவமனை , எழும்பூர்,தொலைபேசி எண் : 044 - 28555281
சங்கர நேத்ராலயா - தொலைபேசி எண் 044 – 28281919
ராஜன் கண் மருத்துவமனை - கண் வங்கி தொலைபேசி எண் : 044 28340300
அகர்வால் கண் மருத்துவமனை - கண் வங்கி ,தொலைபேசி எண் 044 -28116233
வேண்டுகோள் : கண் தானம் பற்றி நாம் ஒவ்வொருவரும் ( பொது மக்கள் , பிரபலமான நபர்கள் , திரைத்துறையினர் , மாணவ - மாணவிகள்) பார்வை வழங்கும் தூதுவராவோம்.
கட்டுரையாளர்: மருத்துவமனை மற்றும் சுகாதார மேலாண்மை வல்லுனர்களின் கூட்டமைப்பு (இந்தியா)- முன்னாள் கல்வி அதிகாரி மற்றும் மேம்பாட்டு மேலாளர் சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனை, சென்னை