Published : 20 Aug 2019 20:46 pm

Updated : 21 Aug 2019 10:19 am

 

Published : 20 Aug 2019 08:46 PM
Last Updated : 21 Aug 2019 10:19 AM

மதுரையின் பெருமை பேசும் போஸ்ட் கார்டுகள்: மறந்துபோன பழக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஓர் எழுத்தாளர்

powerful-city-images-and-beautiful-moments-of-madurai-captured-by-nicholas-francis

தேர்வு முடிவுகள் தொடங்கி குடும்பக் கதைகள், சுபச் செய்திகள், வலிகள் என உணர்வுகளைத் தாங்கி வந்த போஸ்ட் கார்டுகளுக்கு இன்று மக்களோடு ஒன்றி உறவாடும் வேலை இல்லாமல் போய்விட்டது.

ஓராயிரம் உணர்வுகளைத் தாங்கிவரும் தூதுவனாக இருந்த, ரத்தினச் சுருக்கமாக சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்கும் வித்தையை இலவசமாகக் கற்றுக் கொடுத்த போஸ்ட் கார்டுகள் அருகி வருகின்றன. இப்போதெல்லாம் பெரும்பாலும் 'ப்ரோமோடட்' என்ற பள்ளிக்கூட தகவலோ அல்லது நகை ஏலம் என்ற வட்டிக்கடை தகவலுக்கோ அதுவும் இல்லாவிட்டால் ஏதாவது அரசு சார்ந்த தகவலுக்கோ மட்டுமே அவை பயன்படுகின்றன.

மொபைல் போன் வந்துவிட்டது, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் வந்துவிட்டன. வீடியோ காலில் பேசலாம். இத்தகைய அறிவியல் வளர்ச்சிகளால் போஸ்ட் கார்டை யாரும் பயன்படுத்துவதில்லை. அட ரத்தினச் சுருக்கமாகத்தானே எழுத வேண்டும். OMG, ROFL, GM, GN, என்றெல்லாம் பல சுருக்கங்கள் இருக்கின்றன என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால், அங்கே வார்த்தைகள் மட்டுமல்ல வார்த்தைக்குள் பொதிந்திருக்கும் உணர்வுகளும் சுருக்கப்பட்டுள்ளன.

இப்படி வார்த்தைகளைச் சுருக்கி எழுதி எழுதி நிறைய குழந்தைகளுக்கு வார்த்தைகளை எழுத்துப் பிழை இல்லாமல் எழுதக்கூட தெரியாத நிலையே இருக்கிறது என்கின்றனர் ஆசிரியர்கள். போஸ்ட் கார்டுகளையும் அதில் சுருக்கமாக தகவல்களைப் பகிர்தலையும் ஏன் மீண்டும் ஊக்குவிக்கக் கூடாது என்ற ஓர் எழுத்தாளரின் தேடலே பிரிண்டட் போஸ்ட் கார்டு என்ற ஒன்றை அறிமுகம் செய்யத் தூண்டியிருக்கிறது.

வேலையின் நிமித்தமாக மதுரை வந்த நிக்கோலஸ் பிரான்சிஸுக்கு எழுத்தின் மீதான ஈடுபாடும் மதுரை நகர் மீதான காதலும் அடுத்தடுத்த தேடல்களுக்கு வழிவகுத்தது. மதுரையைச் சுற்றிய கிராமங்களில் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கும் இயற்கை, கோயில்கள், வரலாற்றுச் சின்னங்கள், எளிய மனிதர்கள் என எல்லாமும் எழுத்தைத் தாண்டியும் நகரின் எழிலை புகைப்படம் மூலமும் சாட்சிப்படுத்தத் தூண்டியிருக்கிறது.

போஸ்ட் கார்டை மீட்டெடுப்பதையும் மதுரையின் அழகை ஆவணப்படுத்துவதையும் ஒரே முயற்சியில் செய்ய நினைத்த பிரான்சிஸ் பிரிண்டட் போஸ்ட் கார்டு முறையை கையில் எடுத்தார். உலக புகைப்பட தினத்தன்று (ஆக.19) பிரிண்டட் போஸ்ட் கார்டு குறித்து நிக்கோலஸ் பிரான்சிஸிடம் பேசியபோது பல சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

''நகரின் கலாச்சாரத்தைப் பற்றி சுவாரஸ்யமான பல புத்தகங்கள் இருக்கின்றன. எழுத்தாளர் என்ற முறையில் அவற்றை வாசித்திருக்கிறேன். அப்போதுதான் ஏன் மதுரையைப் பற்றி புகைப்பட ஆவணம் தயாரிக்கக் கூடாது எனத் தோன்றியது. அத்துடன், எனது போஸ்ட் கார்டுகளை மீட்டெடுக்கும் ஆசையையும் இணைத்தேன். அதன் முதல் முயற்சியாக பிரிண்டட் போஸ்ட் கார்டுகளை கையில் எடுத்துள்ளேன்.

நான் தயாரித்துள்ள பிரிண்டட் போஸ்ட் கார்டுகளில் ஒரு பக்கத்தில் மதுரையின் அழகை ஆவணப்படுத்தும் புகைப்படம் இருக்கும். இன்னொரு பக்கத்தில் ஸ்டாம்ப் ஒட்டவும், பயனாளர்கள் தங்கள் எண்ணங்களைத் தெரிவிக்கவும் இடமிருக்கும்.

மேக்னிஃபிசியன்ட் மதுரை (Magnificent Madurai) என்ற பெயரில் மதுரையைச் சுற்றியுள்ள அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, கீழக்குயில்குடி சமணர் மலை, திருமலைநாயக்கர் மஹால், திருமலை நாயக்கர் மஹாலின் உள்ள தூண்கள், ஒலி ஒளிக் காட்சியின் போது மஹாலின் தோற்றம், காந்தி மியூசியம், அழகர் கோயில், தெப்பக்குளம், ஜல்லிக்கட்டு, செயின்ட் மேரிஸ் சர்ச், மீனாட்சி தேரோட்டம், கோரிப்பாளையம் தர்கா, சேதுபதி பள்ளி, பாலமேடு - அலங்காநல்லூர் பாதையில் உள்ள காவல் தெய்வம், மதுரை ரயில் நிலையம், விவசாய நிலங்கள், அய்யனார் சிலை, பூ மார்க்கெட், மதுரை சூழல் பூங்கா, விளாச்சேரி பொம்மை தொழிலாளர்கள், செயின்ட் ஜோசப் சர்ச், செயின்ட் லூர்து சர்ச், அழகர் திருவிழாவில் வேடமணிந்த மனிதர்கள், திருப்பரங்குன்றம், மதுரை கிராமங்களில் பொங்கல் திருவிழா, பழமையா ஏவி பாலம் ஆகியனவற்றைப் புகைப்படம் எடுத்தேன். மொத்தம் 30 இடங்களில் எடுத்த புகைப்படங்களைக் கொண்டு பிரிண்டட் போஸ்ட் கார்டுகளைத் தயாரித்தேன்.

சோதனை முறையில் சில கார்டுகளில் ரூ.5 தபால் தலை ஒட்டி எனக்கே அனுப்பிப் பார்த்தேன். அவை முறையாக வந்து சேர்ந்தன.

அடிப்படையில், மாணவர்களிடையே உத்வேகத்தை உண்டாக்கும் ஒரு பேச்சாளர் (மோடிவேஷனல் ஸ்பீக்கர்) என்ற முறையில் அந்தந்த ஊரின் பெருமைகளைப் பற்றி பேசுவேன். பல்வேறு இடங்களில் அந்த மாணவர்கள் தங்கள் ஊர் பெருமை தெரியாமல் இருப்பதை நினைத்து வியந்திருக்கிறேன்.

சில இடங்களில் எனது பிரிண்டட் போஸ்ட் கார்டுகளைக் கொடுக்கும்போது மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. புத்தகக் காட்சிகள், சில கடைகள் மூலம் இவற்றை சந்தைப்படுத்துகிறேன். அங்கிருந்து இவற்றைப் பெறுபவர்கள் நல்ல பின்னூட்டங்களை அனுப்பி வருகின்றனர். சில குழந்தைகள் புகைப்படங்களைப் பார்த்து அந்த இடங்களுக்கு எல்லாம் செல்ல வேண்டும் என விருப்பம் தெரிவிக்கின்றனர்.

சந்தைப்படுத்துதலைக் காட்டிலும் கலாச்சாரமும், வரலாறும் இளம் தலைமுறையினருக்குச் சென்று சேர வேண்டும் என்பதே எனது இலக்கு.

ட்ராவல் லோன் வாங்கி வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதுடன் நாம் வாழும் பகுதியில் இருக்கும் மனிதர்களையும் மரபுகளையும் வரலாற்றையும் அறிய வேண்டும். அதுவே குழந்தைகளின் கற்றல் திறனை, புதிதாக விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தேடலை அதிகரிக்கும்.

ஏன் குழந்தைகளுக்கு புகைப்படக் கலை மீதுகூட ஆர்வம் வரலாம். வீடு, பள்ளி, மாலை வகுப்பு, ஸ்போர்ட்ஸ் க்ளப்பில் விளையாட்டுப் பயிற்சி என்று குழந்தைகளின் உலகை நாம் சுருக்கிக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் அவர்களின் கனவு பெரியது, கேள்விகள் முடிவற்றது, கற்பனைகள் எல்லையற்றது அவற்றிற்குத் தகுந்த பாதையை நாம்தான் ஏற்படுத்தித் தர வேண்டும்.

விடுமுறை என்றால் டிவியின் முன் முடங்காமல் உள்ளூரைச் சுற்றிப் பார்த்தாலே போதும். வீடு திரும்பும்போது அடுத்த சில நாட்களுக்கு வீட்டில் உள்ளவர்கள் பேசிக் கொள்ள அவ்வளவு விஷயங்கள் கிடைக்கும்.

ஆளுக்கொரு செல்போன், அதில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப அப்ளிகேஷன் என முடங்க வேண்டியிருக்காது. குடும்பத்துடன் ஊர் சுற்றி மகிழும்போது குழந்தைகளுக்கு தாங்கள் பார்த்ததைப் பற்றி பேசவும், சிலவற்றை எழுத்தாகப் பதிவு செய்யவும் பழக்கம் ஏற்படும்.

இதுதான் என் எதிர்பார்ப்பும் கூட.

இதை ஊக்கப்படுத்தும் விதத்தில்தான் மார்வலஸ் மதுரை (Marvellous Madurai) என்ற பெயரில் மதுரை நகர் பற்றி 12 புகைப்படங்களை ஒருங்கிணைத்து காலண்டர் ஒன்றை உருவாக்கினேன்.

அடுத்த இலக்கு மதுரையைப் பற்றிய ஒரு மேஜைப் புத்தகம் (காஃபி டேபிள் புக்) முற்றிலும் புகைப்படங்களுடன் உருவாக்கும் முயற்சியில் உள்ளேன். அதனை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

மதுரையின் அழகை சில தொழில்முறை புகைப்படக்காரர்கள் மிக அழகாக மிக நேர்த்தியாகப் படம் பிடித்திருக்கிறார்கள். இன்றும் படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், நல்ல புகைப்படங்களின் காதலன் என்றளவில் மட்டும் என் கேமராவோடு ரசனையையும் சேர்த்து தூக்கிக் கொண்டு சில புகைப்படங்களை எடுக்கிறேன். என் விருப்பம் சிலருக்குத் தூண்டுதலாக அமையலாம். என் போஸ்ட் கார்டுகள் மூலம் உள்ளூர் வரலாற்றை சில நூறு பேராவது தெரிந்துகொள்ளலாம்'' என்று நிக்கோலஸ் பிரான்சிஸ் புகைப்படக் கலை மீதான தன் ஆர்வத்தைப் பற்றிச் சொல்லி முடித்தார்.

நிக்கோலஸ் எழுதிய புத்தகங்கள் சில: வெற்றி முகம், எண்ணங்கள் வாழ்க்கையின் வண்ணங்கள், Quick Start to a Powerful Personality, Placement - Personal Guide for Success, A Book for Career Developement, Handbook on Professional Social Work Practice.


மதுரைபிரிண்டட் போஸ்டு கார்டுகள்நிக்கோலஸ் பிரான்சிஸ்Nicholas FrancisMagnificent Madurai Memorabilia

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author