Last Updated : 20 Aug, 2019 05:29 PM

 

Published : 20 Aug 2019 05:29 PM
Last Updated : 20 Aug 2019 05:29 PM

பறை இசையைப் பயிற்றுவிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: கலைமாமணி விருது வென்ற ராஜா பேட்டி

பறை இசைதான் மனிதனின் ஆதி இசை. அது எந்தக் கலையிலும் குறைந்தது இல்லை என ஆணித்தரமாகக் கூறுகிறார் கலைமாமணி விருது வென்ற மதுரை பனையூரைச் சேர்ந்த ராஜா.

தமிழக அரசு பறையாட்டக் கலைஞர் ராஜாவுக்கு இந்த ஆண்டு கலைமாமணி விருது வழங்கியுள்ளது.

கலைமாமணி விருது வரலாற்றில் முதன்முதலில் பறை இசைக் கலைஞருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஊடக கவனத்தை அதிகம் பெறாத ராஜாவை 'இந்து தமிழ்' இணையதளத்துக்காகத் தொடர்பு கொண்டோம். அறிமுகத்திலேயே கிராமத்து நேசத்துடன் பேசினார்.

பறை இசைக் கலைஞரைக் கவுரவித்து முதன்முதலில் கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. எப்படி உணர்கிறீர்கள்?

ஒரு கலைஞனுக்கு இதைவிட என்ன மகிழ்ச்சி இருந்துவிட இயலும். இந்த விருதை எனது தாய், தந்தைக்கும் எனது குருநாதர் முனியாண்டிக்கும் சமர்ப்பிக்கிறேன். தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடக்கம் நானாக இருக்கலாம். ஆனால் என்னைப் போன்று நிறைய கலைஞர்கள் இருக்கிறார்கள். இந்தக் கலையை வாழ்க்கையாக, மூச்சாகக் கொண்டிருக்கும் இன்னும் நிறைய கலைஞர்கள் கவுரவிக்கப்பட வேண்டும்.

பறை இசை மீது ஈடுபாடு வந்தது எப்படி?

பறையை என் தாத்தாவும், என் அப்பாவும் இசைத்தார்கள். அப்படித்தான் எனக்கு அதில் ஈடுபாடு வந்தது. ஆனால் எனக்கு அதை முறையாகக் கற்றுக் கொடுத்தது எனது குருநாதர் முனியாண்டி. அவர் மறைந்துவிட்டார். பால்ய வயதில் கற்றுக்கொண்ட கலையை இன்றும் பழகுகிறேன். எனக்கு இப்போது 49 வயதாகிவிட்டது. இதுதான் என் தொழில். எனக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மூத்த மகன் பொன்.சேகர் டிப்ளமோ படிக்கிறார். இளைய மகன் பிரசாந்த் பள்ளியில் படிக்கிறார். இருவரின் லட்சியம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், இந்தக் கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்றேன். இருவருமே என்னோடு சேர்ந்து நன்றாகப் பறை இசைப்பார்கள்.

இந்தக் கலைக்கு இப்போது எப்படி வரவேற்பு இருக்கிறது?

சமீபகாலமாக நல்ல வரவேற்பு உள்ளது. முன்பெல்லாம் இதை ஒரு சமுதாயத்துக்கானது என்று முத்திரையிட்டு வைத்திருந்தனர். அந்த பேதங்கள் இப்போது ஒழிந்துவிட்டன. இதுதான் ஆதிக் கலை என்பதைப் பலரும் புரிந்து கொண்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பறை இசை கற்கிறார்கள். எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் ஊரிலும் நிறைய இளைஞர்கள் பறை இசை கற்க முன்வருகின்றனர். நானும் கற்றுக் கொடுக்கிறேன். ஆனால், அவர்களிடம் நான் பணம் பெறுவதில்லை.

ஆடல் பாடல், லைட் மியூஸிக் என்றெல்லாம் பொழுதுபோக்குகள் இருக்கும்போது எப்படி நிகழ்ச்சி ஒப்பந்தம் செய்கிறீர்கள்? வருமானம் போதுமானதாக இருக்கிறதா?

திருமணம், சடங்கு, கோயில் திருவிழா தொடங்கி இறப்பு வரை எல்லா இடங்களிலும் பறை ஒலிக்கிறது. என் ஊர் பக்கம் நிறைய கிராமங்களில் பறை முழங்கிய பின்னரே சாமிக்கு அபிஷேகமே நடைபெறுகிறது. எங்கள் குழுவில் 8 முதல் 10 பேர் இடம்பெறுவோம். நிகழ்ச்சியை ஒப்பந்தம் செய்பவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப எண்ணிக்கை மாறும். சிலர் பெண் கலைஞர்களையும் கேட்பார்கள். ஒருவருக்கு ரூ.1000 முதல் ரூ.1500 வரை பெறுகிறோம். ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகளுக்குச் செல்கிறோம்.

திருமணம் நடைபெறாத மாதங்களில் கோயில் திருவிழா இருக்கும். அதனால் பிரச்சினை இல்லை. இருந்தாலும் மற்ற கலை நிகழ்ச்சிகளுக்கு வழங்கும் அளவுக்கு எங்களுக்கு ஊதியம் இல்லை.
சென்னையில் உள்ள இயல், இசை, நாடக மன்றம் மதுரையில் உள்ள தமிழ்நாடு கிராமிய வளர்ச்சி மன்றம் மூலமாக நான் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மஸ்கட் போன்ற நாடுகளில் பறை இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளேன். அங்கெல்லாம் தமிழர்கள் இந்த ஆதிக் கலையைக் கொண்டாடுகின்றனர்.

செலவுகளுக்கு எப்படி தாக்குப்பிடிக்கிறீர்கள்?

புதிதாகப் பறை வாங்க வேண்டுமென்றால் ரூ.2000 முதல் ரூ.2500 வரை செலவாகும். மதுரையில் வாடிப்பட்டியில்தான் இது தயாராகிறது. அங்கு வாங்கிக் கொள்வோம். சில நேரங்களில் பறையின் தோல் கிழிந்துவிடும். அப்படியான நேரங்களில் நாங்களே பழுது பார்த்துவிடுவோம். மற்றபடி ஆடை, அலங்காரம், அரிதாரத்துக்கான செலவுகள் இருக்கின்றன. அதுபோக கையில் குறைந்து அளவே மிஞ்சும். இருந்தாலும் என்னைப் போன்றோர் இந்தக் கலையை கையில் எடுத்துவிட்டதால் அதை எந்த சூழ்நிலையிலும் விட்டுவிடாமல் தொடர்கிறோம்.

அரசாங்கத்திடம் நீங்கள் முன்வைக்க விரும்பும் கோரிக்கை என்ன?

அரசு இசைக் கல்லூரிகளில் எல்லா கலைகளுக்கும் தனித்தனியே ஆசிரியர்கள் இருக்கின்றனர். பறை இசையைப் பயிற்றுவிக்கவும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமனம் செய்தால் கலையும் வாழும் கலைஞர்களும் வாழ்வார்கள் என்றார் யதார்த்தமாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x