Published : 16 Jul 2015 06:07 PM
Last Updated : 16 Jul 2015 06:07 PM

யூடியூப் பகிர்வு: மலையுடன் மோதிய மாமனிதன் மாஞ்சி!

தன் கிராம மக்களுக்காகத் தனியொரு மனிதனாகப் போராடிய மாமனிதர் தாஷ்ராத் மாஞ்சி . | வீடியோ இணைப்பு கீழே |

பிஹாரின் காயா நகருக்கு அருகில் உள்ள கெஹ்லவுர் கிராமம். அந்தக் கிராமத்தில் இருந்துக்கும் நகருக்கும் இடையே ஒரு மலை இருந்தது. இதனால், மருத்துவம் உள்ளிட்ட வசதிகளைப் பெற, அந்த மலையைச் சுற்றி நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை.

ஒருநாள், ஏழைக் கூலித்தொழிலாளியான மாஞ்சியின் மனைவி ஃபல்குனி தேவிக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டது. ஆனால், நீண்ட தூரம் பயணித்துதான் நகரில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தது. இதனால், உரிய நேரத்தில் மருத்துவம் பார்க்க முடியாத காரணத்தால் மனைவி இறந்துவிட, தன் கிராம மக்களுக்கும் இந்த அவல நிலைமை வந்துவிடக்கூடாது என்று நினைத்தார் மாஞ்சி.

கெஹ்லவுர் மலையைக் குடைந்து, பாதையை ஏற்படுத்தி, முறையான போக்குவரத்து மற்றும் மருத்துவ வசதியை ஏற்படுத்தித் தர ஆசைப்பட்டார்.

மனைவி இறந்ததற்கு அடுத்த ஆண்டு ஒற்றை மனிதராக தன் வேலையைத் தொடங்கியவரைப் பைத்தியக்காரனைப் போல பார்த்தனர் கிராம மக்கள். 1960 முதல் 1982 வரை தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளை மலையைக் குடைய மட்டுமே செலவிட்டார் மாஞ்சி.

கேலி கிண்டல்களையும், இளக்காரமான பார்வைகளையும் மட்டுமே மாஞ்சிசந்திக்க நேர்ந்தது. பாதிக்கும் மேற்பட்ட மலைப்பகுதிகளைத் தகர்த்த பின்னர், ஊர் மக்கள் மாஞ்சியை மலைப்பாகப் பார்த்தனர். மெல்ல மெல்ல மக்களின் உதவிகளும் மாஞ்சிக்குக் கிடைக்கத் தொடங்கின. முடிவில் காயா மாவட்டத்தின் அத்ரி மற்றும் வாசிர்கன்ச் இடையிலான தடைகளைத் தகர்த்தெறிந்தன அவரின் கைகள்.

55 கிலோ மீட்டர் தொலைவு இருந்த பாதை வெறும் 15 கிலோ மீட்டருக்கு சுருங்கி போக்குவரத்து எளிதானது. மக்களும் அரசும் மாஞ்சியைக் கொண்டாடத் தொடங்கினர். பல்வேறு விருதுகளை வழங்கி பீகார் அரசு மாஞ்சியைக் கவுரவித்தது.

ஆமிர்கானால் வழங்கப்பட்ட சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் இரண்டாவது எபிசோடின் முதல் அத்தியாயம் மாஞ்சிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அரசால் மாஞ்சியின் குடும்பத்துக்கு, பல உதவிகள் வழங்கப்பட்டன.

பிகாரில் பிறந்தவரான பிரபல இயக்குநர் மணிஷ் ஜாவா, மாஞ்சியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க ஆசைப்பட்டார். மாஞ்சியின் மரணப்படுக்கையின் போது அவர் கைரேகையை வாங்கி படத்துக்கான உரிமையையும் பெற்றுக் கொண்டார்.

தனுஷை வைத்து தமிழிலும், இந்தியிலும் இதைப் படமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சில காரணங்களால் மணிஷ் இதைப் படமாக எடுப்பது தடைபட, மாஞ்சியின் வரலாற்றைக் கையில் எடுத்தார் தேசிய விருதுகள் பெற்ற இயக்குநர் கேத்தன் மேத்தா.

வித்தியாசமான முயற்சிகளுக்குச் சொந்தக்காரரான நவாசுதீன் சித்திக், மாஞ்சியாக நடிக்க, ராதிகா ஆப்தே, ஃபல்குனி தேவியாக நடித்திருக்கிறார். சந்தேஷ் சந்தேலியாவின் இசை மற்றும் ராஜீவ் ஜெயின் ஒளிப்பதிவில், மாஞ்சியின் தனி மனிதப்போராட்டம் ஆத்மார்த்தமாய்ச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

மாஞ்சி- ஃபல்குனி தேவி இடையிலான காதல், மனைவியைப் பிரிந்து வாடும் மாஞ்சி, ஒற்றை மனிதனாக மலையைத் தகர்க்கும் மாஞ்சி, உண்ண உணவில்லாமல் இலை தழைகளைத் தின்ன நேரும் நிலையில் எல்லாரின் கண்களும் ஒரு நிமிடம் கலங்கிவிடுகின்றன

"முயன்றால் முடியாதது என்று எதுவுமே இவ்வுலகத்தில் இல்லை" என்னும் உண்மையை, தன் வாழ்க்கையிலேயே நிரூபித்த மாஞ்சி, இப்போது திரையிலும் சொல்ல வருகிறார்.

மாஞ்சி படத்தின் ட்ரெயிலர் இணைப்பு: