Last Updated : 09 Aug, 2019 05:46 PM

 

Published : 09 Aug 2019 05:46 PM
Last Updated : 09 Aug 2019 05:46 PM

ஆண்களுக்காக 11- அஜித் சொன்ன 'நோ மீன்ஸ் நோ' அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா?

பெண்ணுரிமைக்காக பெண்கள் குரல் கொடுப்பது இயல்பு. ஆனால், பெண்ணுரிமை என்னவென்பதை பெண்ணின் சுதந்திரம் எதுவென்பதை இந்த ஆணாதிக்க சமூகத்துக்கு ஒரு ஆண் அதுவும் பிரபலமான ஆணின் வாயிலிருந்து சொல்லவைத்து பதிவு செய்துள்ளது 'நேர்கொண்ட பார்வை' படக் குழு. அதற்காக நன்றிகளை உரித்தாக்கிக் கொள்ளும் வேளையில்தான் பாண்டே பேசிய வசனங்களுக்கு கை தட்டிய சில ஆண்களுக்காக மட்டும் இந்தக் கட்டுரையை எழுதவும் வேண்டியிருக்கிறது.

ஒரு காட்சியில் ஆண்ட்ரியாவுக்குப் பின்னால் சுவரில் தொங்கும் படத்தைக் காண்பிப்பார்கள். அதில் வண்ண வண்ண லிப்ஸ்டிக் புகைப்படத்தின் கீழ் "I don't wear the lipstick that I don't want" என்று எழுதியிருக்கும். இந்தப் படத்தின் சாராம்சமும் அதே 'நோ மீன்ஸ் நோ' (இல்லை என்றால் இல்லை).

இதன் வேரை நான் இப்படத்தின் ஆதாரமூலமான 'பிங்க்' படத்துடன் ஒப்பிடாமல் மாறாக ஜெர்மனி நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கிய சட்ட மசோதா ஒன்றுடன் தொடர்புபடுத்த விரும்புகிறேன்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜெர்மனி நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. பாலியல் பலாத்காரத்துக்கு அது புதிய விளக்கத்தைக் கொடுத்தது.

ஜெர்மன் மொழியில் 'NeinHeisstNein' என்றால் 'இல்லையென்றால் இல்லை' என்று பொருள். இந்த வாசகம் எழுதிய பதாகைகளுடன் ஜெர்மனி நகரங்களில் பெண்கள் திரண்டனர். ட்விட்டரில்கூட #NeinHeisstNein உலக அளவில் ட்ரெண்டாக்கப்பட்டது.

அதாவது பாலியல் வல்லுறவுக்கு ஆளாகும் பெண், உடல் பலத்தைப் பிரயோகித்து தன் எதிர்ப்பைக் காட்டினால் மட்டுமே அதை அவர் எதிர்க்கிறார் என்று அர்த்தமில்லை. வாய்மொழியாகவே 'இல்லை' , 'இதைச் செய்யாதே' என்று சொன்னாலும்கூட அது எதிர்ப்புதான்; ஒரு பெண்ணை அவள் அனுமதியின்றி தீண்டுவது, கிரிமினல் குற்றம் என்பதை சட்டமாக்க வேண்டி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

இப்படி ஒரு சட்டத்தை ஜெர்மனி நாடாளுமன்றம் கொண்டுவரக் காரணம் அங்கு நாளுக்கு நாள் அதிகரித்துவந்த பாலியல் குற்றங்கள்தான். ஜெர்மனியில் சராசரியாக ஆண்டுக்கும் 8,000 பலாத்கார வழக்குகள் பதிவாகின. அவற்றில் வெறும் 8% வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டன. இதன் பின்னணியை ஆராயும்போது எது பலாத்காரம் என்பதற்கான சட்ட வரையறையை வைத்தே பலரும் வழக்குகளில் இருந்து விடுதலையானது தெரியவந்தது. இந்நிலையில்தான் அந்நாட்டு நாடாளுமன்றம் பாலியல் பலாத்காரத்துக்கான விளக்கத்தை மாற்றி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது.

ஆனால், இந்த சட்டம்கூட போதாது இது ஒரு துவக்கம் மட்டுமே என்கின்றனர் ஜெர்மன் நாட்டு பெண்ணிய செயற்பாட்டாளர்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம் ஒரு பெண்ணை மது போதையில் மயக்கி பாலியல் பலாத்காரம் செய்யும்பட்சத்தில் அவர் நோ சொல்லும் நிலைமையில்கூட இருக்க மாட்டாரே, அதனால் இன்னும் சட்டத்தில் உட்பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர்.

இதனை நாம் இந்திய சமூகத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். இதற்காக நாம் தலைநகர் டெல்லி நிலவரத்தை எடுத்துக்கொள்வோம். இந்த ஆண்டு (2019) ஜூலை மாதம் வரை டெல்லியில் ஒட்டுமொத்தமாக 1,176 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. டெல்லி போலீஸாரின் புள்ளி விவரங்களின்படி, இவற்றில் 43 சதவீதம் உறவினர்கள், நண்பர்களால் நடந்துள்ளது. 16.25 சதவீதம் அண்டை வீட்டார் வாயிலாகவும், 12.04 சதவீதம் உறவினர்களாலும், 2.89 சதவீதம் சக ஊழியர்களாலும், 22.86 சதவீதம் அடையாளம் தெரியாத நபர்களாலும் நடந்துள்ளது.

இந்த புள்ளிவிவரங்களில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்களாக இருக்கட்டும், இல்லை இதை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நிமிடம் நடந்துகொண்டிருக்கும் பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் எந்த ஒரு பெண்ணாகவும் இருக்கட்டும். வேண்டாம் என்று சொல்லியிருப்பார்கள்தானே. ஏன் தமிழகத்தை அதிரவைத்த பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில்கூட ஓர் இளம் பெண் 'அண்ணா வேண்டாம்..' என்ற அலறுவது தொலைக்காட்சிகள் வாயிலாக ஒலித்ததே. அதைக் கேட்டு மறந்துவிட்டதாலோ என்னவோதான் திரையரங்கில் பாண்டேவின் குறுக்குவிசாரணை குதர்க்க கேள்விகளுக்கு இன்னும் சில ஆண்களால் கைதட்ட முடிகிறது.

இந்தியாவில் பாலியல் பலாத்காரக் குற்றங்களைக் கையாளும் சட்டம் தொடர்பாகவும் 'நேர்கொண்ட பார்வை' சொல்லும் நோ மீன்ஸ் நோ தொடர்பாகவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் வழக்கறிஞர் சங்க பொதுச் செயலாளர் சிவசங்கரியிடம் பேசினோம்.

"2018 சட்டத் திருத்தத்தின்படி பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க இந்திய தண்டனைச் சட்டத்தில் இடமிருக்கிறது. இப்போது போக்ஸோ சட்டமும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க வழிசெய்துள்ளது. உங்கள் கேள்வியில் ஜெர்மன் நாட்டு சட்டம் பற்றி சொன்னீர்கள். நிச்சயமாக இப்படியொரு சட்டம் இங்கேயும் வேண்டும். குற்றவாளிகளுக்கு அப்போதுதான் ஓர் அச்ச உணர்வு ஏற்படும். சட்டத்தின் எந்த ஓட்டையை வைத்தும் நாம் தப்பித்துவிட முடியாது என்ற பயம் ஏற்படும்.

ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டங்கள் மட்டுமே போதாது. சமூக மாற்றம் வேண்டும். அதைத்தான் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் சொல்கிறது என நம்புகிறேன். பாலின சமத்துவம் குறித்து இன்று பள்ளி, கல்லூரி தொடங்கி பணியிடம் வரை எல்லா இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சினிமா போன்ற ஊடகங்களும் அதில் இப்போது இணைந்து கொண்டன. இது வரவேற்கத்தக்கது. ஆனால் பாராட்டத்தக்க மாற்றம் வரவேண்டுமானால் அது ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தொடங்க வேண்டும். அங்கே நிலைநாட்டப்படும் பாலின சமத்துவமே ஆண்களின் பார்வையை நேர்கொண்ட பார்வையாக்கும்" என்றார் அழுத்தமாக.

இந்த சமூகம் எப்படியான கற்பிதங்களைப் பெண்கள் மீது திணித்து வைத்திருக்கிறது என்பதை உணர்த்த படத்தில் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன.

மீரா கிருஷ்ணன் (ஷ்ரத்தா) காவல் நிலையத்தில் புகார் செய்யப் போகும்போது அந்த காவல் ஆய்வாளர் புகார் கொடுத்தால் என்ன மாதிரியான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்பதை விளக்குகிறார். கூடவே, அந்தப் போராளிங்க.. வேற மெழுகுவர்த்தியை தூக்கிக்கிட்டு வந்துடுவாங்க என்று சொல்லி நக்கலாகப் புன்னகைக்கிறார். ஏதாவது குடிக்கிறீங்களா.. காஃபி, டீ என்று கேட்கும்போதும் அந்த நமட்டுச் சிரிப்பு நீள்கிறது. நாயகி மது அருந்துவதை குதர்க்கமாகக் குத்திக் காட்டும் பேச்சு அது.

இந்தக் காலத்துப் பொண்ணுங்க, இந்த மாதிரி பொண்ணுங்க என்ற அடைமொழிகளுக்குப் பின்னால் ஆயிரம் கற்பிதங்கள் இருக்கின்றன. இந்தச் சமூகம் ஒரு பெண் பற்றி எப்போதுமே முன்முடிவுடனேயே இருக்கிறது என்பதற்கான சாட்சிகள் அவை. அந்தப் பேச்சை ரசித்து நீங்கள் கைதட்டுகிறீர்கள் என்றால் உங்களுக்கு அஜித் சொன்ன நோ மீன்ஸ் நோ அர்த்தம் எப்படிப் புரியும்?!

பெண் பற்றிய மதிப்பீட்டுக்கான சமூகத்தின் அளவுகோல் அவளது படிப்பு, அறிவு, ஆளுமைத் திறன் அல்ல. மாறாக அவளது உடை, நட்பு, அவள் எத்தனை மணிக்கு வீடு திரும்புகிறாள் என்பதைக்கொண்டே சீர்தூக்கிப் பார்க்கப்படுவதாக இருக்கிறது. இது எவ்வளவு அபத்தமானது?

நீதி கேட்டு ஒரு பெண் கோர்ட் படியேறினால்கூட அவள் 'மோசமானவள்' என்றுதான் சித்தரிக்கப்படுகிறாள்.
அக மகிழ்ச்சிக்கான எல்லைகூட இங்கு பாலினம் சார்ந்ததாகவே இருக்கிறது. ஆணுக்கான மகிழ்ச்சிக்கு இங்கே எந்த வரையறையுமில்லை. ஆனால் பெண்ணுக்கான மகிழ்ச்சிக்கு அகராதியே உருவாக்கப்பட்டிருக்கிறது. அதை உடைத்தெறிகிறது பெண்கள் பாதுகாப்புக்கான கையேட்டுக்காக அஜித் பரிந்துரைக்கும் 4 ஆலோசனைகள்.

அந்த ஆலோசனைகளைக் கேட்ட பின்னரும்கூட பாண்டேவின் குறுக்கு விசாரணைக் கேள்விகளுக்கு கைதட்டியிருந்தீர்கள் என்றால் உங்களுக்கு அஜித் சொன்ன நோ மீன்ஸ் நோ புரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

ஒரு மிக ஆழமான கருத்தை வைரலாக்கியிருக்கிறது 'நேர்கொண்ட பார்வை'. இது ட்விட்டர், ஃபேஸ்புக்கில் ட்ரெண்டாக்கப்படுவதற்கு மட்டுமல்ல. உங்கள் மனதில் ஆணிபோல் அடித்துவைத்துக் கொள்ள.

தோழியோ, காதலியோ, மனைவியோ இல்லை நீங்கள் அணுகும் பாலியல் தொழிலாளியாகவே கூட இருந்தாலும் அவர் சொல்லும் நோ என்பதற்கு இல்லை மட்டுமே அர்த்தம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை

படத்தில் நீதிமன்றக் காட்சிகளில் திரையை அலங்கரிக்கும் இந்த திருக்குறளுக்கு கருணாநிதியின் உரையில், குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதி என்று அர்த்தம் கூறுகிறது.

பாலினம் சார்ந்து நீதி வழங்கினாலும்கூட அது நீதியல்ல. அதனால்தான் மீரா கிருஷ்ணனின் 'நோ' என்ற வார்த்தைக்கும் ஆதிக்கின் 'இந்த மாதிரி பொண்ணுங்க' என்ற ஆணவத்துக்கும் இடையேயான போராட்டத்தில் நீதி நிறுவப்பட்டுள்ளது. இதைப் புரிந்துகொள்ளாவிட்டால் அஜித் சொன்ன நோ மீன்ஸ் நோ என்ற வசனத்தை 'செஞ்சிடுவேன்..' என்ற சினிமா பஞ்ச் டயலாக்போல் சில காலம் சொல்லி மறப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

அதனால் இனிமேல் குறைந்தது இந்த 10 ஆலோசனைகளையாவது கடைபிடியுங்கள்:

1. பெண்களின் ஆடைகளை வைத்து அவர்களை மதிப்பிடாதீர்கள். எந்தப் பெண்ணும் உங்கள் பெர்முடாஸைப் பார்த்து உங்களை மதிப்பிடுவதில்லை.

2. பெண்கள் சிரித்துப் பேசினால் அந்த உங்களின் சிரிப்பைப் போன்றதொரு உணர்வுமட்டும்தான் என்பதை உணருங்கள். அதற்குப் பின் எந்த அர்த்தமும் இல்லை.

3. பெண்கள் தொட்டுப் பேசினால் அவர்களை நீங்கள் தொடுவதற்கான சமிக்ஞை என்று நினைக்காதீர்கள்.

4. அவள் வீட்டுக்கு வரும் நேரத்தைவைத்து அவளின் ஒழுக்கத்தை மதிப்பிடாதீர்கள். மாறாக அவள் வரும் நேரத்தை தினமும் கவனிக்கும் உங்கள் குதர்க்க மனப்பாங்கை கேள்விக்குள்ளாக்குங்கள்.

5. அவள் குடும்பத்தைவிட்டு தனியாக வீடு எடுத்துத் தங்கியிருந்தால் அது அவளுடைய சவுகரியத்தைப் பொறுத்தது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

6. அவள் வீட்டுக்கு ஆண் நண்பர்கள் வந்தார்கள் என்றால் அது பாலுறவுக்காக என்று மட்டுமே முன்முடிவுக்கு வராதீர்கள்.

7. பாலியல் சுதந்திரமும் பெண்ணுக்கான சுதந்திரமே. அது நீங்கள் விவாதிக்க வேண்டிய கரு அல்ல.

8. ஒரு பெண் பொருளாதார தன்னிறைவுடன் இருந்தார் என்றால் அவளது வேலையைத் தாண்டியும் 'எக்ஸ்ட்ரா வருமானம்' பெற தன் உடலை ஆதாரமாகப் பயன்படுத்துகிறார் என்று முத்திரை குத்தாதீர்கள்.

9. முக்கியமாக ஒரு பெண் பதவி உயர்வு பெற்றாலோ, அல்லது உயர் அதிகாரியின் அபிமானத்தைப் பெற்றாலோ அவள் சிரித்து சிரித்துப் பேசும்போதே தெரியும் என்று கற்பிதங்களை காற்றில் கடத்தாதீர்கள்.

10. எல்லாவற்றிற்கும் மேலாக ஒழுக்கம் என்பதை பொதுவில் வையுங்கள். ஏனெனில் அவளும் நீங்களும் பரிணாம வளர்ச்சியில் சமமமாகவே வளர்ந்தீர்கள்.

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் பெண்களுக்கு இருப்பதால் ஆண்களுக்குத்தான் இங்கு நேர்கொண்ட பார்வை தேவைப்படுகிறது. அதுவும் குறிப்பாக பாண்டேவின் குறுக்கு விசாரணைகளுக்கும், போலீஸ்காரரின் நக்கல் பேச்சுக்கும் ரசனையை வெளிப்படுத்திய ஆண்களுக்குத்தான் 'நேர்கொண்ட பார்வை' தேவைப்படுகிறது.

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x