

உலகப் புகழ்பெற்ற கவிஞரும் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான ஹெர்மன் ஹெசே (Hermann Hesse) பிறந்த தினம் இன்று (ஜூலை 2). அவரைப்பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l ஜெர்மனியில் கால்வ் (Calw) என்ற ஊரில் பிறந்தவர் (1877). இவரது குடும்பத்தில் பலரும் கேரளாவில் கிறிஸ் தவ ஊழியத்திலும் கல்வி கற்பித்தலிலும் ஈடுபட்டு வந்தனர். இவரது பெற்றோரும் இங்கேயே படித்து வளர்ந்து ஜெர்மனி சென்றவர்கள். இவர் பெரும்பாலும் உறைவிடப் பள்ளிகளில் பயின்றார்.
l இசையும் கவிதையும் குடும்ப பாரம்பரியமாகவே இருந்து வந்தது. முரட்டுப் பிள்ளையாக வளர்ந்தாலும் அறிவுக்கூர்மை மிக்கவராக இருந்தார். 12-வது வயதில் கவிஞராக வேண்டும் என்ற ஆசை வேர் விட்டது. ஆனால், இவர் ஒரு பாதிரியாராக சேவையாற்ற வேண்டும் என்பதால் குடும்பத்தார் தேவாலயத்தில் பயிற்சி பெற வைத்தனர்.
l இவரோ தேவாலய வாழ்க்கையைத் துறந்து வெளியேறினார். தொழில் பயிற்சி பெற்றார். ஒரு கடிகாரக் கம்பெனியில் மெக்கானிக்காக சிறிது காலம் வேலை பார்த்தார். அதில் சலிப்பு எற்படவே 19-ம் வயதில் அங்கிருந்து வெளியேறி ஒரு புத்தகக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அது இவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. வேலை பார்த்துக்கொண்டே இலக்கியம், தத்துவம், கவிதைகள், சிறுகதைகள் எழுதினார்.
l 1904-ல் வெளிவந்த இவரது பீட்டர் கேமன்சிந்த் (Peter Camenzind) என்ற நாவல் ஜெர்மனி முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘என்னை மிகவும் கவர்ந்த நாவல் இது’ என சிக்மண்ட் பிராய்டு புகழாரம் சூட்டினார். 1912-ல் ஸ்விட்சர்லாந்தில் குடியேறினார்.
l பல நாட்டுத் தத்துவவாதிகள் தன்னைக் கவர்ந்தாலும், இந்திய, சீன நாட்டுத் தத்துவ மேதைகள் அளவுக்கு வேறு எவருமே தன்னைக் கவரவில்லை என்று கூறியுள்ளார். ஓவியத்திலும் இசையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அரசியல் குறித்தும் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். மிகவும் புகழ்பெற்ற ‘ஸ்டெப்பன்வுல்ஃப்’ நாவல் 1927-ல் வெளிவந்தது.
l இலங்கை, இந்தோனேஷியா, ஜப்பான், இந்தியா ஆகிய கிழக்கத்திய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்தியா வருவதற்கு முன்பே புத்தர் வாழ்க்கையைப் பற்றியும் அவரது தத்துவங்கள் பற்றியும் படித்திருந்தார். எனவே புத்தர் வாழ்ந்து வந்த, உபதேசம் செய்த இடங்களுக்கு எல்லாம் சென்றார். இந்த அனுபவங்கள், ‘சித்தார்த்தன் தேடல்’ நாவலை எழுதத் தூண்டுதலாக இருந்தது.
l இந்த நூல் எழுத இவருக்குப் பத்தாண்டுகள் பிடித்தன.1922-ல் இவரது ‘சித்தார்த்தன் நாவல்’ வெளிவந்தது. இது கவுதம புத்தர் பற்றிய நாவல் அல்ல. ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் ஞானம் பெற முடியும் என்பதைக் குறித்தது. இதையே ஒரு தத்துவமாகவும் வாழ்க்கையாகவும் படைத்துள்ளார்.
l 1943-ல் ‘தி கிளாஸ் பீட் கேம்’ (The Glass Bead Game) என்ற இவரது புகழ்பெற்ற நூல் வெளிவந்தது. 1946-ல் இலக்கியத் துக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மகத்தான நாவல் என்று போற்றப்பட்ட. சித்தார்த்தன், 1950-ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.
l இந்தப் படைப்பு, 1958-ல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. வாழ்வின் கடைசி 20 ஆண்டுகளில் தனது குழந்தைப் பருவ நிகழ்வுகளை அடிப்படை யாகக் கொண்டு சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுதினார். 1972-ல் ‘சித்தார்த்தன்’ நாவல் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது.
l ஜெர்மன் முழுவதும் பல பள்ளிகளுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. பல நாடுகளிலிருந்தும் இவருக்கு பரிசுகளும், விருதுகளும் பட்டங்களும் வழங்கப்பட்டன. சத்தியம், சுய-அறிவு மற்றும் ஆன்மிகத் தேடலில் தணியாத தாகம் கொண்டிருந்த ஹெர்மன் ஹெசே 1962-ல் 85-வது வயதில் காலமானார்.