

நெல்லை ஜெனா
இந்த வாரத்தில் நாடு முழுவதும் உலுக்கிய செய்தி காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த்தாவின் மரணம்.
கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனான அவர் இந்திய காபி தொழிலை ஐரோப்பா வரை பரவச் செய்தவர். சித்தார்த்தாவின் குடும்பம் 130 வருடங்களாக காஃபி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது. இவர் படித்து முடித்தவுடன் மும்பையில் இருக்கும் ஜே.எம். நிறுவனத்தில் இரண்டு வருடங்கள் வேலை பார்த்தார்.
பங்குச்சந்தை தரகு நிறுவனமான வே டு வெல்த் நிறுவனமும் இவருடையதுதான். இந்தியா முழுக்க 1,500 க்கு மேற்பட்ட காஃபி டே கடைகள் உள்ளன. மேலும் காஃபி ஏற்றுமதியிலும் இவரது நிறுவனம் ஈடுபட்டுள்ளது. பெங்களூரில் இருக்கும் ஐ.டி. நிறுவனமான மைண்ட் ட்ரீயிலும் இவருக்குக் கணிசமான பங்குகள் உண்டு
திடீரென அவர் கடந்த திங்கள்கிழமை மாலையில் மாயமானார். அவரது உடல் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரது மரணம் சாதாரண ஒரு தொழிலதிபரின் தற்கொலையாக கடந்து போகப்படவில்லை. அதையும் தாண்டி அரசியல்வாதிகள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் தொடர்ந்து தங்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக தொழிலதிபர்கள் வட்டாரத்தில் பெரும் சோகத்தையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது. அவரது செயல் சரியா, நியாயமாக தொழில் செய்தாரா, தொழிலதிபர்களுக்கு அரசு நெருக்கடி கொடுக்கிறதா, கடன் வாங்கும் நிலைக்கு தொழிலதிபர்கள் தள்ளப்படுவது ஏன், பல ஆயிரம் கோடிக்கு சொத்துகள் இருந்தாலும் அதனை விற்றுக் கடனை அடைக்காமல் மரணத்தைத் தேர்வு செய்யும் நிலை தொழிலபர்களுக்கு ஏன் ஏற்படுகிறது என தொழிலதிபர்கள் வட்டாரங்களில் சித்தார்த்தாவின் மரணம் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
இதற்குக் காரணம் மிகப்பெரிய தொழிலதிபராக இருந்தாலும் சித்தார்த்தா மிகவும் எளிமையானவர். ஆடம்பர வாழ்க்கையை விட அனைவரும் மிக எளிமையாக அணுகும் வகையில் வாழ்ந்தவர். ஆடம்பரமாக உடை அணியும் பழக்கம்கூட அவருக்கு இருந்ததில்லை என்கின்றனர் அவரது நண்பர்கள்.
வசதி படைத்தவராக தன்னை அவர் காட்டிக் கொள்வதில் விருப்பப்பட்டதில்லை என சக தொழிலதிபர்கள் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். காஃபி தொழில் வட்டாரத்தில் அவருக்கு ‘காஃபி கிங்’ என்ற அடைமொழியும் உண்டு. ஆனால் அப்படி நண்பர்கள் யாரும் கூப்பிட்டால் கூச்சப்படும் அளவுக்கு வாழ்ந்தவர் என்கின்றனர்.
ஊழியர்களின் வீட்டுத் திருமணங்களுக்குக் கூட சகஜமாகச் செல்லும் பழக்கம் உள்ளவர். 20 ஆயிரத்துக்கும் மேறப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தவர். வெறும் உணவ காஃபி என்பதை மாற்றி இந்தியாவின் பிரண்டாக ‘காஃபியை’ உருவாக்குவதில் அவரது காஃபி டே முக்கியப் பங்கு வகித்துள்ளது.
சரி பெரிய பண ஆசை இல்லாமல் இருந்தார் என்றால் பணத்துக்காக வாழ்க்கை முழுவதும் ஓடியவர், தொழிலுக்காக தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தாரா அல்லது சூழலில் சிக்கிக் கொண்டாரா என்ற கேள்வியும் எழுகிறது.
தற்கொலை செய்ததாக கூறப்படும் முன்பாக எழுதிய கடிதத்தில் ‘‘எனது நிறுவனத்தில் அனைத்து செயல்பாடுகளும் முறையாக மேற்கொள்ளப்பட்ட பின்னும் மைண்ட் ட்ரீ பரிவர்த்தனையில் வருமான வரித்துறை கடுமையான தொந்தரவு அளித்தது. இந்த இரண்டு சமயங்களில் கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டேன். இந்த முறையற்ற செயல்களால் கடுமையான பொருளாதாரச் சிக்கலுக்கு தள்ளப்பட்டேன். தொழிலில் தோற்று விட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தொழிலில் அவர் சில காலமாகவே தொடர்ந்து சிக்கலில் இருப்பது தொழிலதிபர் வட்டாரங்களில் தெரிந்த தகவல் தான். தவறான பணப் பரிமாற்றம் நடந்ததாக குற்றச்சாட்டு, வருமான வரி சோதனை, வரி ஏய்ப்பு என பல புகார்கள் அவரைச் சுற்றி இருக்கின்றன. இதனால் ஒரு தொழிலதிபர் என்ற முறையில் அவர் பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கலாம்.
தொழிலதிபர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக கூறப்படுவது எவ்வளவு வலிமையான வாதமோ அதை விட, இந்தப் பாதையை தேர்ந்தெடுத்தது அவர் தானே என்ற வாதமும் வலிமையானது. காஃபி தொழிலில் தொடங்கி அடுத்தடுத்த தொழில்களைத் தொடங்கி நடத்தியுள்ளார் சித்தார்த்தா.
சில அரசியல்வாதிகளின் நட்புடன் சில தொழில்கள், அதனால் பண வரவு, செலவு இவையெல்லாம் சித்தார்த்தாவை சுற்றிச் சுழன்றுள்ளன. குறிப்பாக அவரது ஐடி நிறுவனமான மைண்ட் ட்ரீ நிறுவனப் பங்குகள் விவகாரத்தில் சிக்கல் எழ, கடனை அடைக்க வேண்டிய சூழலில் அந்தப் பங்குகளை விற்பனை செய்துள்ளார்.
இந்த ஆண்டில் சுமார் 3,269 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்றதில் அவருக்குக் கிடைத்த பணம் 2,858 கோடி ரூபாய் என செபி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் அவரது மொத்தக் கடன் 6,547 கோடி ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. மைண்ட் ட்ரீ நிறுவனப் பங்குகளை விற்ற தொகையைச் செலுத்தி தனது கடனை 4,003 கோடி ரூபாயாக குறைத்துள்ளார்.
கடந்த ஜூன் மாத நிலவரப்படி அவரது சொத்து மட்டுமின்றி குடும்பத்தில் உள்ளவர்கள் பெயரில் உள்ள மொத்த சொத்துகளில் 76 சதவீதம் கடனுக்கு அடமானமாக வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018-ம் ஆண்டு டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் காஃபி டே நிறுவனத்தின் வருவாய் 996 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 73.15 கோடியாகவும் இருந்துள்ளது.
தனிப்பட்ட முதலீட்டாளர்கள் அவரது நிறுவனங்களில் அதிகம் முதலீடு செய்துள்ளனர். வருமான வரி சோதனைக்குப் பிறகு பீதி அடைந்த அவர்கள் தங்கள் பங்குகளை விற்றுப் பணம் தருமாறு சித்தார்த்தாவை நச்சரித்துள்ளனர். கடன் ஒருபுறம், கடன் வந்த வழியால் பிரச்சினை மற்றொரு புறம் என இடியாப்பச் சிக்கல் சித்தார்த்தாவை கடந்த ஓராண்டாகவே சுற்றிச் சுழன்று வந்துள்ளது.
குறிப்பாக மார்ச் மாதத்துக்குப் பிறகு நிநிலை இன்னமும் மோசடைந்ததால் சித்தார்த்தா மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளானதாக அவரது நெருங்கியவர்கள் கூறுகின்றனர்.
சித்தார்த்தாவின் மரணத்தை தொழில் வட்டாரங்கள் எப்படிப் பார்க்கின்றன?
‘‘இது இளந்தொழில் முனைவோர்கள் அனைவருக்கும் ஒரு பாடம். கடன் வாங்கி வளர வேண்டும், பிறகு கவனத்துடன் கடன் வாங்க வேண்டும், அதுவும் ஒரு எல்லைக்குள்ளாக மட்டுமே. உங்களின் வேகம் என்பது ஒரு எல்லை வரை மட்டுமே இருக்கலாம். அந்த எல்லைக்கோட்டை தாண்டினால் எது வாரி வழங்கியதோ அதுவே வாரிச் சுருட்டிவிடும்’’ என சில தொழிலதிபர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதுமட்டுமின்றி வேறு சிலர் ‘‘இந்தியத் தொழிலதிபர்களிடையே தற்போது புதிய தொழில் போக்கு உருவாகி வருகிறது. தொடக்கத்தில் குடும்பத் தொழில் அல்லது தெரிந்த தொழில் என இறங்கும் அவர்கள், பிறகு அதன் தொடர்ச்சியாக பணம் புரளும் பல தொழில்களில் கால் வைக்கின்றனர். தெரியாத தொழிலில் கால் வைப்பது ஒருபுறம் என்றால் மறுபுறம் தெரிந்த தொழிலையும் சரியாக கவனிக்க முடியாத சூழலில் சிக்கிக் கொள்கின்றனர்.
வெவ்வேறு தொழில்களைச் செய்யும்போது வெவ்வேறு விதமான பணப் பிரச்சினைகளையும், நெருக்கடிகளையும் சந்திக்கும் சூழல் ஏற்படும். ஒன்றில் வரும் பணத்தை மற்றொன்று எடுத்துச் செல்லும் ஆபத்தும் இருக்கும். கணக்கில் இல்லாத பண வரவும், கணக்கில் இல்லாத செலவும் தொழில் அறத்தை சூறையாடி விடும். அதை கவனிக்கத் தவறினால் அந்த அறத்துக்கு பலியாகும் சூழலும் ஏற்படும்’’ என்றும் வேறு சிலர் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா கூறிய கருத்துகள் இங்கு நினைவு கூரத்தக்கவை. ‘‘தனிப்பட்ட முறையில் எனக்கு சித்தார்த்தா குறித்தும், அவரது நிதிச்சூழல் குறித்தும் எதுவும் தெரியாது. ஆனால், தொழில்முனைவோர் தொழில் தோல்விகள் தங்கள் சுயமரியாதையை அழிக்க அனுமதித்து விடக்கூடாது என்பதை நான் அறிவேன்.அது தொழில்முனைவோருக்கு மரணத்தைக் கொண்டு வந்து விடும்’’ என ஆனந்த் மகேந்திரா வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.
உலகளாவிய சுதந்திர பொருளாதார சூழல் கனிந்து வரும் இந்த காலத்தில் இந்திய தொழிலதிபர்கள் சொந்த நாட்டில் மட்டுமின்றி திரைகடலோடியும் திரவியம் தேடி வருகின்றனர். சுதந்திரத்திற்கு மட்டுமல்ல தொழில் வாய்ப்புகளுக்கும், வளர்ச்சிக்கும் கூட எல்லைக்கோடுகள் இருக்கத்தான் செய்கின்றன.
தொடர்புக்கு: janarthanaperumal.s@hindutamil.co.in