Published : 30 Jul 2019 13:09 pm

Updated : 30 Jul 2019 13:10 pm

 

Published : 30 Jul 2019 01:09 PM
Last Updated : 30 Jul 2019 01:10 PM

ஆடியில் மிரட்டும் அம்மையை விரட்ட வேப்பிலை போதும்! கூடவே கொஞ்சம் கேழ்வரகும், பாசிப்பருப்பும்!!

amma-threatens

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்கள் திருவிழாக்கோலம் பூணும் என்பது தெரியும். ஆனால், ஆடி மாதத்தில் அம்மை, காலரா போன்ற நோய்கள் பாதிக்க வாய்ப்பு உள்ளதால்தான் விழாக்கள் இந்த அளவுக்கு  விமரிசையாக கொண்டாடப்படுகின்றன என்ற உண்மை நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்? ஆடி மாதம் தொடர்பாக நிறைய பழமொழிகள் வழக்கில் இருந்தன. அதில் ஒன்று  `ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்'. ஆனால், `ஆடிக் காற்றில் அம்மையும் பறக்கும்' என்பதே சரி. அது மருவி அந்தப் பழமொழியின் பொருளே மாறிவிட்டது.
ஆடி மாதத்துக்கு முந்தைய மாதங்கள் கோடை காலமாகும். 

சித்திரை மாதத்தில் தொடங்கி வைகாசி, ஆனி மாதத்துக்குப் பிறகும் வெயிலின் தாக்கம் காணப்படும். அத்துடன் ஆடி மாதத்தில் வீசும் காற்றினால் அம்மை, காலரா போன்ற நோய்கள் மனிதர்களை மட்டுமல்ல மற்ற உயிரினங்களையும் பாதிக்கும். ஆனால், அப்போது தென்மேற்குப் பருவமழையுடன் காற்றும் சேர்ந்து வீசும். குறிப்பாக சாரல் மழை பெய்து பூமியைக் குளிர்விக்கும். இதனால் சூடு தணிந்து அம்மை நோய் விலகும். அந்த அடிப்படையில் ஆடி மாதம் வந்ததும் அம்மை நோய் விலகிவிடும் என்பதைச் சொல்வதற்கே `ஆடிக் காற்றில் அம்மையும் பறக்கும்' என்று சொல்லியிருக்கிறார்கள்.

நோய்களிலிருந்து காத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகவே ஆடி மாதத்தில் அம்மன் கோயில்கள்தோறும் கூழ் ஊற்றுவது வழக்கம். பழைய சாதத்துடன் கேழ்வரகு சேர்த்து செய்யப்படும் கூழ் உடலுக்கு குளிர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும். கேழ்வரகைப் போன்றே கம்பு என்ற சிறுதானியத்திலும் கூழ் செய்து சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி தரும். `ஆடிக்கூழ் அமிர்தமாகும்' என்று சொல்லும் அளவுக்கு அதை ஓர் அற்புத உணவாகவே நம் முன்னோர் கூறியிருக்கின்றனர்.

`ஆடிச் செவ்வாய் தேடிக்குளி' என்று சொல்வார்கள். ஆடி மாதத்தின் செவ்வாய்க்கிழமைகளில் சுமங்கலிப் பெண்களை மஞ்சள் பூசிக் குளிக்கச் சொல்வார்கள். மஞ்சள் மங்களகரமானது மட்டுமல்ல நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. ஏற்கெனவே நம் பாரம்பரியத்தில் நோய்களிலிருந்து காத்துக் கொள்வதற்காகத்தான் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் ஆடிப்பெருக்கு விசேஷத்தின்போது பச்சரிசியில் சர்க்கரை கலந்து தேங்காய், பழங்களை வைத்து இறை வழிபாடு செய்வது வழக்கம். தேங்காயில் நார் உரித்து அதன் கண்ணில் ஓட்டை போட்டு அவல், கடலை, பாசிப்பயறு, எள், நாட்டு சர்க்கரை போன்றவற்றை உள்ளே திணித்து தேங்காயைச் சுடுவார்கள். பிறகு அதன் உள்ளே இருக்கும் வெந்த பொருள்களைக் கொண்டு இறை வழிபாடு செய்து முடித்ததும் அவற்றைப் பகிர்ந்து உண்பார்கள்.

இறைவனுக்குப் படைப்பது ஒருபுறமிருக்க இந்த உணவுக்கலவையில் நிறைய மருத்துவம் ஒளிந்திருக்கிறது என்பதே உண்மை.  தேங்காய் வயிற்றுப்புண்களை ஆற்றும். தேங்காயின் உள்ளே சேர்க்கப்படும் பாசிப்பயறு உடலுக்கு குளிர்ச்சியூட்டும். மேலும், இந்த ஒட்டுமொத்த கலவையில் புரதச்சத்துகள் நிறைந்திருப்பதால் அது உடலுக்கு வலிமை தருவதுடன், போதுமான அளவு நெய்ப்புத்தன்மையும் கொடுக்கும். மேலும் இந்த காலகட்டத்தில் ஆடி கும்மாயம் என்ற ஒருவித இனிப்புப் பண்டத்தை செய்வார்கள். உளுந்து, பாசிப்பருப்பு, பச்சரிசி, கருப்பட்டி கலவையில் உருவாகும் இந்த கும்மாயம் புரதச் சத்து நிறைந்த ஓர் உணவு. இதில் சேர்க்கப்படும் கருப்பட்டியில் இரும்புச் சத்து நிறைந்திருக்கும். உளுந்தில் நிறைய மருத்துவக் குணம் உள்ளது. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகளால் ஏற்படும் நலக்குறைவைப் போக்க உளுந்து உதவும். இப்படி ஒவ்வொன்றிலும் மருத்துவக் குணம் ஒளிந்திருக்கிறது.

வேப்பிலை மிகச் சிறந்த கிருமி நாசினி என்பதால், ஆடி மாதத்தில் வீடுகளின் முகப்பிலும் கோயில்களிலும் கட்டித் தொங்கவிடுவார்கள். ஆடி மாதத்தில் காற்று அதிகமாக வீசுவதால் தூசி மற்றும் கிருமிகள் வீடுகளின் உள்ளே வர வாய்ப்பு உள்ளது. அதனால் நோய்த்தொற்று மற்றும் உடல்நலப் பாதிப்புகள் வரலாம். இதை தவிர்ப்பதற்காகத்தான் வேப்பிலையைக் கட்டித் தொங்கவிடுவார்கள். அதனால்தான் வீடுகள் மற்றும் பொது இடங்களில் வேப்ப மரங்களை நட்டு வளர்க்கும் முறை நம் தமிழ்ச் சமூகத்தில் அதிகமாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்காக வேப்பிலையில் சாறு எடுத்து அருந்துவதும் வழக்கம்.

இவைதவிர இந்த காலகட்டத்தில் போதுமான அளவு நீர் அருந்தாததால் சிறுநீரகக் கல், மூத்திரக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. அதைச் சரிசெய்ய இயற்கை சில மூலிகைகளை ஆடி மாதத்தில் செழித்தோங்கி வளரச் செய்யும். ஆடி மாதத்தில் பெய்யும் சிறுமழையில் நெருஞ்சில் வகைச் செடிகள் துளிர்த்து வளரும். அதிலும் குறிப்பாக பெருநெருஞ்சில் எனப்படும் யானைநெருஞ்சில் வறட்சியான பகுதிகளில் இந்த காலச் சூழலில்தான் வளரத் தொடங்கும். சிறுநீரகக் கல்லைப் போக்க யானைநெருஞ்சில் அருமையான மருந்து. 

கோடையை அடுத்துவரும் இந்த காலகட்டத்தில்  சுகாதாரமற்ற நீரை  அருந்துவது, தனிநபர் சுகாதாரமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மஞ்சள்காமாலை வர வாய்ப்புள்ளது. இந்நோயைப் போக்க நம் மூதாதையரால் பயன்படுத்தப்படும் அற்புத மூலிகையான கீழாநெல்லியும் இந்தச் சூழலில்தான் செழித்தோங்கி வளரும். ஆக, ஆடி மாதம் பிறந்தால் அம்மை நோய் மட்டுமல்ல சூட்டினால் வரக்கூடிய எல்லா நோய்களை அடித்து விரட்ட உகந்த மாதம் என்று சொன்னால் மிகையாகாது.

- தமிழ்க்குமரன். 


ஆடி மாதம்அம்மை நோய்வேப்பிலைகூழ்உடல் சூடுஅம்மன் கோயில்கள்பாசிப்பருப்புகேழ்வரகுஆடி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author