

பள்ளி வளாகத்தில் அரங்கேற்றப்பட்ட மேடை நாடகத்தில் அபாரமாக நடித்தார் சிறுமி அலமேலு. அலமேலுவின் நடிப்பைப் பாராட்டி அவருடைய ஒளிப்படத்தை வெளியிட்டது சுதேசமித்திரன் பத்திரிகை. அந்தச் செய்தி அலமேலு வீட்டில் புயல் கிளப்பியது. “குடும்பப் பெண்ணின் படம் பத்திரிகையில் வருவதா?” எனப் புலம்பினார் அலமேலுவின் அப்பா கிருஷ்ணசாமி தீட்சிதர். இதுபோதாதென்று, கொலம்பியா கிராமபோன் கம்பெனி அலமேலு பாடிய இசைத்தட்டை வெளியிட நச்சரித்தது. “என் பெண்ணின் குரலை யார் யாரோ கேட்பதா?” என அதிர்ந்துபோனார் தந்தை. எப்படியோ பெற்றோர், உறவினர்களைச் சம்மதிக்க வைத்த பின்னர், ‘பெண் மும்மூர்த்திகள்’எனப் புகழ்பெற்ற மூவரில் ஒருவராக உயர்ந்தார். அந்தச் சிறுமி அலமேலுதான் கர்னாடக சங்கீத மேதை டி.கே.பட்டம்மாள். ‘இவர் வெறும் பட்டம்மாள் இல்லை. பாடு பட்ட அம்மாள்’எனக் குறிப்பிட்டார் இசைக் கலைஞர் அரியக்குடி ராமானுஜம்.
காஞ்சிபுரத்துக்கு அருகில் தாமல் என்ற ஊரில் 1919-ல் இசைக் குடும்பத்தில் பிறந்தார் பட்டம்மாள். பெற்றோர் இருவருமே இசை அறிந்தவர்கள் என்பதால், பட்டம்மாளுக்கு இசை இயல்பாகவே வந்தது. ஆனால், அக்காலத்தில் பெண் பிள்ளைகள் பொது மேடைகளிலோ அவ்வளவு ஏன், உறவினர் முன்னிலையில்கூடப் பாடுவதற்கு அனுமதி இல்லை. ஆனால், அந்த மரபை உடைத்துப் பாடத் தொடங்கினார் பட்டம்மாள்.
1932-ல் எழும்பூர் மகளிர் மன்றத்தில் தொடங்கியது அவர் இசைப் பயணம். அந்தக் காலகட்டத்தில் இசையுலகில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்படவேயில்லை. 1936-ல் மியூசிக் அகாடமியில் பட்டம்மாள் பாடியபோது, பெண்கள் கற்றுக்கொண்ட கீர்த்தனைகளை மட்டும் பாடினால் போதும். ராக ஆலாபனை செய்வது, நிரவல் ஸ்வரம் பாடுவது என சுய சிந்தனை, மனோலயம் சம்பந்தப்பட்ட இசை பெண்களுக்குத் தேவையில்லை என்று சொல்லப்பட்டது. தனது இசை ஞானத்தால் அவற்றைத் தவிடுபொடியாக்கினார் பட்டம்மாள்.
முத்துசாமி தீட்சிதரின் கீர்த்தனைகளைப் பிரபலப் படுத்தியது அவர்தான். தெலுங்கு கீர்த்தனைகள் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்த சங்கீத மேடைகளில், பாரதியார் பாடல் தொடங்கி தேவாரம், திருவாசகம், திருவெம்பாவை போன்ற தமிழ் இசைப் பாடல்களைக் கச்சேரியில் பாடினார் பட்டம்மாள். ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’, ‘வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே’, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ போன்ற திரைப் பாடல்களையும் பாடினார். ‘ஹே ராம்’ படத்தின் ‘வைஷ்ணவ ஜனதோ’ அவரது கடைசிப் பாடல்.
சங்கீத நாடக அகாடமி விருது, பத்ம பூஷண், பத்ம வி பூஷண், சங்கீத கலாநிதி உள்ளிட்ட விருதுகள் பெற்ற டி.கே.பட்டம்மாள், நித்தியமான இசை மழையைப் பொழிந்து விட்டு 2009-ல் ஜூலை 16 அன்று உடலளவில் அநித்தியமானார்.