

மாதந்தோறும் சில பெண்களை அழைத்து ஏதாவது ஒரு பூஜையைச் செய்வாள் கல்பனா. அவள் கணவன் பிரசாத்துக்கு அதெல்லாம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
இன்றும் வழக்கம்போல பூஜை நடந்து கொண்டிருந்தது. பூஜை முடியட்டும் என்று காத்திருந்தான். பூஜையை முடித்த கல்பனா, பூஜைக்கு வந்திருந்த பெண்களுக்கு தட்சணையும் பிரசாதமும் கொடுத்து அனுப்பிவிட்டு வந்தாள்.
“கல்பனா! எல்லா மாசமும் ஏதாவது ஒரு பூஜை பண்றே. நம்ம குடும்பம் நல்லாயிருக்கணும்னுதான் செய்யுற. ஆனா இந்த மாதிரி பெண்களைக் கூப் பிட்டுத்தான் பூஜை பண்ணணுமா?” -பிரசாத் கேட்டான்.
“ஏன் இப்படி கேட்கறீங்க? நாலு பெண்களை அழைச்சு பூஜை பண்ணணும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்கல்ல.”
“சரி, நாலு பெண்களை அழைச்சு பூஜை பண்ணு. அதைப்பற்றி நான் எதுவும் சொல்லலை. ஆனா பாரு... நானும் இவ்வளவு நேரமா கவனிச்சுட்டு இருக்கேன். பூஜைக்கு வந்திருந்த எந்தப் பெண்ணுக்கும் மந்திரம் சுலோகம் எதுவும் தெரியல.”
“படிக்காதவங்க. அவங்களுக்கு சுலோகம் மந்திரம் எல்லாம் தெரியுமா? நான்தான் சுலோகம் எல்லாம் சொல்லிக் குடுக்கிறேன்ல. அவங்க அதைக் கேட்டு திருப்பிச் சொல்லத்தானே செய்யுறாங்க!” -யதார்த்தமாய் பதிலளித்தாள்.
“நீ சொல்றதைத் திருப்பிச் சொல்லும்போது கூட தப்பும் தவறுமாத்தானே சொல்றாங்க. நம்ம வீட்டுல வேலை செய்யுற பொண்ணு, அவளோட தோழிகள்னு பூஜைக்குக் கூப்பிட்டா பலன் இருக்குமா? நம்ம தகுதிக்கு ஏத்த மாதிரி பெண்கள் கிடைக்கலியா?” - சிரித்தபடி கேட்டான் பிரசாத்.
“பூஜை, சுலோகம் எல்லாம் சம்பிரதாயம், நம்பிக்கை சார்ந்ததுங்க. ஆனா ரவிக்கைத் துணி, தட்சணை எல்லாம் கொடுக்கிறோமே. அது வெறும் சம்பிரதாயத்துக்காக மட்டும் இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். நம்ம தகுதிக்கு பெண்களைக் கூப்பிட்டா, ஏதோ கூப்பிட்ட கடனுக்கு வருவாங்க. நாம கொடுக்கிற தட்சணையோ, ரவிக்கைத் துணியோ அவங்களைப் பொறுத்தவரை தேவையில்லாதது.
ஆனா இப்ப வந்திருந்தாங்களே, அவங்களுக்கு நான் கொடுக்கிற தட்சணை பணம் ரவிக்கைத் துணி எல்லாம் நிச்சயம் உபயோகமா இருக்கும். பூஜை செய்யுறதுல நமக்கு மட்டுமில்லே, மற்றவங்களுக்கும் பலன் இருக்கணும்... ”
-கல்பனா சொன்னதைக் கேட்டு, பிரசாத்துக்கு கல்பனாவின் பூஜைமீது மதிப்பு வந்தது, அதைவிட அவள் மீதும்.