செய்திப்பிரிவு

Published : 17 Jul 2019 10:43 am

Updated : : 17 Jul 2019 10:44 am

 

இந்தியர்களுக்கு நல்ல செய்தி 

good-news-for-indians
வெளிநாடுகளில் இருந்து குடியேறி கடந்த ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் அந்த நாட்டு தேசிய கொடியை ஏந்தி மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். படம்: ஏஎப்பி

அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள், குறிப்பாக எச்1பி விசா வைத்திருக்கும் இந்தியர்களுக்கு சந்தோஷமான செய்தி. 7 சதவீதத்துக்கு மேல் எந்த நாட்டவருக்கும் குடியுரிமை கிடையாது என்ற உத்தரவை நீக்க அமெரிக்க அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் அமெரிக்க குடியுரிமைக்காக (கிரீன் கார்டு) காத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஐ.டி. ஊழியர்களின் சோகம் முடிவுக்கு வந் துள்ளது.

அமெரிக்க அரசின் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளோடு ஆளும் குடியரசுக் கட்சியின் 100 எம்.பி.க்களும் வாக்களித்துள்ளனர். இதனால் இந்தியா போன்ற நாடுகள் பெரிதும் பயன் பெறும். மொத்தமுள்ள 435 உறுப்பினர்களில் 65 பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்துள்ளனர். கிரீன் கார்டு மூலம் ஒருவர் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று சட்ட ரீதியாக தங்கி, வேலை பார்க்க முடியும்.

பிரதிநிதிகள் சபை நிறைவேற்றிய இந்த தீர்மானம் விரைவில் செனட் சபை ஒப்புதலுக்குப் பிறகு சட்டமாகும். இரு சபைகளும் இந்த தீர்மானத்தை இறுதி செய்து பின்னர் அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பும். கிரீன் கார்டு கட்டுப்பாடு மீதான உத்தரவை நீக்கியதன் மூலம் உள்ளூர் அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பு பாதிக்கும் என வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இவர் களின் எதிர்ப்பை அதிபர் ட்ரம்ப் சந்திக்க வேண்டியிருக்கும். வலதுசாரிகளின் இந்த போலி குற்றச்சாட்டை அமெரிக்காவின் பெருநிறுவனங்கள் ஏற்கனவே மறுத் துள்ளன. இந்தியா போன்ற பெரிய நாடு களில் இருக்கும் திறமையான ஊழியர்கள், அமெரிக்காவில் மாணவர்களாக படிக்க வந்து, அதன்பின் ஊழியராகி அமெரிக் காவின் முன்னேற்றத்துக்காக உழைப்பவர் கள்தான் என்பதை மசோதாவை எதிர்க்கும் வலதுசாரிகள் மறந்துவிடுகிறார்கள்.

இந்த மசோதா ஒப்புதலுக்கு வரும்போது, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் என்ன முடிவெடிப்பார் என சொல்ல முடியாது. கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தேர்தல் காலத்தில் இருந்தே, எச்1பி விசா மூலம் அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த செலவில் வெளிநாட்டவரை வேலைக்கு அமர்த்தி, அமெரிக்க மக்களை ஏமாற்றுகின்றன என ட்ரம்ப் புகார் கூறி வருகிறார்.

அமெரிக்காவை மீண்டும் மிகச் சிறந்த நாடாக மாற்றுவேன் என்ற கோஷத்தின் மூலம் ஐரோப்பிய நாடுகளுடனும் ஆசிய பசிபிக் நாடுகளுடனும் சீனா போன்ற நாடுகளுடனும் ட்ரம்ப் வர்த்தகப் போர் நடத்தி வருகிறார். குடியுரிமை மசோதாவை ஆதரிப்பவர்கள், திறமைக்கு முன்னுரிமை கொடுக்கும் வேலைவாய்ப்பு முறைக்கு இந்த மசோதா மூலம் எந்த பாதிப்பும் இருக்காது. குடியுரிமைக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் இந்தியா, சீன நாட்டு ஊழியர்களுக்கு இந்த மசோதா கைகொடுக்கும் என்கின்றனர்.


குடியுரிமைக்கான 7 சதவீத உச்சவரம்பை நீக்குவது தொடர்பான இந்த சர்ச்சை, அடுத்தாண்டு நடக்கவிருக்கும் அதிபர் தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையில் எழுந்துள்ளது. ஜனநாயக கட்சியினர்தான் ஆரம்பத்தில் இருந்தே இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செனட்டர் கமலா ஹாரிஸ் தலைமையிலான 34 உறுப்பினர்கள் கொண்ட ஜனநாயகக் கட்சியின் குழுவினர் இதேபோன்ற மசோதாவைக் கொண்டு வந்து அதை நிறைவேற்றியுள்ளனர். செனட் சபையில் குடியரசுக் கட்சியினரின் ஆதிக்கம்தான் அதிகம். ஆனாலும் இதுபோன்ற மசோதா, அமெரிக்க பொருளாதாரத்துக்கு நன்மை தரும் என்பதால் இதை நிறைவேற்ற தங்கள் ஆதரவை அளிக்கத் தயாராக உள்ளனர்.

`குடியுரிமை விஷயத்தில் அனைத்து நாடுகளையும் சமமாக நடத்தும் சட்டம் தற்போது நிறைவேறியிருக்கிறது. இதன்மூலம் திறமையான ஊழியர்கள் குடியுரிமை பெறமுடியும். இது தொழில் துறைக்கும் அமெரிக்காவுக்கும் நல்ல விஷயம்' என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பிராட் ஸ்மித் கூறியிருக்கிறார்.

குடியுரிமை தொடர்பான விவாதத்தின்போது, எச்1பி விசா, கிரீன் கார்டு உச்சவரம்பு குறித்து என்ன செய்யலாம், ஏற்கனவே அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 1.20 கோடி குடியேறிகளை என்ன செய்வது என பேச்சு எழுந்துள்ளது. பாதிப்பை ஏற்படுத்தும் இதுபோன்ற விவாதம், அதிபர் தேர்தல் அரசியலில் முக்கியத்துவம் பெறக்கூடாது. இல்லாவிட்டால், குடியுரிமை பிரச்சினையே ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையே மிகப் பெரிய விவாதப் பொருளாகிவிடும்.

- டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் இதழியல் துறை பேராசிரியர் மற்றும் வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

இந்தியர்கள்எச்1பி விசாஅமெரிக்காசந்தோஷமான செய்திஅமெரிக்க அரசுகுடியுரிமை
Popular Articles

You May Like

More From This Category

More From this Author