Published : 05 Jul 2015 01:01 PM
Last Updated : 05 Jul 2015 01:01 PM

எர்னஸ்ட் வால்டேர் மயர் 10

இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியப் பரிணாமவியல் ஆராய்ச்சியாளர் எர்னஸ்ட் வால்டேர் மயர் (Ernst Wa* ter Mayr) பிறந்த தினம் இன்று (ஜூலை 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஜெர்மனியில் (1904) பிறந்தவர். சட்ட நிபுணரான தந்தை, இயற்கை வரலாற்றின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். தன் பிள்ளைகளை பல இடங்களுக்கும் அழைத்துச் செல்வார். இதனால் சிறு வயது முதலே பறவையியலில் ஆர்வம் கொண்டார் மயர்.

* தந்தை காலமானபோது இவருக்கு வயது 12. குடும்பம் டிரெஸ்டென் நகரில் குடியேறியது. பள்ளிப் படிப்புடன், ‘சாக்ஸோனி’ பறவையியல் சங்கத்தில் சேர்ந்து பறவையியல் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

* வீட்டில் வற்புறுத்தியதால் கிரீவ்ஸ்வால்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார். பறவையியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அப்பகுதி சிறந்த இடமாகத் திகழ்ந்தது. விடுமுறைகளில் பறவையியல் அமைப்பில் பணிபுரிந்தார்.

* பல அரிய பறவைகளை அடையாளம் காணச் சொல்லி இவருக்கு அளித்த சோதனையில் பெரும்பாலானவற்றை சரியாக அடையாளம் காட்டினார். இவர் பிறவி வகைப்பாட்டாளர் என்று பெருமிதத்துடன் கூறுவார் இவரது வழிகாட்டி.

* ஓராண்டுக்குப் பிறகு மருத்துவப் படிப்பை விட்டுவிட்டு, உயிரியல் துறையில் சேர்ந்தார். வெப்ப மண்டலப் பிரதேசங்களில் பறவை சேகரிப்பு பயணங்களுக்கான வாய்ப்பைப் பெற பெர்லின் அருங்காட்சியகத்தில் சேர்ந்தார். பறவையியலில் 16 மாதங்களிலேயே முனைவர் பட்டம் பெற்றார். அப்போது இவருக்கு வயது 21. அருங்காட்சியகத்தில் வேலை கிடைத்தது. நியூ கினி தீவில் ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்டார். பல்வேறு தீவுகளில் காணப்பட்ட விலங்குகள், தாவரங்கள் இடையே உள்ள வேறுபாடுகளை ஆராய்ந்தார். ஆயிரக்கணக்கான பறவைகளின் தோல்களை சேகரித்தார்.

* தனது வாழ்நாளில் 26 புதுவகைப் பறவையினங்களுக்கும், 38 புதுவகை பூக்களுக்கும் பெயர் சூட்டியுள்ளார். 1931-ல் அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் காப்பாளர் பொறுப்பை ஏற்றார். 1942-ல் உயிரினங்களின் மரபியல், பரிணாம தொகுப்புகள் தொடர்பான இவரது முதல் புத்தகம் வெளிவந்தது.

* 25 புத்தகங்கள் எழுதியுள்ளார். அவற்றில் 14 நூல்கள் இவரது 65 வயதுக்கு மேல் வெளியிடப்பட்டவை. தற்கால பரிணாம வளர்ச்சி ஆராய்ச்சிக் கோட்பாடுகளுக்கும் உயிரியியல் சிற்றின கோட்பாட்டு வளர்ச்சிக்கும் இவரது ஆராய்ச்சிகள் வழிவகுத்தன.

* ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக 1953-ல் சேர்ந்தார். அங்குள்ள விலங்கியல் அருங்காட்சியகத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். 1975-ல் ஓய்வு பெற்ற இவர் பல்வேறு பத்திரிகைகளுக்கு 200-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார்.

* அமெரிக்க தேசிய அறிவியல் பதக்கம், பால்சன் பரிசு, ஹிஸ்டரி ஆஃப் சயின்ஸ் சொசைட்டியின் சார்ட்டன் பதக்கம், சர்வதேச உயிரியலுக்கான பரிசு என ஏராளமான பதக்கங்கள், விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார்.

* உயிரியலாளர், பரிணாம வளர்ச்சி ஆய்வாளர், இயற்கை இயலாளர் என பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட எர்னஸ்ட் மயர், 100 வயதை எட்டிய பிறகும் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார். 101 வயதில் (2005) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x