Published : 27 Jul 2015 10:28 am

Updated : 27 Jul 2015 10:28 am

 

Published : 27 Jul 2015 10:28 AM
Last Updated : 27 Jul 2015 10:28 AM

நாவலர் சோமசுந்தர பாரதியார் 10

10

விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் அறிஞருமான நாவலர் சோமசுந்தர பாரதியார் (Navalar Somasundara Bharathiar) பிறந்த தினம் இன்று (ஜூலை 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் (1879) பிறந்தார். இயற்பெயர் சத்தியானந்த சோமசுந்தரன். எட்டயபுரம் அரசியின் பராமரிப்பில் வளர்ந்தார். அரண்மனையில் பணியாற்றிவந்த சுப்பிரமணிய பாரதிக்கு நண்பரானார். இருவரும் இணைந்து பல நூல்களைக் கற்றனர். பாடல்கள் இயற்றினர். அரண்மனைக்கு வந்திருந்த ஈழப்புலவர் ஒருவர், இவர்கள் இருவருக்கும் ‘பாரதி’ என்ற பட்டத்தை வழங்கினார்.

l எட்டயபுரத்திலும், நெல்லை சிஎம்எஸ் கல்லூரி பள்ளியிலும் பயின்றார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. பட்டப் படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் இளநிலை சட்டப் படிப்பையும் முடித்தார்.

l வழக்கறிஞராகப் பணியாற்றிக்கொண்டே, முதுநிலை சட்டம் படித்து பட்டம் பெற்றார். சிறந்த வழக்கறிஞர் என்று புகழ்பெற்றார். ஆயிரக்கணக்கில் சம்பாதித்தவர் அதை விட்டுவிட்டு, வ.உ.சி.யின் அழைப்பை ஏற்று ரூ.100 சம்பளத்தில் அவரது சுதேசிக் கப்பல் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்.

l ஒத்துழையாமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பில் காந்தியடிகளைப் பின்பற்றியவர். நெல்லை, மதுரையில் காங்கிரஸ் கட்சி மாநாட்டைத் தலைமை ஏற்று நடத்தினார்.

l ‘என்னிடம் 2 சரக்கு கப்பலோடு, 3-வதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது’ என்று வ.உ.சி. பெருமிதத்துடன் இவரைக் குறிப்பிடுவார். வ.உ.சி., சுப்பிரமணிய சிவா மீதான வழக்குகளில் அவர்களுக்காக வாதாடினார்.

l காந்தியடிகளை முதன்முதலில் தமிழகத்துக்கு வரவழைத்து உரையாற்றச் செய்தார். தன் குடும்பத்தினரையும் விடுதலை இயக்கத்தில் பங்குபெறச் செய்தார். சுதந்திரப் போராட்டத்துக்கு நன்கொடையாக, குழந்தைகளின் நகைகளைக் கழற்றி காந்தியிடம் அளிக்கச் செய்தார். இந்தி எதிர்ப்பு மாநாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

l அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராக பணியாற்றினார். தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டார். தமிழ்க் கழகம் என்ற அமைப்பை நிறுவினார். ‘தசரதன் குறையும் கைகேயி நிறையும்’, ‘அழகு’, ‘சேரர் தாயமுறை’, ‘தமிழும் தமிழரும்’, ‘திருவள்ளுவர்’ உட்பட பல நூல்களையும், 5 ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ் இலக்கண இலக்கி யங்கள், அரசியல், வரலாறு, தமிழர் நாகரிகம், பண்பாடு, மொழி பெயர்ப்பு என நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.

l தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பாட்டியல் ஆகியவற்றுக்கு உரை எழுதினார். ‘நான் கண்ட சுப்பிரமணிய பாரதி’ என்ற நூலை எழுதினார். மதுரை அடுத்த உசிலங்குளத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான தொடக்கப்பள்ளியை நிறுவினார்.

l இவரது தமிழ்த் தொண்டைப் பாராட்டி ஈழநாட்டுப் புலவர் மன்றம் ‘நாவலர்’ என்ற பட்டத்தை வழங்கியது. திருவள்ளுவர் கழகம் ‘கணக்காயர்’ என்ற பட்டத்தையும், அண்ணாமலை பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டத்தையும் வழங்கியது.

l சமூக சீர்திருத்தங்களில் ஈடுபாடு கொண்டவர். சடங்குகள் இல்லாத திருமண விழாக்களை முன்னின்று நடத்தினார். தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் மதுரை மாவட்டத் தலைவராக செயல்பட்டார். தமிழுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் அருந்தொண்டுகள் ஆற்றிய நாவலர் சோமசுந்தர பாரதியார் 80 வயதில் (1959) மறைந்தார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

முத்துக்கள் பத்துவிடுதலை வீரர்சிறந்த தமிழ் அறிஞர்நாவலர் சோமசுந்தர பாரதியார்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

10

பாப்பா உமாநாத் 10

வலைஞர் பக்கம்
10

மே.வீ.வேணுகோபாலன் 10

வலைஞர் பக்கம்
10

ஹோமி சேத்னா 10

வலைஞர் பக்கம்