Published : 25 Jul 2015 11:24 AM
Last Updated : 25 Jul 2015 11:24 AM

ஒரு நிமிடக் கதை: டிவி

பக்கத்து பிளாட்டில் அந்த பாட்டி குடிவந்து சில மாதங்கள் ஆகிறது.

அவர் வீட்டில் எப்போதும் டிவி அலறிக்கொண்டு இருக்கும். காதைப் பொத்திக் கொள்ளாத குறையாக நான் நாள் முழுவதும் டென்ஷனில் இருப்பேன்.

இந்த சத்த அலர்ஜியால் நான் டிவி பார்ப்பதோ, ரேடியோ கேட்பதோ இல்லை.

சுத்தமாக விட்டுவிட்டேன் என்றே சொல்லலாம்!

கடந்த சில நாட்களாக என்ன நடந்ததோ தெரியவில்லை. பக்கத்து வீட்டில் இருந்து டிவி சத்தம் வரவே இல்லை.

என் கணவரிடம் அதை சொன்னேன். “என்னம்மா சொல்ற?... அவங்க வீட்டு டிவி ரிப்பேர் ஆயிருக்குமோ?... பாவம், அந்த பாட்டி என்ன செய் வாங்க?... டிவியை சரி செய்ய மெக்கானிக்கை அனுப்பவான்னு நான் போய் கேட்டு வரட்டுமா?” என்றார் அவர்.

“உங்களுக்கு என்ன பைத்தியமா?... அவங்க வீட்டு டிவி இரைச்சல் இல்லாம இப்பதான் நான் சந் தோஷமா இருக்கேன். இது உங்களுக்கு பொறுக்கலையா?” என்றேன் கோபமாக.

“அது இல்லைடி, பாவம் துணை இல்லாம இருக்காங்க. என்ன ஏதுன்னு தான் கேட்போமே?” பேசிக்கொண்டே இருக்கும் போது என் கணவர் சட்டையை மாட்டிக்கொண்டு வந்து நிற்க, என்னால் மறுப்பு எதுவும் சொல்ல முடியவில்லை. என் கணவர் முன் செல்ல பின் சென்ற நான் அவர் தயங்கி நிற்க, காலிங் பெல் சுவிட்சை அழுத்தினேன்.

அந்தப் பாட்டிதான் கதவை திறந்தார். எங்களைப் பார்த்ததும், “வாங்க, வாங்க...” என்று வரவேற்று ஷோபாவில் அமர சொல்லி விட்டு குடிக்க தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார்கள்.

“டீ, காபி எதாவது சாப்பிடறீங்களா?” என்று அந்த பாட்டி கேட்க, “அதெல்லாம் வேணாம்மா. கொஞ்ச நாளா உங்க டிவி சத்தம் கேட்கவே முடியலை. அதான் அதை ரிப்பேர் செய்ய ஆள் அனுப்பணுமான்னு கேட்டுட்டு போக வந்தோம்!” என்று என் கணவர் சொன்னார்.

அதைக்கேட்டு மெல்ல புன்னகைத்த அந்தப் பாட்டி, “என் வீட்டு டிவி ரிப்பேர் ஆகலைங்க. நல்லா தான் இருக்கு...” என்றார்.

பாட்டி சொன்னதை கேட்டதும் எங்கள் இருவருக்கும் குழப்பம். அதைப் புரிந்து கொண்ட பாட்டி, “வீட்ல ஒண்டியா இருந்த எனக்கு அந்த டிவி சத்தம்தான் சொந்த பந்தம். எங்கூட பலபேர் இந்த வீட்ல இருக்கிற மாதிரியும், நான் அனாதை இல்லேங்கற மாதிரியும் எனக்கு அந்த டிவி சத்தம் தான் தெம்பைக் கொடுக்கும். அதுக்காகத்தான் நான் டிவியை சத்தமா வைச்சு கேட்பேன்!”

“சரி, இப்ப என்னாச்சு... டிவி சத்தமே கேட்க மாட்டேங்குதே” என்று என் கணவர் கேட்டார்.

அதற்கு பாட்டி, “இந்த வருஷம் உங்க பையன் கந்தர்வ் பத்தாவது படிக்கிறான்னு கேள்விப்பட்டேன். அதான் நான் அனாதையா உணர்ந்தாலும் பரவாயில்லை, என்னால அவன் படிப்பு பாதிக்க கூடாதுன்னு டிவி வைக்கறதை விட்டுட்டேன். நீங்க இப்ப வார்த்தைக்கு வார்த்தை என்னை அம்மான்னு கூப்பிடறதைக் கேட்கும் போது நான் அனாதை இல்லைன்னு கொஞ்சம் சந்தோஷமா இருக்கு தம்பி!” என்றார்.

“நாங்களெல்லாம் இருக்கற வரை சத்தியமா நீங்க அனாதை இல்லைம்மா!” என்று என் கணவர் சொல்லி முடிக்கும் முன், நான் தாவிச் சென்று பாட்டியை கட்டி அணைத்துக் கொண்டேன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x