

தொலைபேசி கண்டுபிடித்ததாக அறியப்படும் அலெக்சாண்டர் கிரகாம் பெல் பன்முகத்தன்மை கொண்ட மாமனிதர். காது கேளாதோருக்கு பேச்சுப் பயிற்சி அளிக்க சங்கம் தொடங்கியது; பார்வையற்றோருக்குப் ப்ரெயில் முறையைக் கண்டுபிடித்த ஹெலன் கெல்லருக்கு உதவிகள் புரிந்தது; ஒலியியல் அடிப்படையில் உலக ஆங்கிலம் என்பதை உருவாக்க முயற்சித்தது; கிராமஃபோன், போட்டோஃபோன், ஆடியோ மீட்டர், மெட்டல் டிடெக்டர் போன்ற கருவிகளைக் கண்டுபிடித்தது - இப்படிக் கிரகாம் பெல்லின் சாதனைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். ஆசிரியர், பொறியாளர், ஆய்வாளர், அறிவியல் அறிஞர் எனப் பல அவதாரங்கள் எடுத்தவர். பெல்லின் அசாத்தியமான ஆற்றலின் தொடக்கப் புள்ளி இயலாமைதான் என்றால் நம்ப முடிகிறதா?
கிரகாம் பெல்லின் தாயும் மனைவியும் பிறவியிலேயே காது கேளாதவர்கள். ஒலியைப் பல கோணங்களில் ஆராய பெல்லுக்கு உந்துசக்தியாக அமைந்தது அவர்களுடைய இயலாமைதான். அதுமட்டுமா, பெல்லின் தந்தை, தாத்தா, மாமா ஆகிய அனைவரும் குரல் உறுப்புப் பயிற்சி, பேச்சுத் திருத்த முறை, காதுகேளாதோருக்குக் கல்வி கற்பித்தல் நிபுணர்கள். ஆகவே, குரல் ஒலிகளை வெவ்வேறு வழிகளில் மீட்டுருவாக்குவதில் பெல்லுக்கு இயல்பாகவே ஆர்வம் எழுந்தது.
இளம்பிராயத்தை பிரிட்டனில் கழித்த பெல், 1871-ல் அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் மாநிலத்தில் பாஸ்டன் நகரில் குடியேறினார். அங்குதான் தொடர் ஆய்வுகளுக்குப் பிறகு, 1876-ல் தொலைபேசியைக் கண்டுபிடித்தார். உடனடியாகத் தனது கண்டுபிடிப்புக்குப் புத்தாக்க உரிமையும் பெற்றார். அதன் பிறகு, பிலெடெல்பியாவில் நடைபெற்ற நூற்றாண்டு விழா கண்காட்சியில் தொலைபேசியைக் காட்சிக்கு வைத்தார். அங்கு திரண்ட பொதுமக்கள் தொலைபேசியை வியந்து பாராட்டினர். தன் கண்டுபிடிப்புக்கான உரிமைகளை 1,00,000 டாலருக்கு ‘வெஸ்டர்ன் யூனியன் டெலிகிராஃப் கம்பெனி’க்கு வழங்க பென் முன்வந்தார். ஆனால், அத்தொகை அதிகம் என அந்நிறுவனம் மறுத்துவிட்டது. அதனால், பெல்லும் அவரது நண்பர்களான கார்டினர் கிரீனி ஹப்பார்ட், தாமஸ் சாண்டர்ஸ், தாமஸ் வாட்சன் இணைந்து, ஜூலை 9, 1877-ல் தங்களுடைய சொந்த நிறுவனமான ‘பெல் தொலைபேசி நிறுவனத்தை’ உருவாக்கினார்கள். தொலைபேசி நிறுவனத்தைத் திறந்த அடுத்த இரண்டு நாட்களில், தன் நண்பர் ஹப்பார்ட்டின் மகள் மேபல் கார்டினரை பெல் திருமணம் செய்துகொண்டார். நிறுவனத்தில் தனக்கென 10 பங்குகள் மட்டும் வைத்துக்கொண்டு, காதல் மனைவிக்குக் கல்யாணப் பரிசாக 1,487 பங்குகளை அளித்தார். ஆரம்ப காலத்தில் பல்வேறு இடர்பாடுகளைச் சந்திக்க நேரிட்டாலும், பின்னாளில் பெல் தொலைபேசி நிறுவனம் காலத்தை வென்று நின்றது. இந்த நிறுவனம்தான் இன்றைய ‘அமெரிக்கன் டெலிபோன் மற்றும் டெலிகிராஃப் கம்பெனி’யின் முன்னோடி. பெல்லின் கண்டுபிடிப்பைப் பாராட்டி பிரெஞ்சு அரசு அவருக்கு ‘லீஜன் ஆஃப் ஹானர்’ விருது வழங்கிக் கவுரவித்தது.