

சோவியத் ரஷ்யாவை சேர்ந்த இயற்பியலாளரும், நோபல் பரிசு பெற்றவருமான இகார் டேம் (Igor Tamm) பிறந்த தினம் இன்று (ஜூலை 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் (1895) பிறந்தவர். தந்தை பொறியியலாளர். மின் உற்பத்தி நிலையங்கள், நீரேற்று நிலையங்கள் போன்றவற்றை அமைத்து நிர்வகித்தும் வந்தார். வசதியான குடும்பத்தில் பிறந்த இகார் டேம், மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டப் படிப்பை முடித்தார்.
l கல்வி நிறுவனங்களில் ஆசிரியப் பணியைத் தொடங்கியதோடு, தனது உயர் கல்வியையும் தொடர்ந்தார். முதலில் ஆசிரியர் உதவியாளர், அதைத் தொடர்ந்து ஆசிரியர், விரிவுரையாளர், பேராசிரியர் எனப் படிப்படியாக உயர்ந்தார்.
l இயல்-கணித அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். மாஸ்கோ லெபடெவ் இயற்பியல் கழகத்தில் கோட்பாட்டு இயற்பியல் துறைத் தலைவராக 1934 முதல் 1971 வரை பணியாற்றினார்.
l திடப்பொருட்களின் மேற்பரப்பில் காணப்படும் வினோத வடிவிலான எலெக்ட்ரான் பிணைப்பு, திடப்பொருட்களில் சிதறுண்ட ஒளியின் குவான்டம் கோட்பாடு ஆகியவை குறித்து இவரது ஆரம்பகால ஆராய்ச்சிகள் இருந்தன.
l திரவப் பொருட்களின் வழியாக காமா கதிர்கள் கடந்து செல்லும்போது ஒளி உமிழப்படுகிறது என்பதை 1934-ல் கண்டறிந்தார். பிறகு சார்பியல் கோட்பாடு, குவான்டம் இயக்கவியல் பற்றிய ஆராய்ச்சிகளில் இவரது கவனம் திரும்பியது. அணுத் துகள்களின் எதிர்வினைகளை விளக்கும் முறையை வகுத்தார். தனது ஆராய்ச்சிகளின் அடிப்படையில் அவ்வப்போது கட்டுரைகளை வெளியிட்டு வந்தார்.
l 1940-50ம் ஆண்டுகளில் ‘சோவியத் தெர்மோநியூக்ளியர் குண்டு’ திட்டத்தில் இணைந்து பணியாற்றினார். ஹைட்ரஜன் குண்டு தயாரிப்பதற்கான கோட்பாட்டுப் பிரிவின் தலைவராக பணிபுரிந்தார். முதல் ஹைட்ரஜன் குண்டுவெடிப்பு சோதனை வெற்றிக்குப் பிறகு தன் பதவியை ராஜினாமா செய்தார்.
l கதிர்வீச்சு தொடர்பாக ‘டேம் டான்காஃப் அப்ராக்ஸிமேஷன்’ என்ற எளிய கணக்கீட்டு முறையைக் கண்டறிந்து அறிமுகப்படுத்தினார்.
l மின்காப்புப் பொருள் வழியாக மின்சுமையுடன் கூடிய பொருள் கடந்து செல்லும்போது மின்காந்தக் கதிர்வீச்சு வெளிப்படுகிறது என்பதைக் கண்டறிந்த 3 சோவியத் ஆராய்ச்சியாளர்களில் இவரும் ஒருவர். ‘செரன்கோவ் வாவிலோவ் விளைவு’ எனப்படும் அந்த கண்டுபிடிப்புக்காக அவர்களுடன் சேர்ந்து 1958-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசை இகார் டேம் பகிர்ந்துகொண்டார். இதன்மூலம், எலெக்ட்ரான், புரோட்டான் போன்ற துகள்களின் திசைவேகத்தை கணக்கிட முடியும்.
l சோவியத் ரஷ்யா, போலந்து, அமெரிக்கா போன்ற நாடுகளின் அறிவியல் அகாடமி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘ஆர்டர் ஆப் தி ஹீரோ ஆப் சோஷலிஸ்ட் லேபர்’ என்ற வாழ்நாள் சாதனையாளர் விருது, ஸ்டாலின் விருது, லாமனாசாவ் தங்கப் பதக்கம் உட்பட பல பரிசுகள், விருதுகள், கவுரவங்களைப் பெற்றவர். இவர் ஒரு நாத்திகவாதி.
l இறுதிவரை அறிவியல், கணித ஆராய்ச்சிகளில் ஈடுபட்டும், கட்டுரைகளை எழுதியும் வந்த இகார் டேம் 76 வயதில் (1971) மறைந்தார்.