

ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெற்றவுடன் அதைப் பொறுப்பாக திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையில் சேர்த்துவிடுகிறார் திருச்சி புள்ளம்பாடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தயாபரன். மொத்தமாகச் சேரும் தொகை அந்த ஆண்டில் திருக்குறள் ஒப்பிக்கும் மாணவர்களுக்குப் பரிசாக வழங்கப்படுகிறது. நேற்று, இன்றல்ல.. 17 ஆண்டுகளாக இதை ஒரு கடமையாக நினைத்துச் செய்கிறார் தயாபரன்.
‘‘எனக்கு தமிழ்ப் பற்று அதிகம். ஆசிரியர் பணியில் சேர்வதற்கு முன்பே, அதாவது 20 வயதிலிருந்தே கிராமத்து மாணவர்களுக்கு திருக்குறள், மூதுரை, ஆத்திச்சூடி, நல்வழி, கொன்றை வேந்தன் ஆகியவற்றை மாலை வேளையில் இலவசமாக கற்பித்து வருகிறேன். கடந்த 40 ஆண்டுகளாக இப்பணியைச் செய்து வருவதால், பணியில் இருந்து ஓய்வு பெற்ற உணர்வே எனக்கு வந்ததில்லை.
ஓய்வு பெற்ற பிறகு, முதல் மாதம் கிடைத்த ஓய்வூதியத்தைப் பார்த்தபோது, ‘இது எதற்கு நமக்கு பாரமாக?’ என்று தோன்றியது. அதனால், திருக்குறளுடன் என் மகன் திருமூலநாதன் பெயரையும் சேர்த்து திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையை 1997-ம் ஆண்டு தொடங்கினேன்.
அதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் திருக்குறள் ஒப்பிக்கும் போட்டியை நடத்தி வருகிறேன். 1997-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை நெல்லை ஆயக்குடியிலும், 2001 முதல் 2009-ம் ஆண்டு வரை திருச்சி மாவட்டம் துறையூரிலும், 2010 முதல் 2012 வரை புள்ளம்பாடியிலும், 2013-ம் ஆண்டு திருச்சியிலும் இந்த போட்டிகளை நடத்தினேன்.
போட்டியில் ஒரு மாணவர் 500 அல்லது 1330 திருக்குறள்களை சீர்களைச் சிதைக்காமல், தடுமாற்றமின்றி, சரியான உச்சரிப்புடன் ஒப்பிக்க வேண்டும். 1330 குறள் ஒப்பிப்பவர்களுக்கு தலா ரூ.1,500 மற்றும் விருது வழங்கப்படும்.
சிறுவர்களை மிகவும் சிரமப்படுத்தக் கூடாது என்பதால் இன்னொரு முறையிலான போட்டியும் உண்டு. அதாவது முதல் தவணையாக 500 குறள்களை ஒப்பித்துவிட்டு ரூ.500 பரிசு வாங்கிக்கொள்ளலாம். அடுத்த ஆண்டு மீதமுள்ள 830 குறள்களை ஒப்பித்துவிட்டு ரூ.900 பரிசு வாங்கிக்கொள்ளலாம்.
கடந்த 17 ஆண்டுகளாக நடத்தப்பட்டுவரும் இந்த போட்டிகளில் இதுவரை 161 மாணவர்கள் ரொக்கப் பரிசு, விருது பெற்றுள்ளனர்.
இப்போட்டிக்காக யாரிடமும் நன்கொடை எதுவும் பெறுவதில்லை. எனது ஓய்வூதியம் முழுவதையும் இதற்காக செலவிடுகிறேன். காந்தியடிகள் கற்பித்த எளிமையான வாழ்க்கை வாழ்வதால் எனக்கு பெரிதாக செலவுகள் இல்லை’’ என்கிறார்.
ஓய்வு பெற்றவர்கள், ‘நமக்குதான் வயதாகிவிட்டதே’ என்று சாய்வு நாற்காலி போட்டுப் படுக்காமல், ஏதோவொரு கடமையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம். உடல்நலத்தையும் கவனித்தபடி அந்த கடமையை முடிந்தவரை சிறப்பாகச் செய்யலாம். அந்த கடமையும் பொறுப்புணர்ச்சியுமே உங்களுக்கு புதுத் தெம்பைத் தரும்!
(மீண்டும் நாளை சந்திப்போம்)