

1935-ல் மகாராஷ்டிராவில் நடைபெற்ற யேவ்லா கருத்தரங்கில் பேசிய அம்பேத்கர், “நான் இந்துவாகப் பிறந்தேன். ஆனால், நிச்சயம் இந்துவாக இறக்க மாட்டேன்” என அறிவித்தார். அதற்கு, “நாம்தான் இந்து மதத்தில் இல்லையே, நாம் வர்ணம் அற்றவர்களாயிற்றே! நாம் இந்துவாக இருந்தால்தானே மதம் மாற வேண்டும்? ஒடுக்கப்பட்டவர்கள் இந்துக்கள் அல்ல. அவர்களுடைய குருதி முழுக்கத் திராவிடர் இனத்தாலானது” என்று அம்பேத்கரிடம் துணிச்சலாக எதிர்வினை ஆற்றியவர் ரெட்டைமலை சீனிவாசன்.
பறையர் மகாஜன சபையைத் தோற்றுவித்த ரெட்டைமலை சீனிவாசன், ‘பறையன்’ எனும் வாரப் பத்திரிகை நடத்தினார். சிறந்த வழக்கறிஞராகச் செயல்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக உரிமைகளுக்காகக் குரல்கொடுத்தவர் ரெட்டைமலை சீனிவாசன். பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் கோழியாளம் எனும்
சிற்றூரில் பறையர் சமூகத்தில் 7 ஜூலை 1859-ல் பிறந்தார் ரெட்டைமலை சீனிவாசன். கோழியாளத்திலிருந்து இவருடைய விவசாயக் குடும்பம் வறுமை, சாதியக் கொடுமைகள் காரண மாகத் தமிழகத்தின் பல ஊர்களுக்கு இடம்பெயர நேர்ந்தது. இருப்பினும், பள்ளிப் படிப்பை முடித்து ஓர் ஆங்கிலேயர் நிறுவனத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார் ரெட்டைமலை சீனிவாசன்.
தீண்டாமை முறையைப் பின்பற்றாத ஆங்கிலேயர்களின் பண்பாட்டைப் பாராட்டினார் சீனிவாசன். ஆகவேதான், விடுதலைப் போராட்ட வீரராக இருந்தபோதும் ஆங்கில மொழியும் ஆங்கிலேயரும்தான் ஒடுக்கப்பட்ட மக்களின் உற்ற நண்பர்கள் என்றார். கிழக்கிந்திய கம்பெனியில் வேலை பார்த்தபோது, இந்தியாவில் தலைவிரித்தாடும் தீண்டாமைக் கொடுமைகளை எப்படியாவது ஆங்கிலேயருக்குப் புரியவைக்க அவர் முயன்றார்.
அந்த முயற்சியில் தென் ஆப்பிரிக்கா சென்ற போது நீதிமன்றம் ஒன்றில் காந்தியடிகளுக்குச் சட்டரீதியான மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. ரெட்டைமலை சீனிவாசனிடமிருந்துதான் காந்தி தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டு திருக்குறளின் உன்னதத்தைப் புரிந்துகொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.இந்தியா திரும்பிய ரெட்டைமலை சீனிவாசன், 1923-ல் மெட்ராஸ் சட்டசபை உறுப்பினர் ஆனார்.
அதன் பிறகு, ஒடுக்கப்பட்ட மக்கள் தீண்டாமைக் கொடுமையிலிருந்து விடுதலை பெற இடைவிடாது செயல்பட்டார். பொது வீதிகளிலும் பொது இடங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரவேசிக்கக் கூடாது என யாரேனும் தடை விதித்தால் உடனடியாக அவர்கள் ரூ. 100 அபராதம் செலுத்த வேண்டும் எனும் தீர்மானத்தை 1927-ல் நிறைவேற்றினார். தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளைக் களைய 1919-ல் தொழிலாளர் நலன் துறையைத் தோற்றுவித்ததில் அவரது பங்கு மகத்தானது. பிரிட்டிஷ் அரசு அவருக்கு ‘திவான் பஹதூர்’ பட்டம் வழங்கியது.