Published : 04 Jul 2015 11:02 AM
Last Updated : 04 Jul 2015 11:02 AM

ஜெயகாந்தனோடு பல்லாண்டு 38- ஜெயகாந்தனும், விவேகானந்தரும்!

ஜெயகாந்தனைப் பற்றி எழுது வதற்கு இதற்கு முன்பும் எனக்கு இரண்டு வாய்ப்புகள் வந்தன. 1974-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ‘கண்ணதாசன்’ மாதப் பத்திரிகை ஜெயகாந்தனின் பிறந்தநாளையொட்டி சிறப்பு மலராக வெளிவந்தது.

கண்ணதாசனின் உதவியாளரும், அவரது நெருங்கிய உறவினருமான இராம.கண்ணப்பன், அந்த மலரில் ஜெயகாந்தனைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுமாறு கேட்டுக் கொண்டார்.

அந்தக் கட்டுரையை, தனித் தனிப் ‘பாராவாக, ஒவ்வொன்றும் அவரது ஓர் அம்சத்தைக் குறிப்பாக எழுதி, ‘ஜெயகாந்தன் - எனது குறிப்புகள்’ என்று தலைப்பிட்டு அனுப்பினேன். ஆளுநர் கே.கே.ஷா, ஆர்.கே.கண்ணன், சரஸ்வதி ராம்நாத், ஏ.ஏ.ஹக்கீம் ஆகியோரும் அதில் எழுதியிருந்தார்கள். கண்ணதாசன் தனது தலையங்கத்தில் ஜெயகாந்தனை வெகுவாகப் புகழ்ந்து எழுதியிருந்தார்.

சமீபத்தில், ஜெயகாந்தன் மறைவுக் குப் பிறகு பலரும் எழுதிய கட்டுரைகளில் ஒரு கட்டுரையில் சுந்தரராமசாமி ஜெய காந்தனைப் பார்த்து, ‘‘நீங்கள் விவேகானந்தர் மாதிரி இருப்பதாக யாராவது சொல்லியிருக்கிறார்களா?’’ என்று கேட்டதாக ஒரு குறிப்பு கண்ணில்பட்டது.

கண்ணதாசன் பத்திரிகையில் எனது கட்டுரையில் நான் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன்: ‘‘பரமசிவன், பாண்டவருள் ஒருவர், ஓர் இந்திய இளவரசன், விவேகானந்தர், குருவிக் காரன் என்று வேஷங்கள் போடலாம். அப்படி ஆகிருதி!’’

‘கண்ணதாசன்’ பத்திரிகையில் வந்த என் கட்டுரை பலராலும் பாராட்டப்பட்டது.

‘‘நீ எழுதியிருக்கிற ஒவ்வொரு பாரா வையும் தனித் தனி அத்தியாயங் களாகவே விரித்து எழுதலாம்!” என்று நண்பர் தேவபாரதி கூறினார்.

உதாரணமாக, சினிமாவுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு பற்றி, ‘‘சில விரதங்கள் இருந்தால்தான் சினிமா உலகம் அவரை அழைக்க முடியும். அங்கே என்னவோ நடக்கிறதே, அதற்கு அவரைப் பலி கொள்ள முடியாது!” என்று எழுதியிருந்தேன். இந்த ஒரு விஷயம் பற்றி இன்னும் நிறைய எழுதியிருக் கலாம். ஆனால், ‘‘அங்கே என்னவோ நடக்கிறதே…” என்று சுருக்கமாக முடித் துக் கொண்டேன்.

அப்புறம் 1985-ம் ஆண்டு, ஜெயகாந் தனை நாங்கள் சந்தித்து 25 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக, ஜவ் வாது மலையில் உள்ள ஜம்னாமரத்தூரில் ஒரு முகாம் நடத்தினோம். அந்த ஊர் வனத்துறை உயர்நிலைப் பள்ளியில் எங்களுக்கும் ஜேகேவுக்கும் அறிமுகமான நண்பர் பிரின்ஸ் நீல் தலைமையாசிரியராக இருந்தார். அதுவுமின்றி ஜம்னாமரத்தூர் ஒரு மலை வாசஸ்தலம் போல் இருந்ததும் அதற்குக் காரணமாயிற்று.

பல எழுத்தாள நண்பர்கள் அதில் கலந்துகொள்ள வந்திருந்தனர். பஸ்ஸில் இருந்து இறங்கிய ஜெயகாந்தனை, பழங்குடி மக்கள் பலவகையான வாத்திய முழக்கங்களோடு வரவேற்று அழைத்துச் சென்றனர்.

மூன்று நாட்கள் நடந்த அந்த முகா மில் பீமா அருவி, காவலூரில் உள்ள விண்வெளியை ஆராயும் தொலை நோக்கு நிலையம் ஆகியவற்றை சென்று பார்த்தோம். அத்திப்பட்டு என்கிற ஊரில் இருந்த உண்டு உறைவிடப் பள்ளியிலும் ஜெயகாந்தன் சென்று உரையாற்றினார். ஜெயகாந்தனைப் பற்றி ஒரு கருத்தரங்கமும் நடத்தினோம்.

அந்தக் கருத்தரங்கில் வாசிப்பதற்காக நான் ‘ஜெயகாந்தனும் எனது பாவனை களும்’ என்கிற தலைப்பில் ஒரு கட்டு ரையை எழுதினேன். கருத்தரங்கில் அதை யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

“சரி, கட்டுரை நன்றாக இல்லை போல் இருக்கிறது!” என்று கருதி, அந்தக் கட்டுரை எழுதிய நோட்டை நான் எங்கள் பழைய வீட்டின் பரணிலே போட்டுவிட்டேன்.

1994-ம் ஆண்டு, ஜெயகாந்தனின் மணிவிழா மலர் தாயரிக்கப்பட்டபோது, அதற்காக, ‘ஜெயகாந்தன் - எனது குறிப்பு கள்!’ என்கிற கட்டுரையில், விட்டுப் போனதாக நான் கருதிய சில குறிப்பு களை எழுதிக் கொடுத்தேன். அதில் சில பகுதிகளைக் கீழே தருகிறேன்.

‘ஒரு மாபெரும் தந்தையின் பரிவும் பாசமும் அவருக்குத் தன் பாத்திரங்களின் மீது உண்டு. மகள்களும், மனைவிகளும் சகோதரிகளும் கூட விற்கப்படுகிற சந்தையில், அவர் தன் பாத்திரங்களை விற்க மறுக்கிறார். அவரது பாத்திரப் படைப்பின் மாதிரிகளைக் கண்மூடித் தனமாகப் பின்பற்றியவர்கள் உண்டே தவிர, அந்தக் காரியத்தில் இயல்பாகவே அவருக்கு இருந்த ஆழ்ந்த பொறுப் புணர்ச்சியையும், அந்தப் பாத்திரங்களை படைக்கும்போதே, சமூகத்தின் போலிச் சான்றாண்மைகள் தொடுக்கக் கூடிய குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களைக காத்துப் படைக்கும் பாங்கையும் பயின்றாரில்லை. ஒரே ஒருமுறை, சிலர் சிபாரிசு செய்ததனால், வேறு ஒரு பாதையில் தனது ஒரு தாய்ப் பாத்திரம் திரும்பினால் என்ன ஆகும் என்பதையும் அவரே சிருஷ்டித்துக் காட்ட நேர்ந்தது. அதுதான் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’

எந்நிலையிலும் தனது அதிகாரங் களைத் துஷ்பிரயோகம் செய்யாதவர். வரம்புகளை நன்கு அறிந்து, அவற்றைத் தவறாது மதித்து ஒழுகுவதால் பிறரது தலையீடு என்கிற வில்லங்கம் இன்றி அவரது சுதந்திரம் தனித்து விளங்குகிறது. அவரது சுயேச்சையும் கட்டுப்பாடுகளும் மனம் போனபோக்கில் அல்லாமல் ஆழ்ந்த உள் உணர்விலும், அலசிப் பார்த்துத் தெளிந்த தெளிவிலும் விளைவனவாகும்.

‘‘தனது தலையைச் சுற்றி ஒரு பிரமை இருப்பதை அவரே நன்கு உணர்ந்திருக்கிறார். ‘அது நமதில்லை தெரியுமோ?’ என்று மேலான அடக்கத் துடன் கூறுவார். ‘‘அதை பிடுங்கி எறியவும் முடியாது!’’ என்பார். ‘‘அதனால்தான் அது தலைக்கு வெளியில் இருக்கிறது!’’ என்று சொல்லி சிரிப்பார்.

மணி விழா மலருக்குக் கட்டுரை அனுப்பிய மறுநாளே, சிங்கம்புணரியில் இருந்து பல்லாண்டுகளாக வெளி வந்துகொண்டிருக்கும் ‘தொடரும்’ பத்திரிகையில் வெளியிட, ஜெயகாந்த னைப் பற்றி ஒரு பக்க அளவுக்கு ஒரு கட்டுரை தருமாறு நண்பர்கள் கேட்டார்கள்.

அப்போது எனக்கு, எல்லாவற்றையும் எழுதிவிட்டதாகவும், இனி என்ன எழுதுவது என்றும் ஒரு திகைப்பு ஏற்பட் டது. நல்ல காலமாக 9 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி எவராலும் கவனிக்கப் படாமல், நான் தூக்கி பரணிலே போட்டுவிட்ட அந்தக் கட்டுரை ஞாபகம் வந்தது.

அதை எடுத்து கொஞ்சம் செப்ப னிட்டு அனுப்பி வைத்தேன். அதில் இருந்து ஒரு பக்க அளவுக்கு, எந்தப் பகுதியையாவது வெட்டி எடுத்துப் பிரசுரித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். ஜெயகாந்தனுக்கும் ஒரு நகல் அனுப்பினேன்.

அதில் ஜெயகாந்தனைப் பற்றி இப்படி எழுதியிருந்தது இப்போது நினைவுக்கு வருகிறது.

‘அவருக்கும் எங்களுக்கும் உள்ள உறவைப் பல முறை நாங்கள் குரு சிஷ்ய சாயலில் கருதியும், கூறியும் பார்த்தோம். இத்தகைய ஆபத்துகளை அவர் அறியாதவரா என்ன? நாங்கள் குரு என்று பணிந்தால், அதனை அவர் உடனே ‘சத்குரு’ என்று வேறு யாருக்கோ பார்சல் செய்துவிடுவார். குரு சிஷ்ய உறவு முறைகள் இறுதியில் எய்தும் கோளாறுகளில் இருந்து தப்பிப்பதில் அவர் சதாகாலமும் சர்வ ஜாக்கிரதையாகவே இருந்தார்.’

இவ்வாறெல்லாம் நான் ஏற்கெனவே வெள்ளோட்டமாக எழுதிப் பயின்றது இந்தத் தொடரை எழுதுவதற்கு எனக்கு உறுதுணையாக இருந்தது.

- அடுத்த வாரம் நிறைவுறும்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pisakuppusamy1943@gmail.com

முந்தைய அத்தியாயம்:>ஜெயகாந்தனோடு பல்லாண்டு 37- புறப்பட்டு போன ஜே.கே.!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x