Published : 12 Jun 2015 10:58 AM
Last Updated : 12 Jun 2015 10:58 AM

பத்மினி 10

பிரபல நடிகையும், நாட்டியக் கலைஞருமான ‘நாட்டியப் பேரொளி’ பத்மினி (Padmini) பிறந்த தினம் இன்று (ஜூன் 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l கேரள மாநிலம் திருவனந்தபுரம் பூஜாபுரம் பகுதியில் திருவாங்கூர் அரச குடும்பத்தில் (1932) பிறந்தவர். 4-வது வயதில் பரதநாட்டியம் பயின்றார். 10 வயதில் அரங்கேற்றம் நடந்தது. இவரைப் போலவே இவரது அக்கா லலிதா, தங்கை ராகிணியும் நடனக் கலைஞர்கள், நடிகைகள். மூவரும் ‘திருவாங்கூர் சகோதரிகள்’ என்று புகழ்பெற்றவர்கள்.

l நாட்டிய நட்சத்திரங்களாக சினிமா உலகுக்கு 1948-ல் அறிமுகமாகினர். தொடர்ந்து 3 ஆண்டுகாலம் இவர்களது நாட்டியம் இடம்பெறாத படங்களே இல்லை. மூவரிலும் பத்மினியே உலகப் புகழ்பெற்ற நாட்டியத் தாரகையாகவும், நடிகையாகவும் மிளிர்ந்தவர். குச்சிப்புடி, மோகினியாட்டத்திலும் வல்லவர்.

l ‘கல்பனா’ என்ற இந்தித் திரைப்படத்தில் முதன்முதலாகத் தோன்றினார். ‘வேதாள உலகம்’ படத்தில் நடன மங்கையாகவும், ‘மணமகள்’ படத்தில் நடிகையாகவும் தமிழில் அறிமுகமானார்.

l தமிழ்த் திரையுலகின் மூவேந்தர்கள் என்று போற்றப்பட்ட எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி ஆகியோருடன் முதன்முதலாக மாறி மாறி ஒரே தருணத்தில் நடித்த நடிகை பத்மினி மட்டுமே. அந்த மூவருடன் இவர் சேர்ந்து நடித்த படங்கள் 1953, 1956, 1957, 1958, 1960, 1971 ஆகிய ஆண்டுகளில் ஒருசேர வெளிவந்தன.

l ‘பணம்’ திரைப்படத்தில் (1952) முதன்முதலாக சிவாஜியுடன் ஜோடி சேர்ந்தார். சிவாஜி - பத்மினி ஜோடி தமிழ்த் திரையுலகில் இணையற்ற ஜோடியாகப் பிரபலமடைந்தது. ஏறக்குறைய 60 திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்தித் திரையுலகையும் தன் அழகாலும் அற்புத நாட்டியத்தாலும் கொள்ளை கொண்டார். அசோக்குமார், ராஜ்கபூர், தேவ் ஆனந்த், சஞ்சீவி குமார் உள்ளிட்ட அனைத்து பிரபல கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார்.

l ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் வைஜெயந்தி மாலாவுடன் இவர் ஆடும் போட்டி நடனம் வெகு பிரபலம். அதன் படப்பிடிப்பில், இவர் ஆடியபோது முழங்கால் உராய்ந்து ரத்தம் வழிந்தது. ‘ஆட்டத்தின் விறுவிறுப்பு குறைந்துவிடக் கூடாது என்பதற்காக, வலியைப் பொறுத்துக்கொண்டு ஆடினேன்’ என்று கூறியுள்ளார் பத்மினி. தொழிலில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர்.

l மலையாளம், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளிலும் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏறக்குறைய 64 ஆண்டுகள் நாட்டிய உலகில் புகழ்பெற்று விளங்கி, ‘நாட்டியப் பேரொளி’ என்ற பட்டம் பெற்றவர்.

l ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘வியட்நாம் வீடு’, ‘தூக்குத் தூக்கி’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘ராணி சம்யுக்தா’ போன்ற படங்கள் இவரது அபார நாட்டியத் திறன், நடிப்பாற்றலை பறைசாற்றுபவை.

l சிறந்த நடிகைக்கான விருது, சிறந்த பரதநாட்டியக் கலைஞர் விருது, கலைமாமணி, ஃபிலிம்பேர் விருது பெற்றவர். திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவில் குடியேறினார். அங்கு நாட்டியப் பள்ளி நடத்தியதோடு அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்துவந்தார். தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.

l பரதநாட்டியக் கலையால் புகழின் உச்சிக்குச் சென்றவர். தன் நடிப்பாலும், நாட்டியத்தாலும் ரசிகர்களின் உள்ளங்களில் இன்றும் வாழ்ந்துவரும் ‘நாட்டியப் பேரொளி’ பத்மினி 74 வயதில் (2006) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x