Published : 30 Jun 2015 10:12 AM
Last Updated : 30 Jun 2015 10:12 AM

மைக் டைசன் 10

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க குத்துச்சண்டை வீரரும், வெற்றிகரமான ஹெவிவெய்ட் சாம்பியனுமான மைக் டைசன் (Mike Tyson) பிறந்தநாள் இன்று (ஜூன் 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளினில் (1966) பிறந்தார். தந்தை கைவிட்டதால் தாய் வேலை செய்து காப்பாற்றினார். இவரது 16 வயதில் தாய் இறந்தார். பாக்ஸிங் மேலாளரும் பயிற்சியாளருமான கஸ்டி அமாடோ இவரது சட்டப்பூர்வ பாதுகாவலராக மாறினார்.

l குழந்தைப் பருவம் பெரும்பாலும் குற்றச் சூழலில்தான் கழிந்தது. அவரும் பலமுறை குற்றம் செய்து பிடிபட்டார். 13 வயதுக்குள் 38 முறை கைது செய்யப்பட்டார். நியூயார்க் ஜான்ஸ்டவுன் பள்ளியில் படித்தார். சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ஆலோசகரும் குத்துச்சண்டை வீரருமான பாபி ஸ்டூவர்ட், இவரது குத்துச்சண்டை திறனை அறிந்து பயிற்சி அளித்தார்.

l சீர்திருத்தப் பள்ளியில் இருந்து வெளியே வந்த பிறகு கெவின் ரோனியும் பயிற்சி அளித்தார். கலிபோர்னியா மருத்துவக் கழகத்தில் மருத்துவ உதவியாளராக இருந்த இவரது அண்ணன் இவருக்குப் பல விதங்களில் ஆதரவாக இருந்தார்.

l டைசன் 1982-ல் ஜூனியர் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 1985-ல் நியூயார்க்கின் அல்பனீ நகரில் முதல்முறையாக தொழில்முறை விளையாட்டைத் தொடங்கினார்.

l ஒரே ஆண்டில் 15 போட்டிகளில் விளையாடினார். தனது முதல் 28 போட்டிகளில் 26-ல் வென்றார். கைதேர்ந்த வீரர்களையும் எதிர்த்து சண்டையிடும் திறன் அதிகரித்தது. தொடர் வெற்றிகள் ஊடகங்களின் கவனத்தைக் கவர்ந்தது. தலைசிறந்த ஹெவிவெய்ட் சாம்பியனாகவும் மிளிர்ந்தார்.

l சட்டப்பூர்வ பாதுகாவலர் கஸ்டி அமாடோவின் மறைவு (1985) இவரது வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் 1986-ல் உலக ஹெவிவெய்ட் சாம்பியன் பட்டம் வென்று ‘உலகின் இளம் சாம்பியன்’ என்ற பெருமையைப் பெற்றார்.

l இவரது கைகளின் வேகம், துல்லியம், ஆற்றல், கால தீர்மானம் ஆகியவை அபாரமானவை. தாக்குதல் திறனும் மிக சக்தி வாய்ந்தது என்கின்றனர் நிபுணர்கள்.

l ஒரே நேரத்தில் உலக பாக்ஸிங் அசோசியேஷன், உலக பாக்ஸிங் கவுன்சில், உலக பாக்ஸிங் பெடரேஷன் என 3 அமைப்புகளின் முக்கிய பட்டங்களையும் வென்ற முதல் ஹெவிவெய்ட் சாம்பியன் இவர். ரசிகர்களால் ‘இளம் வெடி’, ‘இரும்பு மைக்’ என போற்றப்படுகிறார். மயங்கவைக்கும் அடிகளால் 19 தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளையும் 12 போட்டிகளை முதல் சுற்றிலும் வென்றார்.

l 1992 ல் சிறை சென்றவர், இஸ்லாம் மதத்துக்கு மாறினார். 1995-ல் விடுதலையான பிறகு மீண்டும் குத்துச் சண்டைப் போட்டிகளில் கலந்துகொண்டார். பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தொடர் தோல்விக்குப் பிறகு 2006 ல் குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

l பத்து ஆண்டுகாலம் புகழின் உச்சியில் இருந்து சாதனை வீரராகத் திகழ்ந்தார். திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வீடியோ கேம்களில் தோன்றியுள்ளார். ‘அண்டிஸ்பியூட்டட் ட்ரூத்’ என்ற நூலை 2013-ல் வெளியிட்டார். தற்போது திரைப்படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x