Published : 30 Jun 2015 11:53 AM
Last Updated : 30 Jun 2015 11:53 AM

திரைப் பார்வை: இன்ஸைட் அவுட்

எதிரே இருப்பவரின் மனதில் என்ன இருக்கிறது என்று வியந்ததுண்டா?

மனிதர்களின் தலைக்குள்ளிருந்து அவர்களை இயக்கும் உணர்ச்சிகளுக்கு உருவமளித்து படம் பிடித்து காட்டுகிறது சமீபத்தில் பிக்சர் நிறுவன தயாரிப்பில் வெளியான திரைப்படமான 'இன்ஸைட் அவுட்'.

'டாய் ஸ்டோரி', 'அப்' போன்ற பிக்சரின் குழந்தைகளையும் பெரியவர்களையும் மயக்கும் உணர்வுபூர்வமான ஹிட் திரைப்படங்களை எழுதி இயக்கிய பீட் டாக்டர் தான் இந்தத் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

தன் தலைக்குள் கேட்கும் உணர்ச்சிகளின் சின்னச் சின்ன குரல்களின் வழிநடத்தலில் இயங்கும் 11 வயது ரைலி (Riley) என்ற சிறுமியை பற்றிய கதை 'இன்ஸைட் அவுட்'. சந்தோஷம், சோகம், கோபம், வெறுப்பு, பயம் என்னும் ஐந்து உணர்ச்சிகளின் உருவங்களான ஜாய் (Joy), ஸாட்னெஸ் (Sadness), ஆங்கர் (Anger), டிஸ்கஸ்ட் (Disgust), ஃபியர் (Fear) தான் படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள். தலைமைச் செயலகத்துக்கு ஒவ்வொரு நினைவையும் மகிழ்ச்சி என்றோ, சோகமானது என்றோ பதிவு செய்கின்றன இந்த உணர்ச்சிகள்.

பிறந்து வளர்ந்த மின்னஸோட்டா நகரிலிருந்து சான் ஃப்ரான்சிஸ்கோவுக்கு இடம்பெயர்கின்றது ரைலியின் குடும்பம். மாற்றங்களை ரைலி ஏற்றுக் கொள்ள தொடங்கும் அதேநேரத்தில் தலைமைச்செயலகத்தில் ஜாயும், ஸாட்னெஸ்ஸும் தொலைந்து போய்விடுகின்றன.

ஜாய் இல்லாமல் ரைலி மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்று அறிந்த மற்ற உணர்ச்சிகள், சூழ்நிலையை தங்களுக்கு தெரிந்தவாறு சமாளிக்கின்றன. ஜாய், ஸாட்னெஸ் இல்லாத ரைலியின் வாழ்க்கை ஒருபுறம், தலைமைச் செயலகத்துக்கு திரும்ப ஜாய், ஸாட்னெஸ் எடுக்கும் முயற்சிகள் மறுபுறம் என இரண்டு தடங்களில் சுவாரஸ்யமாக பயணிக்கிறது இந்தப் படம்.

சிந்தனையோட்ட ரயில் (Train of thought), இருண்ட ஆழ்மனது பகுதி (The subconscious), ஹாலிவுட் பாணியில் கனவு தயாரிப்பு நிலையம் (Dream Productions) என ஏகப்பட்ட உருவகங்களை கதையில் கொடுத்திருக்கிறார் பீட்.

வண்ணமயமான, உயர்தர அனிமேஷன் காட்சிகள் கண்களுக்கு விருந்து. ரைலியின் அம்மா தன் கணவரிடம் ஜாடை காட்டும் காட்சிகளில் திரையரங்கு சிரிப்பொலியில் அதிர்கிறது. படத்தின் வேகம் அவ்வப்போது குறைவது போல தோன்றினாலும், வசனங்களின் ஆழத்தை யோசித்துணர இந்த அவகாசம் தேவைப்படுகிறது.

உணர்ச்சிகளின் கதாப்பாத்திரங்கள், ரைலியின் கற்பனை தோழனாக வரும் பிங்-பாங், ரைலியின் பெற்றோர் என அனைத்து கதாப்பாத்திரங்களும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தத் திரைப்படம் சைக்காலஜி மாணவர்களின் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

ஸாட்னெஸ் இல்லாமல் தான் மட்டுமே ரைலியை மகிழ்வாக வைத்திருக்க முடியாது என்று ஜாய் உணர்வது நம் அனைவருக்குமான வாழ்க்கை பாடம்.

துடிப்பான அனிமேஷன் காட்சிகளும், ஆழ்ந்த கருத்தும் கொண்ட 'இன்ஸைட் அவுட்', நிச்சயமாக குழந்தைகளுக்கான திரைப்படம் மட்டுமல்ல; அதையும் தாண்டி பெரியவர்களும் ரசிக்கும்படியாக இருப்பதுதான் முத்திரை.

நம் பதின்பருவத்தை கண் முன்னே மீண்டும் எடுத்துவரும் இன்ஸைட் அவுட் - உங்கள் குழந்தைக்கும், உங்களுக்குள் இருக்கும் குழந்தைக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x