

நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து கவிஞரும், 20-ம் நூற்றாண்டின் சிறந்த இலக்கியப் படைப்பாளிகளில் ஒருவருமான வில்லியம் பட்லர் ஈட்ஸ் (William Butler Yeats) பிறந்த தினம் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l அயர்லாந்தின் டப்ளின் அருகே உள்ள சாண்டிமவுன்ட் என்ற இடத்தில் (1865) பிறந்தார். தந்தை பிரபல ஓவியர். ஆரம்பக் கல்வியை வீட்டிலேயே பயின்றார். அயர்லாந்து நாட்டுப்புறக் கதைகள் உட்பட நிறைய கதைகளை அம்மா கூறுவார். புவியியல், வேதியியல் பாடங்களை அப்பா கற்றுக்கொடுத்தார். சிறு வயதில் அப்பா இவரை பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று இயற்கையை ரசிக்கவைத்தார்.
l குடும்பம் சிறிது காலம் இங்கிலாந்தில் தங்கியிருந்தது. லண்டனில் வீட்டின் அருகில் உள்ள அப்பாவின் ஸ்டுடியோவில்தான் பெரும்பாலான நேரத்தை கழித்தார். அங்கு பல கலைஞர்கள், எழுத்தாளர்களை சந்தித்தார். அப்போதுதான், கவிதை எழுதவும் தொடங்கினார்.
l முதல் கவிதையும் ஒரு கட்டுரையும் டப்ளின் பல்கலைக்கழக இதழில் வெளியானது. டப்ளினில் உள்ள மெட்ரோபாலிடன் கலைக் கல்லூரியில் பயின்றார்.
l கவிதைகள் படிப்பதில் மிகவும் நாட்டம் கொண்டிருந்தார். கிரேக்க பண்டைய கதைகள், நாட்டார் கதைகளையும் விரும்பிப் படித்தார். அதன் தாக்கம் இவரது ஆரம்பக்கட்ட படைப்புகளில் எதிரொலித்தன. தத்துவ ரீதியான கவிதைகளை எழுதினார்.
l முதல் கவிதைத் தொகுப்பு 17 வயதில் வெளிவந்து மிகவும் பிரபலமானது. எட்மண்ட் ஸ்பென்சர், ஷெல்லி ஆகியோரின் தாக்கம் அதில் காணப்பட்டது. பிறகு, தத்துவங்களைக் கைவிட்டு, தன் கவிதைகளில் யதார்த்தத்தை பின்பற்றினார். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் படைப்புகளில் தேசியவாதம், செவ்வியல், எதிர்வினைப் பழமைவாதம் என பல கொள்கைகளைப் பின்பற்றினார்.
l வாழ்நாள் முழுவதும் ஆன்மிகம், அமானுஷ்யம், இறை உணர்தல், வானியல் சாஸ்திரம் ஆகியவற்றில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். இவைபற்றி ஏராளமான புத்தகங்கள் படித்தார். ‘தி கோஸ்ட் கிளப்’ என்ற அமானுஷ்ய ஆய்வு அமைப்பில் உறுப்பினராக சேர்ந்தார்.
l அயர்லாந்து இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் என்று புகழப்படுபவர். மிகச் சிறந்த நாடக ஆசிரியரும்கூட. லேடி கிரிகோரி, எட்வர்ட் மார்ட்டின் மற்றும் பலருடன் இணைந்து ‘அபே தியேட்டர்’ என்ற நாடக அரங்கை உருவாக்கினார். ஆரம்பத்தில் சில ஆண்டுகள் அதன் தலைமை நாடக ஆசிரியராகப் பணியாற்றினார்.
l ‘தி கவுன்டஸ் கேத்லீன்’, ‘தி லேண்ட் ஆஃப் ஹார்ட்ஸ் டிஸையர்’ உள்ளிட்ட பல மிகச் சிறந்த நாடகங்களை எழுதியுள்ளார். 1922-ல் செனட் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இப்பதவியை 2 முறை வகித்துள்ளார்.
l இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1923-ல் வென்றார். நோபல் பரிசு பெற்ற பிறகும் மிகச் சிறந்த படைப்புகளை படைத்த வெகு சில இலக்கியவாதிகளில் இவரும் ஒருவர்.
l ‘தி டவர்’, ‘தி விண்டிங் ஸ்டேர் அண்ட் அதம் போயம்ஸ்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் மிகவும் புகழப்பட்டன. தனித்துவம் வாய்ந்த கவிஞரும் அயர்லாந்து - இங்கிலாந்து இலக்கியத்தின் தூணாகக் கருதப்பட்டவருமான வில்லியம் பட்லர் ஈட்ஸ் 73 வயதில் (1939) மறைந்தார்.