இன்று அன்று | 1976 ஜூன் 16: சுவெடோ எழுச்சி

இன்று அன்று | 1976 ஜூன் 16: சுவெடோ எழுச்சி
Updated on
1 min read

ஆப்பிரிக்காவில் கோலோச்சிய கல்வி நிறவெறியை எதிர்த்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கருப்பினப் பள்ளி மாணவர்கள் ஒன்றுகூடி சுவெடோ (Soweto) நகர வீதிகளில் கோஷங்கள் எழுப்பியபடி வீறு நடைபோட்டனர். அகிம்சை வழியில் திரண்டு வந்த அப்பேரணியைக் கலைக்கக் கண்ணீர்ப் புகை குண்டு வீசினார் வெள்ளை காவல் துறை அதிகாரி ஒருவர். பதற்றமான சூழலைத் தந்திரமாகப் பயன்படுத்தி, நான்கு மாணவர்களைச் சுட்டுத் தள்ளியது ஆங்கிலேயக் காவல்படை. வெகுண்டெழுந்த மாணவர் படை, போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது. தொடர்ந்து ஒரு வருடத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட அப்போராட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் எழுச்சியாளர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

சுவெடோ கிளர்ச்சி எனும் இந்நிகழ்வுதான் ஆப்பிரிக்க நிறவெறிக்கு எதிரான முதல் மக்கள் போராட்டம்.

தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகானஸ்பர்க் அருகில் 1948-ல் 65 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தெற்கு ஆப்பிரிக்க அரசாங்கத்தால் செயற்கையாகக் கட்டி எழுப்பப்பட்ட நகரியம் சுவெடோ. வேலை தேடி இடம் பெயர்ந்த ஆயிரக் கணக்கான புறநகர ஆப்பிரிக்கர்களைச் சுரண்ட கூடாரம்போல வடிவமைக்கப்பட்ட நகரம் இது. 1950-களில் இங்கு பண்டு கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டது. பண்டு திட்டத்தின்படி மாணவர்கள் அவர்களுடைய தோல் நிறத்தின் அடிப்படையில் மட்டுமே பள்ளியில் அனுமதிக்கப்பட்டனர். இட நெரிசலான வகுப்பறைகளில் தகுதியற்ற ஆசிரியர்களிடம் தரமற்ற பாடத்திட்டத்தைக் கற்க கருப்பினக் குழந்தைகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். வெள்ளையர்களுக்கோ தரமான கல்வி இலவசமாக வழங்கப்பட்டது.

1975-ல் ஆங்கில வழிக் கல்வி மற்றும் ஆஃப்ரிகான்ஸ் முறை திணிக்கப்பட்டது. இதனால், விரக்தியடைந்த கருப்பின மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சுவெடோ போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆயிரக் கணக்கான ஆப்பிரிக்க இளைஞர்களைப் பலி கொடுத்த இந்த எழுச்சி, நிறவெறியை ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் உத்வேகத்தை அடிமை நிலையிலிருந்த கருப்பின மக்களுக்கு ஊட்டியது. தெற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இளைஞர்கள் பெருந்திரளாக ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸ் போர்ப் படையில் இணைந்தனர். அதே வேளையில், சிவில் சமூகக் குழுக்களும் ஆப்பிரிக்க அரசாங்க உறுப்பினர்களும் மாற்றத்துக்கான உடனடித் தேவையை உணரத் தொடங்கினர். 1994 ஜூன் 16-ல் சுவெடோ நினைவு தினத்தை முன்னிட்டு “அன்று வீறுகொண்டு எழுச்சியில் ஈடுபட்ட இளைஞர்கள்தான் இன்றைய தலைவர்கள்” என்றார் நெல்சன் மண்டேலா. சமூக நீதியை மீட்டெடுக்கவும் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் தங்கள் இன்னுயிர் நீத்த மாணவர்களை நினைவுகூரும் நாள் இன்று.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in